பிலிப்பியர்களுக்கு பொலிகார்ப் எழுதிய நிருபம்

Based on the English Translation of Alexander Roberts and James Donaldson. You can access the English version by clicking here (NewAdvent.org).

ஆசிர்வதிக்கப்பட்ட பொலிகார்ப், திருச்சபை மூப்பர்கள், பிலிப்பியில் அமைந்திருக்கும் கடவுளின் திருச்சபை மற்றும் அனைவருக்கும்: கருணை உங்கள் மேல் என்றும் நிலவட்டும். சர்வ வல்லமையுமுள்ள தேவனிடமிருந்தும், நம்முடைய இரட்சகரும், கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வரும் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக, அவை பன்மடங்காகப் பெருகுவதாக.

1 ம் அதிகாரம் – பிலிப்பியர்களின் புகழ்

எம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால், உங்களுடன் சேர்ந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் நீங்கள் உண்மையான அன்பின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கிறீர்கள் (தேவனால் காட்டியபடி), உங்கள் பாணியில் நீங்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களோடு இணைத்திருக்கிறீர்கள். அவர்கள் பரிசுத்தவான்களின் ஆபரணங்களாய் ஜொலிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் எம் தேவனும், எம் கர்த்தராகிய இயேசுக் கிறீஸ்துவும் தெரிந்துகொள்ளப்பட்ட மணிமகுடங்களாக விளங்குகிறார்கள். பிலிப்பியர் 1:5 இல் கூறப்பட்டது போல, உங்கள் விசுவாசத்தின் உறுதியான வேர் நிலையானது. அது அக்காலம் முதல் இக்காலம் வரை வலுவாக நிலைத்திருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறீஸ்துவுக்கு கனியைத் தருகிறது. அவர் நம்முடைய பாவங்களுக்காக மரணத்தை எதிர்கொண்டார். ஆனால், தேவன் கல்லறையின் கட்டுகளைத் தளர்த்தி அவரை மரித்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார். நீங்கள் அவர் மேல் நிறைந்த அன்பு கொண்டுள்ளீர்கள். அவரைக் காணாமலே விவரிக்க முடியாத, நிறைந்த மகிழ்ச்சியுடன் நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்கள். (பேதுரு (1:8) அந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ள பலர் விரும்புகிறார்கள்; கிருபையினாலேயே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள், உங்கள் செயல்களால் அல்ல. (எபேசியர் 2:8-9) இது எம் ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்துவின் சித்தத்தினால் அன்றி வேறொன்றாலும் ஆவதில்லை.

2 ம் அதிகாரம் – நல்லொழுக்கத்திற்கான அறிவுரை

உங்கள் அரைக்கச்சையைக் கட்டியவர்களாக, (1 பேதுரு 1:13; எபேசியர் 6 :14) நீங்கள் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, கர்த்தரை வழிபடுங்கள். வீணான, வெறும் பேச்சையும், மற்றையோர் செய்யும் பிழையையும் சுட்டிக்காட்டுவதை விட்டு, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழவைத்த, தேவனை மகிமைப்படுத்துவீர்களாக. (1 பேதுரு 1:21) அவருடைய வலது புறத்தில் ஒரு சிம்மாசனம் உள்ளது. பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்தும் அவரது ஆட்சிக்கு உட்பட்டது. (1 பேதுரு 3:22; பிலிப்பியர் 2:10 ). அனைத்து சக்திகளும் அவருடைய சக்திக்கு உட்பட்டதே. அவர் சீவியரையும், மரித்தோரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் வருவார். (அப்போஸ்தலர் நடவடிக்கை 17:31). நாம் அவருடைய சித்தத்தின் படி நடப்போமானால், அவருடைய கற்பனையின் படி நடந்து கொள்வோமானால், அவர் நேசித்ததை நாமும் நேசிப்போமானால், எல்லா அநீதி, பேராசை, பணப்பேராசை, கெட்ட வார்த்தைகள், பொய்கள், பொய்சாட்சி சொல்தல் ஆகியவற்றிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்வோமானால், கிறிஸ்துவை மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுப்பியவர் நம்மையும் அவ்வாறே உயிர் எழுப்புவார். அத்தோடு, நாம் தீமையை, தீமையால் எதிர்கொள்ளாமலும், குற்றத்தை குற்றத்தால் எதிர்கொள்ளாமலும், அடித்தால் திரும்பி அடிப்பதும், சாபத்திற்கு சாபம் கொடுப்பது போன்றவற்றை (1 பேதுரு 3:9) அறவே விட்டொழித்து, எம் கர்த்தர் எமக்குப் போதித்தவைகளை மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும். நீங்கள் குற்றவாளிகள் என்று மற்றயோர் தீர்ப்பிடுவது தவறென்றால், நீங்கள் மற்றயோரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள் (மத்தேயு 7:1) மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்; கருணை காட்டுங்கள், இதனால் உங்களுக்கு கருணை காட்டப்படும் (லூக்கா 6:36) நீங்கள் அளக்கும் அளவின் படியே உங்களுக்கும் அளக்கப்படும் (மத்தேயு 7:2; லூக்கா 6:38) மீண்டும் கூறுகிறேன், எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், அதேபோல் நீதியின் காரணமாக துன்புறுத்தப்படுபவர்களும் பாக்கியவான்கள், ஏனென்றால் தேவனுடைய இராச்சியம் அவர்களுடையதே.

3 ம் அதிகாரம் – தனிப்பட்ட தகுதியின்மையை வெளிப்படுத்துதல்

சகோதரர்களே, நீதியைப் பற்றிய இந்த விடயங்களை நான் எழுதுகிறேன். ஏனென்றால், நான் எதையும் எனக்கென்று எடுத்துக்கொள்வதால் அல்ல, ஆனால் நீங்கள் என்னை அவ்வாறு செய்ய அழைத்தபடியால் தான் இதைப்பற்றி சொல்கிறேன். நானாக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும், ஆசீர்வதிக்கப்பட்ட, புனித பவுலின் ஞானத்துக்கு ஈடாக மாட்டார்கள். (2 பேதுரு 3:15). அவர், உங்களிடையே இருந்தபோது, அந்தக் காலத்தில் உயிருடன் இருந்தவர்களுக்கு சத்தியத்தின் போதனைகளை துல்லியமாகவும், உறுதியாகவும் கற்பித்திருந்தார். அவர் உங்கள் மத்தியில் இல்லாதபோது, அவர் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை நீங்கள் கவனமாகப் படித்தால், அதில் உங்களுக்கு தரப்பட்ட விசுவாசத்தின் ஊடாக உங்களைக் கட்டியெழுப்பும் வழிமுறைகளை நீங்கள் கண்டறிந்திருப்பீர்கள். நம்பிக்கையால் தொடங்கி, நம் தேவனுக்கும், கிறீஸ்துவுக்கும் மேல் உள்ள அன்புக்கும், எம் அயலாரின் மேல் வைத்துள்ள அன்புக்கு முன்பிருந்த அந்த விசுவாசமே எம் எல்லோருக்கும் தாயாய் விளங்குகிறது. (கலாத்தியர் 4:26) ஆகவே, இந்த அருட்கொடைகளை யாரேனும் அவர்கள் உள்ளத்திலே கொண்டிருந்தால், அவர்கள் நீதியின் கட்டளையை நிறைவேற்றியவர்கள் ஆவர். ஏனெனில், அன்பு கொண்டவர்கள் அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் முற்றிலும் விலகியே இருப்பர்.

4 ம் அதிகாரம் – எளிமையான அறிவுரைகள்

பணத்தின் மேலுள்ள பேராசையே அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேராகக் காணப்படுகிறது (1 தீமோத்தேயு 6:10) இந்த உலகத்துக்குள் நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இங்கிருந்து எதனையும் கொண்டு போகப் போவதுமில்லை (1 தீமோத்தேயு 6:7) என்பதை நன்றாக மனதில் இருத்தி, நீதியின் கவசத்தால் எம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்; (எபேசியர் 6:11). முதலாவதாக, கர்த்தர் இட்ட கட்டளைகளைப் பின்பற்றி நாம் நடப்போமாக. அடுத்தது, உங்கள் மனைவிமாருக்கு, கர்த்தரால் கொடுக்கப்பட்ட விசுவாசத்துக்கு அமைவாக நடக்கக் கற்றுக்கொடுங்கள். அத்தோடு, தூய்மையான அன்போடும், எல்லா விதத்திலும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு தங்கள் கணவன்மாரையும் மற்றும் அனைவரையும் கற்பு நெறி தவறாது நேசிக்கும் படியாகவும், தங்கள் பிள்ளைகளை கடவுளுக்குப் பணிந்தும் அவரைப் பற்றிய அறிவைப் புகட்டி வளர்க்கவும், கர்த்தருடைய விசுவாசத்தை மதிக்கிற விதத்தில் விவேகமுள்ளவர்களாக இருக்க விதவைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும், இடைவிடாது செபிக்கவும் கற்பித்திடுவோம். (1 தெசலோனிக்கேயர் 5:17). அவர்கள் அனைவரையும், அனைத்து விதமான அவதூறுகளிலிருந்தும், தீயவர்களிடமிருந்தும், பொய்யான சாட்சிகளிடமிருந்தும், பணப் பேராசையிலிருந்தும் மற்றும் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தூர விலகியிருக்கக் கற்றுக்கொடுப்போம். அவர்கள் தேவனுடைய பலிப்பீடங்கள் என்ற சிந்தனையோடு வாழக் கற்றுக்கொடுப்போம். அவர் எல்லாவற்றையும் தெளிவாக உணர்கிறார், மேலும் அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. எந்த விதமான விடயங்கள், பிரதிபலிப்புகள் அல்லது இதயத்தில் நாம் கொண்டுள்ள எந்த விதமான இரகசியங்களும் அவரிடம் மறைப்பது எவ்விதத்திலும் சாத்தியமாகாது.

5 ம் அதிகாரம் – திருத்தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் கன்னிப்பெண்களின் கடமைகள்

தேவன் கேலி செய்யப்படுவதில்லை என்பதை நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். (கலாத்தியர் 6:7) அவருடைய கட்டளைக்கும் மகிமைக்கும் நாம் தகுதியானவர்களாக நடக்க வேண்டும். அவ்வாறே, திருத்தொண்டர்களும் அவருடைய நீதியின் பார்வைக்கு முன் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும். எனவே தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிந்து நடக்க வேண்டும், மனிதர்களுக்கு அல்ல. அவர்கள் அவதூறு செய்பவர்களாகவோ, இரு நாக்கு கொண்டவர்களாகவோ இருக்கக் கூடாது (1 தீமோத்தேயு 3:8) பணத்தை நேசிப்பவர்களாகவோ இருக்கக்கூடாது, ஆனால் எல்லாவற்றிலும் மிதமானவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், உழைப்பாளிகளாகவும், கர்த்தருடைய சத்தியத்தின்படி நடப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். அனைவருக்கும் அவரே மேலான சேவகர் (மத்தேயு 20:28 ). இந்த தற்போதைய உலகில் நாம் அவருக்கு விருப்பமுள்ளவர்களாக நடப்போமானால், எதிர்காலத்திலும் அவரது விருப்பத்துக்கு ஏற்றவர்களாக இருப்போம். அதன்படி, அவர் நம்மை மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழச்செய்வார் என்றும், நாம் அவருக்கு ஏற்றவர்களாக வாழ்ந்தால், அவரது ஆட்சியில் எமக்கும் பங்குண்டு என்றும் அவர் நமக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். (2 தீமோத்தேயு 2:12). அதேபோல், இளைஞர்களும் எல்லாவற்றிலும் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும், குறிப்பாக, தூய்மையைக் காத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் சகல விதமான தீமைகளிலிருந்தும் அவர்கள் தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து காம இச்சைகளில் இருந்தும் அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் சம்பந்தமான இச்சைகள் ஆன்மாவுக்கு விரோதமானவை. (1 பேதுரு 2:11). விபச்சாரத்தில் ஈடுபடுவோரும், அட்டூழியத்தில் ஈடுபடுவோரும், சிலைகளையும், விக்கிரகங்களையும் வழிபடுவோரும், சுய இன்பம் மற்றும் சம பாலினப் புணர்ச்சி போன்ற இழிவான செயல்களால் தங்களைத் துஷ்பிரயோகம் செய்வோரும், படைப்புக்களை உதாசீனம் செய்வோரும் தேவனுடைய இராச்சியத்துக்கு எப்போதும் உகந்தவர்களாக இருக்க மாட்டார்கள். (1 கொரிந்தியர் 6: 9-10 ). அதே போலத்தான், திடமற்றோரும், தகுதியற்ற விஷயங்களைச் செய்வோரும் இவர்களுக்குள் அடங்குவர். ஆகையால், எம் தேவனுக்கும், கர்த்தராகிய கிறீஸ்துவுக்கும் கீழ்ப்படிவது போல, திருச்சபை மூப்பர்களுக்கும், திருத்தொண்டர்களுக்கும் கீழ்ப்படிவது அவசியம். அது போலவே, கன்னிப்பெண்களும் குற்றமற்றவர்களாகவும், தூய்மையான மனதுடையவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

6 ம் அதிகாரம் – திருத்தொண்டர்கள், மற்றும் ஏனையோரின் கடமைகள்

திருத்தொண்டர்கள், அனைவரிடமும் இரக்கமுள்ளவர்களாகவும், இரக்கக் குணம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும், நாடோடிகள் போல் வாழ்பவர்களை மீண்டும் தங்களிடம் கொண்டு வந்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும், நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், விதவைகள், அனாதைகள், ஆதரவற்ற பிள்ளைகளை உதாசீனம் செய்யாமலும், மற்றும் ஏழைகளை புறக்கணியாமலும், கடவுளுக்கும் மனிதனுக்கும் ஏற்றதான அனைத்தையும், இயன்றவரை நன்மைகளை செய்ய வேண்டும் (ரோமர் 12:17; 2 கொரிந்தியர் 8:31).
அனைத்து விதமான கோபங்களிலிருந்து விலகியிருத்தல் வேண்டும். அத்தோடு, அவமரியாதை செய்தல், அநீதியாகவும், அபாண்டமாகவும் தீர்ப்பிடுதல், மற்றும் அனைத்து விதமான பேராசைகளிலிருந்தும் எம்மைக் காத்துக் கொள்ளல், எவருக்கும் எதிராக தீய அறிக்கையை ஏற்படுத்தாமல் இருத்தல், அவசர முடிவுகளை மேற்கொள்ளாதிருத்தல், மற்றும் நீதிக்குப் பங்கம் விளைவிக்காதிருத்தல் போன்றவற்றோடு, நாம் அனைவரும் பாவத்துக்கு உட்பட்டவர்கள் என்பதை நன்றாக மனதில் கொண்டு வாழ வேண்டும். கர்த்தர் எமது பாவங்களை மன்னிக்கும்படி நாம் அவரிடம் மன்றாடுகிறோம். அப்படியானால், நாமும் மற்றயோர் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டும் (மத்தேயு 6: 12-14). ஏனென்றால், நாம் எமது கர்த்தரதும், தேவனதும் கண்களுக்கு முன் நிற்கின்றோம், நாம் அனைவரும் கிறிஸ்துவின் தீர்ப்பிற்கு முன் நின்று ஒவ்வொருவரும் அவரவரைப் பற்றி கணக்கு கொடுத்தாக வேண்டும் (ரோமர் 14: 10-12; 2 கொரிந்தியர் 5:10).ஆகவே, அவர் நமக்குக் கட்டளையிட்டதைப் போல், நமக்கு சுவிசேஷத்தைப் போதித்த அப்போஸ்தலர்களைப் போல், கர்த்தருடைய வருகையை முன்பே அறிவித்த தீர்க்கதரிசிகள் எமக்குக் கற்பித்தவாறு, நாமும் பயபக்தியுடன் அவருக்கு சேவை செய்வோமாக. நல்லவற்றை பின்பற்றுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். தீமைகளிலிருந்தும், போலியான சகோதரத்துவம் மற்றும் கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை சொல்லி ஏமாற்றும் வேடதாரிகள் மற்றும் தவறான வழிகளில் மனிதரை இட்டுச்செல்வோர் போன்றவர்களிடம் நாம் மிகவும் கவனமாக இருப்பதோடு, அப்படிப்பட்ட துர்க்குணம் உள்ளவர்களிடம் இருந்து நாம் எப்போதும் விலகியே இருக்க வேண்டும்.

7 ம் அதிகாரம் – நுண்ணறிவாளர் சித்தாந்தத்தை தவிர்த்து, உபவாசத்திலும் செபத்திலும் ஈடுபடுங்கள்

இயேசு கிறிஸ்து சரீரத்தினால் ஆனவர் என்று ஒப்புக்கொள்ளாத எவரும் இயேசுவுக்கு விரோதமானவராவர் (1 யோவான் 4: 3) மற்றும் சிலுவையின் சாட்சியத்தை ஒப்புக்கொள்ளாதவன் சாத்தானின் ஊழியனாவான்; கர்த்தருடைய போதனைகளை தன் காம இச்சைகளுக்கு பயன்படுத்துபவனும், உயிர்த்தெழுதலையும், நடுத்தீர்ப்பையும் மறுதலிப்பவனும் சாத்தானுக்கு பிறந்தவன் ஆவான். ஆகையால், அனைவரும் தத்தம் தற்பெருமை மற்றும் போலியான மற்றும் தவறான கோட்பாடுகளை கைவிட்டு, யூதா 3 இல் கூறப்பட்டது போல், ஆரம்பத்திலே நமக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தைக்குத் மீண்டும் திரும்புவோமாக. செபத்தில் ஒன்றித்தவர்களாகவும் (1 பேதுரு 4: 7) உபவாசத்தில் தொடர்ந்து ஈடுபடுபவர்களாகவும், அனைத்தையும் ஆண்டு, வழிநடத்தும் எம் தேவனிடம் நம்மைப் பாவச் சோதனைகளில் இருந்து காப்பாற்றும்படி மன்றாடுவோமாக, (மத்தேயு 6:13; மத்தேயு 26:41). கர்த்தர் அருளியது போல்: ஆன்மா துடிப்புள்ளதாக இருக்கிறது, ஆனால் சரீரம் பலவீனமாக இருக்கிறது. (மத்தேயு 26:41; மாற்கு 14:38).

8 ம் அதிகாரம் – நம்பிக்கையையும் பொறுமையையும் என்றும் கைவிடாதீர்கள்

ஆகவே, நாம் என்றும் எமது நம்பிக்கையில் நிலைத்திருப்போம். நீதியில் நிலைத்திருக்க ஆர்வமுடன் இருப்போம். அதற்காகவே இயேசு நமது பாவங்களுக்காக (1 பேதுரு 2 :22) சிலுவையிலே உயிர் நீத்தார். அவர் எந்த பாவமும் செய்யவில்லை, அவருடைய வார்த்தைகளில் வஞ்சகமும் காணப்படவில்லை, (1 பேதுரு 2:22). ஆனால் நாம் அவரில் ஒன்றித்திருக்க அவர் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார் (1 யோவான் 4: 9). எனவே, அவர் பெயரால் நாம் துன்பம் அடைய நேர்ந்தால், அவர் கடைபிடித்த பொறுமையை நாமும் பின்பற்றுபவர்களாக இருப்போமாக; (அப்போஸ்தலர் பணி (5:41;1 பேதுரு 4:16) அவருடைய பெயருக்காக, அவரை மகிமைப்படுத்துவோம். (1 பேதுரு 2: 21 ) அவர் தன்னையே நமக்கு உதாரணமாகக் காட்டியுள்ளார். என்றும் நாமும் அதை அவ்வாறே விசுவாசிப்போமாக.

9 ம் அதிகாரம் – பொறுமை பற்றிய தெளிவுறுத்தல்

எனவே நீங்கள், நீதியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, உங்கள் கண்களால் நீங்கள் கண்டதுபோல் அனைத்து விடயங்களிலும் பொறுமையைக் கடைபிடிக்கும்படி நான் உங்கள் அனைவரையும் மிகவும் வினயத்துடன் கேட்டுக்கொள்கிறேன். புனித இக்னேஷியஸ் (Ignatius), சோசிமஸ் (Zosimus), மற்றும் ரூஃபஸ் (Rufus) போன்றோரிடம் நீங்கள் கண்டது மட்டுமல்லாமல், உங்களிடையே வாழும் மற்றயவரைப் போலவும், பவுலிடமும், ஏனைய அப்போஸ்தலர்களிடமும் நீங்கள் கண்டதைப் போலவும் நீங்கள் பொறுமையைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். இவர்கள் எவரும் வீணெ இயங்கவில்லை (பிலிப்பியர் 2:16; கலாத்தியர் 2: 2) ஆனால் விசுவாசத்திலும் நீதியிலும் அவர்கள் இயங்கினர். அவர்கள் இப்போது கர்த்தருடைய சந்நிதியில் அவரின் பிரசன்னத்தில் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்களும் அவரோடு துன்பங்களை அனுபவித்தார்கள். அத்தோடு, அவர்கள் இந்த உலகத்தை நேசிக்கவில்லை, மாறாக, எமக்காக மரித்தவரை நேசித்தார்கள். எமக்காகவே அவர் தேவனால் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார்.

10 ம் அதிகாரம் – நல்லொழுக்கத்தைப் பற்றிய அறிவுரை

ஆகையால், இவற்றில் உறுதியாக இருங்கள், கர்த்தருடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். விசுவாசத்தில் உறுதியாகவும் என்றும் மாறாமலும் இருங்கள். சகோதரத்துவத்தை நேசியுங்கள், (1 பேதுரு 2:17). ஒருவரோடொருவர் இணைந்திருங்கள், சத்தியத்தில் பிணைக்கப்பட்டவர்களாய், தாம்பத்திய உறவில் ஏற்படும் பிணைப்பினால், கர்த்தருடைய தாழ்ச்சியை வெளிப்படுத்துவதில் உதாரணமாய் இருங்கள். ஒருவரையும் வெறுத்து ஒதுக்காதீர்கள். நீங்கள் நன்மை செய்ய விரும்பும் போது அதை பிற்போடாதீர்கள். ஏனென்றால் தர்மம் செய்வது உங்களை மரணத்தில் இருந்து விடுவிக்கிறது (தோபித் 4:10, தோபித் 12: 9) நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (1 பேதுரு 5: 5). உங்கள் நடத்தை பிற மதத்தவர் மத்தியில் குற்றமற்றதாய் இருத்தல் வேண்டும் (1 பேதுரு 2:12) உங்கள் நற்செயல்களுக்காக நீங்கள் பாராட்டுக்களைப் பெறுவதோடு, கர்த்தர் உங்கள் நிமித்தம் அவதூறுக்கு உட்பட மாட்டார். கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவனுக்கு ஐயோ கேடு! (ஏசாயா 52: 5) ஆகவே, அனைவருக்கும் நிதானத்தைக் கற்றுக் கொடுங்கள், அதை உங்கள் சொந்த நடத்தையிலும் வெளிப்படுத்துங்கள்.

11 ம் அதிகாரம் – வலன்ஸ் குறித்து வருத்தத்தை வெளிப்படுத்துதல்

வலென்ஸயிட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன். காரணம், ஒரு காலத்தில் அவர் உங்கள் மத்தியில் ஒரு திருத்தொண்டராக இருந்தார். ஏனென்றால் [திருச்சபையில்] அவருக்கு வழங்கப்பட்ட இடத்தை அவர் மிக அரிதாகவே புரிந்துகொண்டிருந்தார். எனவே, நீங்கள் பேராசையிலிருந்து விடுபட்டு, ஒழுக்க சீலர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சகலவிதமான தீமைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:22) அத்தகைய விடயங்களில் ஒருவன் தன்னை ஆள முடியாவிட்டால், அவன் மற்றவர்களுக்கு எப்படிக் கட்டளை இடக் கூடும்? ஒருவன் தன்னை பேராசையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளா விட்டால், அவன் விக்கிரக ஆராதனை செய்பவனாய் கருதப்படுவான், மேலும் பிற மதத்தவன் என்ற ரீதியில் தீர்ப்புக்குள்ளாவான். ஆனால் கர்த்தரின் தீர்ப்பைப்பற்றி அறியாதவர் யார்? பவுல் போதித்தபடி, பரிசுத்தவான்கள் உலகிலுள்ளோரைத் தீர்ப்பிடக்கூடுமா? (1 கொரிந்தியர் 6: 2) ஆனால், நான் உங்களிடையே இதுபோன்ற எந்தவொரு விடயத்தையும் கண்டதுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை, புனித பவுல் உங்கள் மத்தியில் மிகவும் கடுமையாக சேவை செய்தார். அவரது நிருபத்தின் தொடக்கத்தில் அவர் உங்களைப் பாராட்டியிருந்தார். ஏன் என்றால், அக்காலத்தில் கர்த்தரை அறிந்திருந்த சபைகளில் அவர் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசியிருந்தார். ஆனால் சிமிர்னாவைச் சேர்ந்த நாமோ, அவரை இன்னமும் அறியாதவர்களாக இருக்கிறோம். எனவே சகோதரர்களே, நான் அவருக்காகவும் (Valens) அவரது மனைவிக்காகவும் உள்ளத்தால் மிகவும் கவலைப்படுகிறேன். கர்த்தர் அவருக்கு உண்மையான மனந்திரும்புதலைக் கொடுக்கக் கடவாராக. எனவே, இவ்விடயத்தில் நீங்கள் மிதமான போக்கைக் கடைப்பிடித்து, அப்படிப்பட்டவர்களை விரோதிகளாய் கருதாதிருப்பீர்களாக. (2 தெசலோனிக்கேயர் 3:15). மாறாக, துன்பத்தை அனுபவிப்பவர்களையும், வழிதவறிப்போன அங்கத்தவர்களையும் தேடி, அவர்களை மீண்டும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களது முழு சரீரத்தையும் நீங்கள் காப்பாற்றிக்கொள்வீர்கள். அவ்வாறு செயல்படுவதன் மூலம் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்கிறீர்கள். (1 கொரிந்தியர் 12:26)

12 ம் அதிகாரம் – பல்வேறு கிருபைகள் பற்றிய அறிவுரை

நீங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்றும், உங்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை என்றும் நான் நம்புகிறேன்; ஆனால் எனக்கு இந்த வரப்பிரசாதம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த வேதாகமங்கள் பிரகடணப்படுத்துவது என்னவென்றால், நீங்கள் கோபம் கொள்ள நேரிட்டாலும், பாவம் செய்யாதீர்கள். உங்கள் கோபம் சூரியன் மறையும் முன் தணிந்து விட வேண்டும் (எபேசியர் 4:26). இதை நினைவில் வைத்திருப்போர் மகிழ்ச்சியாய் இருப்பர். உங்களைப் பொறுத்தவரையில் இது உங்களுக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் பிதாவும், தேவனுடைய குமாரனும், நம்முடைய நித்திய பிரதான ஆசாரியருமாகிய இயேசு க்கிறிஸ்துவும், உங்களை விசுவாசத்திலும் சத்தியத்திலும் கட்டியெழுப்புவார்களாக. எல்லா சாந்த குணத்தையும், மென்மை, பொறுமை, சகிப்புத்தன்மை, நிரந்தர சகிப்புத்தன்மை மற்றும் தூய்மை ஆகியவற்றில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், அவரை மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுப்பிய பிதாவையும் விசுவாசிக்கின்ற அவர் தனது பரிசுத்தவான்களுக்குக் கொடுத்த மகத்துவத்தை உங்களுக்கும் அருளுவாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுப்பிய அவருடைய பிதாவையும் விசுவாசிக்கிற அனைவருக்கும், பரலோகத்திற்கு கீழே உள்ள எல்லா வரப்பிரசாதங்களையும் அருளுவார். (கலாத்தியர் 1: 1) சகல புனிதர்களுக்காகவும் செபியுங்கள்.ஆட்சியாளர்களுக்காகவும் செபியுங்கள். (1 தீமோத்தேயு 2: 2) அதிகாரிகள், ஆட்சியாளர்கள், மற்றும் உங்களைத் துன்புறுத்தி உங்களை வெறுப்பவர்களுக்காகவும் மன்றாடுங்கள். ( மத்தேயு 5:44 ). உங்கள் விசுவாசத்தின் கனி அனைவருக்கும் வெளிப்படுவதற்கும், நீங்கள் அவரிடத்தில் பரிபூரணமாக இருப்பதற்கும் சிலுவையின் எதிரிகளுக்காகவும் மன்றாடுங்கள்.

13 ம் அதிகாரம் – நிருபங்களின் பரிமாற்றம் பற்றிய கண்ணோட்டம்

நீங்களும், இக்னேஷியஸும் எனக்கு எழுதியபடி, எவரேனும் (இங்கிருந்து) சிரியாவுக்கு செல்ல நேரிட்டால், உங்கள் கடிதத்தை அவரோடு (போகிறவர்) எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உங்களது வேண்டுகோளை நான் கவனத்தில் கொண்டுள்ளேன். சரியான ஒரு சந்தர்ப்பம் அமைந்தால், தனிப்பட்ட விதத்திலோ அல்லது, எனது சார்பாக போகக்கூடியவர் ஒருவர் அமையும் பட்சத்தில், உங்களது ஆவல் நிறைவேற்றப்படும். எமக்கு எழுதப்பட்ட இக்னேஷியஸின் நிருபங்களும், எம்மிடம் உள்ள ஏனைய (அவருடைய நிருபங்கள்) வற்றையும் நீங்கள் கேட்டுக்கொண்ட படியே, உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவை இந்த நிருபத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, அவைகளால் நீங்கள் அளப்பரிய நன்மைகளைப் பெற்றிடுவீர்கள். ஏனெனில், அவை பொறுமையையும் விசுவாசத்தையும் ஆராய்கின்றன. அத்துடன் எம் கர்த்தரிடம் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை மேலும் விஸ்தரிக்க எம்மை உற்சாகப்படுத்தும் அனைத்துக் காரணிகளையும் அலசி ஆராய்கிறது. இக்னேசியஸ் என்பவரிடமிருந்தோ அல்லது அவரோடு இருந்தவர்களிடமோ இருந்து ஏதாவது குறிப்பிடப்படும்படியான தகவல்கள் உங்களுக்குக் கிட்டுமாயின், அவற்றை எமக்கு தயை கூர்ந்து அறியத்தர வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

14 ம் அதிகாரம் – முடிவுரை

இந்த விடயங்கள் யாவற்றையும் நான் கிரெசென்ஸ் (Crescens) என்பவர் மூலமாக உங்களுக்கு எழுதுகிறேன். தற்போது வரை நான் அவரை உங்களுக்கு பரிந்துரைத்து வந்துள்ளேன். இப்போதும் அவ்வாறே பரிந்துரை செய்கிறேன். ஏனெனில் அவர் எம் மத்தியில் நேர்மையாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வண்ணமே, உங்கள் மத்தியிலும் இருந்துள்ளார் என்று நம்புகிறேன்.
அத்தோடு, அவரது சகோதரி உங்களிடம் வரும் போது, அவரை மிகுந்த மரியாதையுடன் நடத்துங்கள். கர்த்தராகிய இயேசுவின் பாதுகாப்பும் கிருபையும் என்றும் உங்களோடு இருக்கக்கடவதாக. ஆமென்.