Based on the English Translation of Alexander Roberts and James Donaldson. You can access the English version by clicking here (NewAdvent.org).

வாழ்த்துக்கள்

சிமிர்னா (Smyrna) வில் இயங்கும் இறை சபையான நாம்; பிலோமெலியம் (Philomelium) மற்றும் அனைத்து இடங்களிலும் இயங்கும் கத்தோலிக்க மற்றும் ஏனைய திருமறை சபைகளுக்கும் சொல்வதாவது, பிதாவாகிய எம் தேவனினதும், கர்த்தராகிய எம் யேசுக்கிறிஸ்துவினதும் இரக்கமும், அன்பும் சமாதானமும் உங்கள் அனைவருக்கும் உரித்தாககக்கடவதாக.

1 ம் அதிகாரம் – இது பற்றி நாம் எழுதுவதாவது…

அன்பான சகோதரர்களே, வேதசாட்சிகளோடு தொடர்புடையவை பற்றி நாம் உங்களுக்கு எழுதியிருந்தோம். அதிலும், குறிப்பாக, சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பரிசுத்த பொலிகார்ப், அவர் தானே ஒரு வேதசாட்சியாய் மரித்து அதற்கு ஒரு வரைவிலக்கணம் வகுத்தார். இதற்கு முன் இடம்பெற்ற அனைத்து சம்பவங்களும் வேதசாட்சியம் என்பது சுவிசேஷத்தோடு ஒன்றித்ததாக அமைந்ததும், உன்னதத்தில் இருந்து எமது கர்த்தர் எமக்கு காட்டியவையாகவே பார்க்கப்பட்டன. கர்த்தர் பரலோகத்துக்கு எழுந்தருளியதைப் போலவே, அவரும் உன்னதத்துக்குத் தன்னைக் கையளிக்கக் காத்திருந்தார். இதன் மூலம் நாமும் அவரது வழியைப் பின்பற்றி, சுயநலத்தோடு செயற்படாமல், எமது அயலவர் பற்றியும் அக்கறை கொண்டுள்ளோம். ஏன் என்றால் இப்படியான செயல்கள் தான் தூய்மையான அன்புக்கு அத்திவாரமாய் அமையும். சொல்லப்போனால், நாம் மாத்திரம் இரட்சிக்கப்பட வேண்டும் என்று எண்ணாமல், எமது அனைத்து சகோதரர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே இதன் உள்நோக்கம்.

2 ம் அதிகாரம் – எமது வேதசாட்சிகளின் வியக்கத்தகு அர்ப்பணிப்பு

அனைத்து வேதசாட்சியங்களுமே புனிதமானதும், உன்னதமானதும், தேவனுடைய சித்தத்தின் படியே நிறைவேறியவைகளாகும். ஏனையவரை விட, நாம் எமது விசுவாசத்தின் மேல் உறுதியுள்ளவர்களாக இருப்பதால், எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரத்தை கடவுளிடம் கையளிப்பதே சிறந்தது. உண்மையிலேயே, அவர்கள் தங்கள் இறைவனிடம் காட்டிய அந்த தூய அன்பையும், அவர்களின் உன்னத மனநிலையையும், பொறுமையையும் பாராட்டாதோர் யார்? அவர்களது உடல் முள் சாட்டைகளால் கிழிந்தபோதும், அவர்களின் உடல், அதனுள்ளே உள்ள நரம்புகள் மற்றும் தமனிகள் வரை நார் நாறாகக் கிழியுண்டு போன போதும் கூட, அவர்கள் அதை இன்னும் பொறுமையாக சகித்துக்கொண்டதை அங்கே நின்றவர்கள் பார்த்துப் பரிதாபப்பட்டு, அவர்களையிட்டு துக்கமடைந்தனர். ஆனால், அந்த வேதசாட்சிகள் ஒருவர் கூட ஒரு முனகலோ பெருமூச்சோ, கூக்குரலோ இடவில்லை. அத்தகைய மரணவேதனையை அவர்கள் அனுபவித்தும் கூட கிறிஸ்துவின் அந்தப் புனித தியாகிகள், கர்த்தருக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டவர்களாய், கர்த்தர் அவர்களோடு இருந்து அவர்களைக் கைவிடாமல் ஆதரவாக இருந்தார் என்பதையும் இது நமக்கு நிரூபிக்கிறது. மேலும், கிறிஸ்துவின் கிருபையைப் பார்த்து, அவர்கள் இந்த உலகத்தின் எல்லா வேதனைகளையும் துச்சமாகக் கருதினர். அந்த ஒரு மணிநேரத்தில் (அவர்கள் அனுபவித்த மரண வேதனைகளினூடாக) நித்திய தண்டனையிலிருந்து தங்களை மீட்டுக்கொண்டார்கள். இதனால் அவர்களுக்கு கொடூரமான மரணவேதனையை ஏற்படுத்தியவர்களின் நெருப்பைப் போன்ற செயல்கள் அவர்களுக்கு குளிர்ச்சியாகத் தோன்றியது. ஏனெனில், அவர்கள் தங்கள் கண்களுக்கு முன் நித்திய, என்றும் அணையாத நெருப்பிலிருந்து தப்பிக்கவே இவை யாவற்றையும் சகித்துக்கொண்டவர்களாய்க் காணப்பட்டனர். 1கொரிந்தியர் 2:9 ல் எழுதியியுள்ளது போல்: தேவன் தம்மில் அன்பு கொண்டோருக்காக தயார் செய்தவர்களை கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனின் இதயத்தில் தோன்றவும் இல்லை. ஆகவே கர்த்தரால் அவர்களுக்கு சொல்லப்பட்டது என்னவெனில், அவர்கள் இனி மனிதர்களாக இல்லை. ஏற்கனவே அவர்கள் தேவதூதர்களாகி விட்டார்கள். அதேபோல், கொடிய மிருகங்களுக்குக் பலியிட நியமிக்கப்பட்டவர்களும், கொடூர மரண வேதனையை தாங்கிக் கொண்டவர்களும், ஆணிகள் அடிக்கப்பட்ட படுக்கைகள் மீது கிடத்தப் பட்டவர்களும், மேலும் பலவிதமான மரணவேதனைகளுக்கு உட்படுத்தப் பட்டவர்களும், இவ்வாறே அவைகளைத் தாங்கிக்கொண்டனர். வேதசாட்சிகள் கிறிஸ்துவை மறுதலிக்க செய்வதற்கே இத்தகைய கொடிய சித்திரவதைகளுக்கு அவர்கள் உ ள்ளாக்கப்பட்டனர்.

3 ம் அதிகாரம் – ஜெர்மனிக்கசின் (Germanicus) உறுதியான நிலைப்பாடும், வலியுறுத்தப்பட்ட பொலிகார்பின் மரணமும்

அவர்களுக்கு எதிராக செயல்பட சாத்தான் பல வழிகளைத் தேடினான். ஆனாலும், தேவனுடைய கிருபையால் அவனது சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஏன் என்றால், மிகவும் உன்னதமான ஜெர்மனிக்கஸ், தான் காத்த பொறுமையால், மற்றவர்களை கோழைத்தனத்தில் இருந்து விடுவித்தார். மேலும், அவர் காட்டு மிருகங்களுடன் வீரமாக போராடினார். உரோமைய அதிபர் அவரது வயதைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறு அவரைச் சம்மதிக்க வைக்க முயன்றபோது, அவர் காட்டு மிருகங்களை சீண்டி அவைகளை தன்பால் ஈர்த்தார். அநீதி மற்றும் விசுவாசமற்ற உலகத்திலிருந்து விரைவாக விடைபெறும் நோக்கத்துடனேயே அவர் இதைச் செய்தார். ஆனால், இறைப்பற்றும், விசுவாசமும் கொண்ட கிறீஸ்தவ சமூகம் வெளிப்படுத்திய உன்னத மனப்பான்மையினால் உந்தப்பட்ட அனைத்து மக்களும் இதைக் கண்டு மிகவும் வேதனைப்பட்டனர். நாத்திகர் ஒழிந்து போகக்கடவார்களாக! பொலிகார்ப் தேடிக் கண்டு பிடிக்கப் படுவாராக!

4 ம் அதிகாரம் – குயின்டஸ்சின் (Quintus) நம்பிக்கைத் துரோகம்

பிரிகிய நாட்டவரான குய்ண்ட்ஸ் (Quintus), அவர் கிட்டத்தில் தான் Phrygia விலிருந்து வந்தவர். அவர் காட்டு மிருகங்களைக் கண்டு மிகவும் பயந்தார். இவர் தான் தன்னையும் மற்றவர்களையும் தானாக முன்வந்து விசாரணைக்கு உட்படுமாறு கட்டாயப்படுத்தினார். உரோம ஆளுனர் பல வேண்டுகோள்களுக்குப் பின், அவரை சத்தியம் செய்யவும் மற்றும் தியாகம் செய்யவும் தூண்டினார். ஆகவே, சகோதரர்களே, துன்புத்தல்களுக்குப் பயந்து தனது உறுதிப்பாட்டைக் கைவிடும் எவரையும் நாம் வியந்து புகழ்வதில்லை. வேதாகமம் அவ்வாறு நமக்கு சொல்லிக் கொடுத்ததும் இல்லை. இது பற்றி மத்தேயு எழுதிய சுவிசேஷம் 10:23 இல் கூறப்பட்டுள்ளது.

5 ம் அதிகாரம் – பொலிகார்பின் புறப்பாடும் தரிசனமும்

ஆனால் மிகவும் போற்றத்தக்கவரான பொலிகார்ப், தான் தேடப்படுவதை முதலில் கேள்விப்பட்டபோது, எவ்வித கலக்கமும் அடையாமல், அந்த நகரத்திலேயே தொடர்ந்து இருக்கத் தீர்மானித்தார். ஆயினும், பலரது வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற, அவர் அங்கிருந்து புறப்பட்டு, அதிக தூரத்தில் இல்லாத ஒரு ஊருக்குப் போனார். அவர் அங்கு தனது நண்பர்களுடன் தங்கியிருந்து, உலகத்தில் உள்ள அனைத்து இன மக்களுக்காகவும், அனைத்து திருச்சபைகளுக்காகவும் இரவு பகல் பாராமல் அவரது வழக்கத்தின் படியே செபித்தார். அதைத் தவிர அவர் வேறு எதுவும் செய்யவில்லை. அவ்வாறு அவர் செபித்துக்கொண்டிருந்த வேளை, அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அது அவர் கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அவருக்கு கிடைத்தது. அதில், அவரது தலைக்கு அடியில் உள்ள தலையணை தீப்பற்றி எரிவது போன்ற ஒரு எச்சரிக்கையை அவருக்கு காட்டியது. உடனே அவர், தன்னோடு இருந்தவர்களை பார்த்து, தீர்க்கதரிசனமாய்; தான் உயிருடன் எரிக்கப்படக்கூடும் என்று சொன்னார்.

6 ம் அதிகாரம் – பொலிகார்ப் சேவகனால் காட்டிக்கொடுக்கப்படுகிறார்

அவரைத் தேடுகிறவர்கள் அருகில் வந்தபோது, அவர் வேறொரு இடம் நோக்கிப் புறப்பட்டார், அங்கும் அவரைத் தேடியவர்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அங்கே அவரைக் காணாததால், அங்கிருந்த இரு இளைஞர்களை அவர்கள் சிறைப்பிடித்தனர். அவர்களில் ஒருவன் சித்திரவதை தாங்க முடியாமல், அவரைக் காட்டிக்கொடுத்து விட்டான். ஆதலால், அவரால் மேலும் அங்கே தொடர்ந்தும் ஒளிந்திருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைக் காட்டிக் கொடுத்தவனும் அதே வீட்டில் தான் இருந்தான். அப்போது ஐரினார்க் (Irenarch) என்ற பதவியும் கிளெரோனோமஸின் (Cleronomus) என்பவருடைய பதவியைப் போன்றது), ஏரோது என்ற பெயருடைய அந்த அதிகாரி, அவரை உடனடியாக அரங்கத்திற்கு கொண்டு வர உத்தரவிட்டான். அவர் தனது பங்கினைப் பூர்த்தி செய்யும் முகமாகவே இவை யாவும் நடந்தேறின. கிறிஸ்துவின் பங்காளியாக இருந்துகொண்டே அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் தண்டனைக்கு ஒப்பாக இவர்களும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

7 ம் அதிகாரம் – பொலிகார்ப் அவரைத் தேடுபவர்களால் கண்டு பிடிக்கப்படுகிறார்

அவரைத்தேடுபவர்கள், குதிரைப்படை வீரர்களுடன் சேர்ந்து, அவரைக் காட்டிக்கொடுத்த இளைஞனையும் அவர்களுடன் கூட்டிக்கொண்டு, முன்பே திட்டமிடப்பட்ட ஒரு நாள் இரவு நேரத்தில், தங்கள் வழக்கமான ஆயுதங்களுடன், ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க செல்வது போல வெளியே சென்றனர். இது போன்ற ஒன்று மத்தேயு 26:55 இல் சொல்லப்பட்டுள்ளது. வீரர்கள் அவர் இருந்த இடத்தை நெருங்கிய பொது, அவர் தங்கி இருந்த சிறிய வீட்டின் மேலுள்ள அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து வேறு ஓர் இடத்துக்கு இலகுவாய் தப்பி சென்றிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தேவனுடைய சித்தம் நிறைவேறுவதாக என்று சொன்னார். (உதாரணம் மத்தேயு 6:10, மற்றும் அப்போஸ்தலர் நடவடிக்கை 21:14). சிறைப்பிடிப்பாளர்கள் அங்கே வந்ததை அறிந்த அவர், கீழே இறங்கி வந்து அவர்களோடு உரையாடினார். அவரது வயதையும், உறுதியான மனோதிடத்தையும் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்களில் சிலர், இப்படிப்பட்ட ஒரு மகானைப் பிடிக்கவா நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர் அந்த கொஞ்ச நேரத்துக்குள், அவர்களுக்கு உண்ணவும், குடிக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களிடம் எந்த இடையூறுகளும் இன்றி செபிப்பதற்காக ஒரு மணி நேரம் தரும்படி வினயமாகக் கேட்டுக்கொண்டார். அவர்களும் அதற்கு அனுமதித்தனர். அவர் நின்றுகொண்டே செபித்தார். தேவ கிருபை நிறைந்தவரான அவர், அடுத்த இரண்டு மணித்தியாலங்களாக அவருடைய செபத்தை நிறுத்த முடியவில்லை. இதைப் பார்த்த சிறைப்பிடிப்பாளர்கள் மலைத்துப் போயினர். இப்படியான ஒரு தேவ பற்றுதல் மிக்க ஒரு மகானைப் பிடிக்க வந்ததைப்பற்றி அவர்களுள் சிலர் மனம் வருந்தினார்.

8 ம் அதிகாரம் – பொலிகார்ப் நகருக்குக் கொண்டு வரப்படுகிறார்

சிறிய-பெரிய, புகழ்பெற்ற-தெளிவற்ற, மற்றும் அனைத்து வேளைகளிலும் அவருடன் தொடர்பு கொண்ட அனைத்திற்கும், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையையும் நினைவில் நிறுத்தி அவர் செபித்து முடித்த பின், தனது நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். சிறைப்பிடிப்பாளர்கள் அவரை ஒரு கழுதையின் மீது ஏற்றி நகருக்குள் கொண்டு வந்தனர். அந்த நாள் பெரிய ஓய்வு நாளாக இருந்தது. சமாதான நீதவானாகிய (Herod) ஏரோதுவும், அவனது தந்தையான (Nicetes) நைசிடெஸ் என்பவனும் தேரில் வந்து, அவரை சந்தித்து, அவரை தமது தேரில் ஏற்றி, அவர் அருகில் உட்கார்ந்து, அவரை வற்புறுத்துவதற்கு முயற்சித்து, ‘சீசரை ஆண்டவரே என்று சொல்வதிலும், தியாகம் செய்வதிலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கடைபிடிக்கப்படும் அனுஷ்டானங்களிலும் என்ன தவறு இருக்கிறது? என்றும், அதன் மூலம் உயிரைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாமே? என்றும் கூறினர். ஆனால், அவர் முதலில் அவர்களுக்கு எவ்வித பதிலையும் அளிக்க வில்லை. ஆயினும், அவர்கள் அவரைத் தொடர்ந்தும், வற்புறுத்தியபடியே இருந்தார்கள். அப்போது அவர் பதில் அளிக்கையில், ‘உங்கள் கட்டளைப்படி நான் நடக்க மாட்டேன் என்றார். ஆகவே, அவர்கள் அவரைச் சம்மதிக்க வைப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைத்த அவர்கள், அவரைக் கெட்ட வார்த்தைகளால் ஏசி அவரைத் தேரில் இருந்து பலவந்தமாக வெளியே தள்ளிவிட்டனர். அதன் காரணமாக, அவரது கால் எலும்பு ஒன்று விலகியது. ஆயினும், அவர் எவ்வித சலனங்களோ, தடுமாற்றங்களோ இன்றி, வேதனை தனக்கு நன்கு பழக்கப்பட்டது தானே என்ற உறுதியோடு அரங்கத்துக்கு அவரைக் கூட்டிச் சென்ற போது விரைவாகவும், ஆர்வத்துடனும் நடந்து சென்றார். அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் பேரிரைச்சல் காரணமாக அவர் கூறுவதை கேட்க முடியாதிருந்தது.

9 ம் அதிகாரம் – பொலிகார்ப் கிறீஸ்துவை தூற்றுவதற்கு மறுக்கிறார்

பாலிகார்ப் அரங்கத்திற்குள் நுழையும் போது, பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அது ‘ஓ! பொலிகார்ப்பே, நீ பலமாக இரு, உன்னை ஒரு உண்மையான மனிதனாகக் காட்டு’ என்று ஒலித்தது. அவரோடு பேசியது யார் என்பதை ஒருவரும் காணவோ, கேட்கவோ இல்லை. ஆயினும், அங்கே பிரசன்னமாய் இருந்த எமது சகோதரர்கள் அந்தக் குரலைக் கேட்டனர். அவர் அரங்கத்துக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்ட வேளை, கூடியிருந்த மக்களின் பேரிரைச்சல் மேலும் அதிகமானது. அவரை ஆளுனர் (Pro Counsel) இடம் கொண்டு வந்த போது, நீர் தான் பொலிகார்ப்பா? என்று கேட்டான். அதற்கு அவர், ஆம், நான் தான் என்றார். உடனே ஆளுநர், (கிறிஸ்துவை) மறுதலிக்க அவரை வற்புறுத்த முயன்றார். ‘உமது முதுமையையும், மற்றைய விடயங்களையும் மதிக்கிறேன். எங்கள் வழக்கப்படி, சீசரின் அதிர்ஷ்டத்தால் (Fortune of Caesar) உறுதி பூணும். அதன் பின் மனம் நொந்து, நாஸ்திகர்கள் ஒழியட்டும் என்று கூறும் என்று கட்டளை இட்டான். ஆனால் பொலிகார்ப், அரங்கத்தில் இருந்த அனைத்து அஞ்ஞானிகளையும் கோபத்துடன் பார்த்து, அவர்களை நோக்கி கையை அசைத்து, ஒரு பெருமூச்சுடன் அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, ‘நாஸ்திகர்கள் ஒழியட்டும்’ என்று சத்தமிட்டார். உடனே ஆளுனர், அவரை நோக்கி, ‘உறுதியாக சொல்கிறேன், நீர் கிறீஸ்துவை தூற்றினால் போதும், உம்மை நான் விடுவிப்பேன்’ என்றான். ஆயினும், பொலிகார்ப் தீர்க்கமாக ‘எண்பத்து ஆறு ஆண்டுகள் நான் அவருக்கு சேவை செய்தேன், அவர் என்னை ஒருபோதும் காயப்படுத்தியதில்லை. அப்படி இருக்கையில், நான் எப்படி எனது அரசரையும், என் இரட்சகரையும் நிந்திக்க முடியும்?’ என்று கேட்டார்.

10 ம் அதிகாரம் – பொலிகார்ப் தன்னை ஒரு கிறீஸ்தவன் என்று பறைசாற்றுகிறார்

ஆளுனர் மீண்டும் அவரை வற்புறுத்தி, ‘சீசரின் அதிர்ஷ்டத்தின் (Fortune of Caesar) மேல் சத்தியம் செய்யும்’ என்று சொன்னபோது, அவர், ‘நீர் வீணாக என்னை வற்புறுத்துகிறீர். சீசரின் அதிர்ஷ்டத்தின் மேல் நான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நீர் சொல்கிறீர். நான் யார் என்பதையும், எவர் என்பதையும் நீர் அறியாதது போல் பாசாங்கு செய்கிறீர். ஆனாலும், நான் ஒன்றை உறுதியாகவும், திடமாகவும் சொல்கிறேன்; நான் ஒரு கிறீஸ்தவன். கிறீஸ்தவத்தின் சத்தியம் மற்றும் கோட்பாடுகள் பற்றி நீர் தெரிந்து கொள்ள வேண்டுமானால், எனக்கு அவற்றைப் பற்றி விளக்கமளிக்க ஒரு நாளை ஒதுக்கித் தாரும். அப்போது நான் கூறுவதை நீர் கேட்கலாம்’ என்றார். அதற்கு ஆளுனர் பதிலுரையாக, ‘அப்படியானால், மக்களை அதற்கு இணங்கச் செய்யும்’ என்றான். ஆனால் பொலிகார்ப், “எனது விசுவாசத்தைப்பற்றி உமக்குப் பொறுப்புக் கூறுவது முறையே என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், கடவுளால் நியமிக்கப்பட்ட அதிகாரங்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரிய மரியாதையை கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கற்பிக்கப்படுகிறது.’ (இதனால் எமக்கு எந்தக் உடல் தீங்கும் ஏற்படப் போவதில்லை”) என்றார். உதாரணம்; உரோமர் 13: 1-3 மற்றும் தீத்து 3:1. ‘ஆனால், இந்த மக்களைப் பொறுத்த வகையில், எனது பொறுப்புக் கூறலைக் கேட்க அவர்கள் எந்த விதத்திலும் தகுதியானவர்கள் அல்ல’ என்றார்.

11 ம் அதிகாரம் – அச்சுறுத்தல்கள் பொலிகார்ப் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை

ஆளுனர் அவரிடம், ‘என்னிடம் கொடிய காட்டு மிருகங்கள் உள்ளன. நீர் மனம் திரும்பி நான் சொன்ன படி செய்யாவிட்டால், உம்மை இந்த மிருகங்களுக்கு இரை ஆக்குவேன்.’ என்றான். அதற்கு அவர், அப்படியானால், அவற்றை இங்கே கொண்டு வாரும். தீமையை ஏற்றுக்கொள்வதற்காக நன்மையை விட்டுக்கொடுத்து அதன் மூலம் நன்மை அடைய நாம் பழக்கப்பட்டவர்கள் அல்ல. தீமையிலிருந்தும் எனக்கு நீதி கிடைக்குமானால், அது எனக்கு நன்மையே.’ என்றார். ஆயினும், மீண்டும், மீண்டும், ஆளுனர் அவரை நோக்கி: ‘கொடிய மிருகங்களை நீர் துச்சமாக நினைப்பீரானால், அப்போதும் நீர் மனம் திருந்தாவிட்டால், உம்மை தீயில் இட்டு எரிக்க நான் உத்தராவிட நேரிடும்’ என்றான். பொலிகார்ப் பதிலுரையாக, ‘நீர் குறிப்பிடும் தீ, ஒரு மணி நேரம் எரிந்து பின்னர் அணைந்து விடும். ஆனால், தேவனின் மேல் பற்றில்லாத உம்மைப் போன்றவர்களுக்கு தண்டனையாக எரியும் தீயானது, என்றும் நிரந்தரமாய் எரிந்துகொண்டே இருக்கும் என்பதை நீர் அறியாதிருக்கிறீர். ஆகவே, ஏன் தாமதிக்கிறீர்? உமக்கு எது விருப்பமோ, அதைக் கொண்டு வாரும்’ என்று துணிச்சலாகக் கூறினார்.

12 ம் அதிகாரம் – பொலிகார்ப் உயிருடன் எரிக்கப்பட்ட வேண்டுமென தீர்ப்பிடப்படுகிறார்

இவை பற்றியும் மேலும் பலவற்றையும் பற்றி அவர் பேசிக்கொடு இருக்கையில், அவர் மிகவும் உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். அவரது முகம் கிருபையால் நிறைந்து காணப்பட்டது. விவாதிக்கப்பட்ட காரணிகளையிட்டு அவர் எவ்வித மனக்குழப்பமும் அடையவில்லை. ஆனால், ஆளுனரோ, வியப்புற்றவனாகக் காணப்பட்டான். அதே வேளை, பறை சாற்றும் தூதரை அரங்கத்துக்குள் வரச் செய்து, ‘பொலிகார்ப் மூன்று முறை அவரைக் கிறீஸ்தவன் என்று பறைசாற்றினார்’ என்று கூறினான். அதை அந்த பறை சாற்றும் தூதன் பிரகடனம் செய்தான். அப்போது, சிமிர்னாவில் வாழும் யூதர்களும், பிற இனத்தவர்களும் மிகுந்த கோப வெறியோடு, இவன் ஆசியாவின் போதகன் என்றும், கிறீஸ்தவர்களின் தந்தை என்றும், இவர்கள் போன்றவர்கள் எமது தேவர்களை உதாசீனம் செய்பவர்கள் என்றும், பலரிடம், பலி கொடுப்பது பாவமென்றும், தேவர்களை வழிபடக் கூடாது என்றும் போதித்து வந்தான் என்றும் உரத்த குரலில் கோஷமிட்டனர். இதன் பின்னர், ஆசியாவின் ஆளுனரான (Asiarch) ஆசியார்க் பிலிப் என்பவனை நோக்கி, சிங்கங்களை அவர் மீது ஏவி விடும்படி பணித்தான். ஆனால் பிலிப், கொடிய மிருகங்களை உபயோகிக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால், சட்டப்படி அதைச் செய்ய முடியாது என்று கூறினான். அதேவேளை மக்களும், பொலிகார்ப் உயிருடன் எரிக்கப்படுவதே முறையாகும் என்று உரத்த குரலில் கோஷம் எழுப்பினர். இந்த நிகழ்வு, அவர் முன்பு ஒரு நாள் செபித்துக்கொண்டு இருந்த வேளை தனது தலையணை தீப்பிடிப்பது போன்று ஒரு தரிசனம் மூலம் வெளிப்படுத்தியவை நிறைவேறவே நடந்து கொண்டிருந்தன. அதைப்பற்றி அவர் அவருடன் இருந்தவர்களிடமும் தாம் உயிருடன் எரிக்கப்படக்கூடும் என்று தீர்க்கதரிசனமாய்க் கூறியிருந்தார்.

13 ம் அதிகாரம் – ஈமக்கிரியைகளுக்கான மேடை அமைக்கப்படுதல்

முன்னர் பேசப்பட்டதை விட, காரியங்கள் விரைவாகவே நடைபெற்றன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உடனடியாகவே போய் விறகு விற்போரிடம் நிறைய விறகுகளை வாங்கி வந்து அங்கே அடுக்கினார். அதிலும், யூதர்கள், அவர்களது வழக்கப்படி இவை நடத்தப்படுவதால் மிகவும் உற்சாகத்துடன் ஒத்தாசை செய்தனர். ஈமக்கிரியைகளுக்கான மேடை தயாரானதும், பொலிகார்ப் தனது மேல் ஆடைகளைக் களைந்து, தனது இடைக் கச்சையைத் தளர்த்தி, தனது காலணிகளையும் கழற்றி விட்டார். ஆயினும், அப்படிச் செய்வது பொதுவாக வழக்கத்தில் இருக்கவில்லை. ஆனால், விசுவாசிகளோ, அவரின் சரீரத்தை யார் முதலில் தொடுவது என்பதில் மிக ஆவலாய் இருந்தனர். ஏனென்றால், அவருடைய புனிதமான வாழ்க்கையின் நிமித்தம், அவர் வேதசாட்சியாய் அனைத்து விதமான நன்மைகளாலும் நிறைத்தவராய்க் காணப்பட்டார். உடனே அவர்கள் அவரைச் சுற்றி எரியூட்டும் பொருட்களை அடுக்கினர். எரியூட்டும் முன், அவரை ஆணிகளால் அறைந்து எரியூட்ட அவர்கள் முயன்ற போது, அவர், அவர்களைத் தடுத்து, என்னை இப்படியே விட்டு விடுங்கள். ஏனெனில் எரியும் தீயை தாங்கி சகித்துக்கொள்வதற்கு எனக்கு சக்தியையும், பெலனையும் தருகிறவர் என் தேவன். நீங்கள் ஆணிகள் அறைந்து என்னை நிலையாக வைத்து எரியூட்டத் தேவையில்லை. எரியும் தீயை தாங்கும் திடத்தை அவரே எனக்குத் தந்துள்ளார், என்று கூறினார்.

14 ம் அதிகாரம் – பொலிகார்ப் கற்பித்த செபம்

அவர்கள் அவரை ஆணிகளால் அறைய வில்லை, மாறாக, அவரது கைகள் பின் புறமாக வைக்கப்பட்டு அவரைக் கட்டிப்போட்டனர். மந்தையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடொன்று பலியிடப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டு, தேவனுக்குப் பிரியமான தகனப் பலியில் (Burnt Offering) ஒப்புக்கொடுப்பது போல் அவரை அவர் தயார் செய்து கொண்டு, வானத்தை அண்ணார்ந்து நோக்கி:
‘ஓ! சர்வ வல்லமையும் நிறைந்தவரான கர்த்தராகிய தேவனே, உமக்கு மிகவும் பிரியமானவரும், ஆசிர்வதிக்கப்பட்டவருமான திவ்விய சுதனான யேசுக்கிறீஸ்துவின் தந்தையே, அவராலேயே நாம் உம்மைப் பற்றி அறிந்து கொண்டோம். தேவே தூதர்களினதும், சகல வல்லமைகளினதும் மற்றும் சகல படைப்புகளினதும் தேவனே, உமக்கு முன்பாக நீதியுடன் வாழும் அனைத்து மானிட இனத்தினதும் தேவனே, இந்த நாளுக்கும், இந்தக் கணப்பொழுதுக்கு உரியவனாக இருப்பதற்கு நீர் என்னைத் தகுதியுள்ளவனாக தேர்ந்து எடுத்தமைக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். எண்ணற்ற வேதசாட்சிகளோடு என்னையும் அதன் ஒரு அங்கமாய் நீர் மாற்றியமைக்காகவும், உமது கிறிஸ்துவின் பாத்திரத்தில், ஆன்மா மற்றும் சரீரத்துடனான நித்திய வாழ்வின் உயிர்த்தெழுதலுக்கு, பரிசுத்த ஆவியின் மூலம் (அருள் பெற்றவராய்) அழிவில்லா நித்திய வாழ்வுக்கு வழி சமைத்தீர். அவர்கள் மத்தியில், நானும் இன்று உமக்கு ஏற்ற முழுமையான பலியாக ஏற்றுக்கொள்ளப்படுவேனாக. நித்திய உண்மையும், இரக்கமும் உள்ள தேவனாகிய நீர், அடியேனுக்கு முன்பு கூறியிருந்ததை போலவே, அதை இப்போது நிறைவேற்றுகிறீர். ஆகவே, அனைத்துக் காரியங்களுக்காகவும் நாம் உம்மைத் துதிக்கிறேன். உமது திருநாமத்தை அர்ச்சிக்கிறேன். உம்மை மகிமைப் படுத்துகிறேன். சகல வல்லவரும், நித்திய இரக்கமுள்ளவருமான இயேசுக்கிறீஸ்துவுக்கும் அவ்வாறே செய்கிறேன். அன்றும், இன்றும் இனி என்றென்றும் உமக்கும், உம்மோடு கூட பரிசுத்த ஆவியானவருக்கும் என்றும் அழியாத மகிமை உண்டாகக் கடவதாக’, ‘ஆமென்’

15 ம் அதிகாரம் – தீ பொலிகார்ப்பை சுட்டெரிக்கவில்லை

இந்த ‘ஆமென்’ என்ற வார்த்தையுடன் அவர் தனது செபத்தை நிறைவு செய்து கொண்டார். அப்போது தீயைப் பற்ற வைக்க நியமிக்கப்பட்டவர்கள், தீயை மூட்டினார்கள். தீ சுவாலையாக பற்றி எரிந்தது. அப்போது, அங்கே நடந்தவற்றுக்கு சாட்சி பகரும் பாக்கியத்தைப் பெற்றவர்களாகிய நாம், அந்த இடத்தில் ஒரு புதுமையைக் கண்டோம். அங்கே என்ன நடந்தது என்பதனை உலகுக்கு எடுத்துக்கூற நாம் அதைப் பாதுகாத்து வைத்தோம். என்ன புதுமை! அந்தத் தீ, அவரைச் சுற்றி ஒரு அலங்கார வலயம் போல் காட்சி அளித்தது. காற்றால் நிறைந்த பாய்மரப் படகின் பாய் போல அந்த நெருப்பு வளையம் காட்சியளித்தது. அந்த வேதசாட்சியின் உடலைச் சூழ்ந்து அந்த வளையம் எரிந்து கொண்டிருந்தது. அந்த வளையத்திற்குள் அவர் எரிந்து கருகிய உடலை உடையவராய் அல்லாமல், மாறாக, வேக வைத்த அப்பத்தைப் போல் காணப்பட்டார். வேறு விதத்தில் சொல்லப்போனால், அவர் ஒரு புடம் போடப்பட்ட தங்கத்தைப் போலவும், வெள்ளியைப் போலவும் பிரகாசித்தார். அத்தோடு, அந்த நேரம் நாம் அனுபவித்த வாசனை (தீயிலிருந்து வந்த) அவ்வளவு சுகந்தமாக இருந்தது. அங்கே எதோ ஒரு வாசனைத் திரவியம் அல்லது வாசனை நிறைந்த பொருளொன்று தீயில் எரிவது போன்றதொரு மென்மையான சுகந்தம் அந்த இடத்தை நிறைத்திருந்தது.

16 ம் அதிகாரம் – பொலிகார்ப் கூரிய வாளால் துளைக்கப்பட்டார்

நேரம் செல்லச் செல்ல, அந்தக் கொடூர அரக்கர்கள், தீ அவரைச் சுட்டெரிக்கவில்லை எனத் தெரிந்துகொண்டு, அவர் அருகில் சென்று, அவரைக் கூரிய வாளால் குத்திக் கொலை செய்து தண்டனையை நிறைவேற்றும் படி கொலைக் கும்பலுக்குக் கட்டளை இட்டனர். அவர்கள் அதைச் செய்ய எத்தனித்த போது, அங்கே ஒரு புறா தென்பட்டது. அப்போது, அந்த நெருப்பையே அணைக்கும் அளவுக்கு அங்கே இரத்தம் பீறிப் பாய்ந்தது. விசுவாசிகளுக்கும், பாவிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி அறிந்து மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர். விசுவாசிகளின் மத்தியில் மிகவும் போற்றத்தக்கவராய் பொலிகார்ப் காணப்பட்டார். எமது காலத்தில், அப்போஸ்தலிக்க மற்றும் தீர்க்கதரிசனப் போதகராகவும், ஆசிரியராகவும் சேவை செய்த அவர், சிமிர்னாவில் அமைந்திருந்த கத்தோலிக்க சபையின் ஆயராகவும் சேவையாற்றினார். அவரது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் யாவும் நிறைவேறியிருந்தன. இதுவரை ஒருசில நிறைவேறாவிட்டாலும், அவை இனி வரும் காலங்களில் நிறைவேறும்.

17 ம் அதிகாரம் – பொலிகார்ப்பின் உடல் கிறீஸ்தவர்களிடம் கையளிக்க மறுக்கப்படுகிறது

ஆனால் நீதிமான்களின் விரோதியாகவும், பொறாமைக்குணம் படைத்தவர்களுமாகிய அந்த கொடியவர்கள், அவரது வேதசாட்சியத்தின் வியக்கத்தகு பெறுமதி மிக்க தன்மையை உணர்ந்தபோதும், ஆரம்பம் முதல் அவர் வாழ்ந்த புனிதத்தன்மையான, குற்றமற்ற வாழ்க்கையை அறிந்தவர்களாய், அவர் எவ்வாறு இப்போது என்றும் அழியாத கிரீடத்தை சூட்டிக்கொண்டார் என்பதையும், எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி அவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற வெகுமதியையும் பெற்றார், என்று எவரும் எண்ணி, அவருடைய உடலையோ, அல்லது எண்ணங்களையோ ஒரு குறைந்தபட்ச நினைவுச்சின்னமாகக் கூட எவரும் வைத்துக்கொள்ளக் கூடாதென்ற சிந்தனையில் அவர் உறுதியாக இருந்தபடியால், அதைத் தடுக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருந்தார். ஆதலால், அவர் ஏற்கனவே ஏரோதின் தந்தையும், (Acetes) என்பவனின் சகோதரனுமான, (Nicetes) நைய்சிடேஸ் என்பவனிடம் இதை ஒரு வேண்டுகோளாக வைத்திருந்தார். ஆளுனரிடம் அவரது உடல் புதைக்கப்படக் கொடுக்கக் கூடாது என்று அவர் உறுதிப்படக் கூறியிருந்தார். காரணம், சிலுவையிலே அறையப்பட்ட கர்த்தரை விடுத்து, மக்கள் அவரது உடலை வணங்கத் தலைப்படுவதை தடுக்கும் முகமாகவே அவர் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். இதனை அவர் யூதர்களின் ஆலோசனைப்படியும், வலியுறுத்துதலின் பேரிலுமே சொல்லி இருந்தார்.
நாம் அவரை நெருப்பிலிருந்து வெளியே எடுக்க முயன்றபோது, கிறீஸ்துவை நாம் என்றும் கைவிடுவது என்பது எங்களை பொறுத்தமட்டில் எவ்விதத்திலும் சாத்தியமில்லை என்பதை அறிந்தவர்களாய், அந்த கொடியவர்கள் எங்களைக் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். ஆனால் எம் தேவனோ, மக்கள் வேறு எதனையும் வணங்குவதைத் தடுக்கும் முகமாக, உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார். ஏனெனில், அவர் ஒருவரே தேவனின் மைந்தன், அவரையே நாம் என்றும் போற்றித் துதிக்கிறோம். ஆனால், வேதசாட்சிகள் கர்த்தரின் சீடர்கள், மற்றும் விசுவாசிகள் என்ற ரீதியில், அவர்களது அரசரும் எஜமானுமாகிய கர்த்தர் மீது அவர்கள் கொண்டுள்ள எல்லையற்ற பாசத்தின் காரணமாக, வேதசாட்சிகளை நாம் மதிப்புடன் நேசிக்கிறோம். அதன் மூலமாகவே எம்மையும் நாம் அவரோடு தோழமையுள்ளவர்களாகவும், சீடர்களாகவும் ஆக்கிக்கொடுள்ளோம்.

18 ம் அதிகாரம் – பொலிகார்ப்பின் உடல் தகனம் செய்யப்படுகிறது

எனவே, நூற்றுக்கு அதிபதியானவன் (Centurion) யூதர்கள் ஏற்படுத்திய சீற்றத்தின் காரணமாக, பொலிகார்ப்பின் உடலை தீயின் நடுவே கிடத்தி, அதை முற்றிலும் எரித்து சாம்பலாக்கினான். அதன் பின் நாம் அவரது எலும்புகளை சேகரித்தோம். அவை நன்றாக வடிவமைக்கப்பட்ட தங்கத்தை விடவும், விலை உயர்ந்த ஆபரணங்ககளை விடவும், மிக மிகத் தூய்மையான பொக்கிஷங்களாகக் கருதி அவற்றை முறையான இடத்தில் பாதுகாப்பாக வைத்தோம். சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம், நாம் அவற்றை ஒன்று சேர்த்தோம். பக்தியோடும், பெருமையுடனும் நாம் அவரது வேதசாட்சியத்தை நினைவுகூற, கர்த்தரது அருளை வேண்டி நின்றோம். அவரை மட்டுமல்ல, ஏற்கனவே தமது பாடுகளை நிறைவு செய்த அனைவரின் நினைவாகவும், இன்னும் அவரது காலடியைப் பின்பற்றி நடக்க இருப்பவர்களை ஆயத்தப் படுத்தவும், அவர்களுக்குத் தகுந்த பயிற்சியை பெற்றுக்கொள்ளும் முகமாகவுமே நாம் அவ்வாறு செய்தோம்.

19 ம் அதிகாரம் – வேதசாட்சியான பொலிகார்ப் என்றும் போற்றப்படுவராக

இது தான் ஆசீர்வதிக்கப்பட்ட பொலிகார்பின் வரலாறு. இவர் ஸ்மிர்னாவில் வேதசாட்சியாக இருந்தவர்களில், பன்னிரண்டாவது இடத்தில் இருந்தவர். (பிலடெல்பியாவில் இருந்தவர்களையும் உள்ளடக்கியதாக), இருப்பினும், அவர் அனைத்து மக்கள் மனங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். அஞ்ஞானிகள் கூட அவரைப் பற்றி எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். அவர் வெறுமனே ஒரு புகழ் மிக்க போதகரோ ஆசிரியரோ மட்டும் அல்ல. மாறாக, முன்னர் நாம் குறிப்பிட்டது போல, அவர் ஒரு வேதசாட்சியுமாவார். அவரைப்போலவே அநேகர் தாமும் வேதசாட்சியாய் மரணத்தைத் தழுவிட வேண்டுமென உந்தப்பட்டார்கள். அவரது மரணம், கிறீஸ்துவின் சுவிசேஷத்திற்கு எல்லாவிதத்திலும் அமைவாக இருந்தது. ஏனெனில், அவர் மிகவும் பொறுமையுடன் அவரைத் தண்டனைக்குள்ளாக்கிய அந்த அநீதியான ஆளுனரை கையாண்ட படியால், என்றும் அழிவில்லாத புகழை அடைந்தார். இப்போது அவர், அனைத்து நீதிமான்களுடனும் (பரலோகத்தில்) மகிழ்வுடன் தேவனை மகிமைப்படுத்தி, பிதாவாகிய சர்வேசுரனையும், எம் கர்த்தராகிய இயேசுக் கிறீஸ்துவையும் துதி பாடிக்கொண்டிருக்கிறார். எமது ஆத்மாவின் மீட்பர் அவர், அவரே உலகெங்கும் உள்ள அனைத்து கத்தோலிக்க திருச்சபையின் மேய்ப்பருமாவார்.

20 ம் அதிகாரம் – இந்த நிருபம் சகோதரர் மத்தியில் பகிரப்பட்ட வேண்டும்

அப்போதிருந்து, உண்மையில் என்ன தான் நடந்தது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நாங்கள் எமது சகோதரரான மார்கஸ் (Marcus) மூலமாக அந்த நிகழ்வின் சுருக்கத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நீங்கள் இந்த நிருபத்தை வாசித்து முடித்து விட்டால், எங்கெல்லாம் உங்கள் சகோதரர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இதை அனுப்பி வைக்கும் படி தயவுடன் வேண்டுகிறோம். அவர்களும் இறைவனை மகிமைப்படுத்தலாம். கர்த்தருடைய கிருபையினாலும் நன்மையினாலும், தன்மேல் அன்புகொண்ட ஒருவரைத் தெரிவு செய்து, அவர் மூலம் அவரது மகிமையை வெளிப்படுத்தியற்காகவும், தம்முடைய இராச்சியத்துக்குள் தமது மக்களை கொண்டு வரக்கூடிய நம் தேவனாகிய ஆண்டவரின் ஏக சுதனாகிய இயேசுக்கிறீஸ்து ஊடாக, அவருக்கே சகல மகிமையும், புகழும், மாட்சியும் என்றென்றைக்கும் உண்டாகக் கடவதாக. ஆமென். அனைத்து புனிதர்களையும் வாழ்த்துங்கள். எங்களுடன் இருப்பவர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள். அத்துடன் இந்த நிருபத்தை எழுதிய எவரெஸ்டஸும் (Everestus) மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அவருடன் இணைந்து தமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

21 ம் அதிகாரம் – வேதசாட்சியத்தின் நினைவு தினம்

ஆசிர்வதிக்கப்பட்ட பொலிகார்ப், மரணம் எய்தியது ஷந்திகஸ் (Xhanticus) மாதம். இது யூத நாட்காட்டியில் நிசான் (Nisan) என்ற மாதத்தைக் குறிக்கும். அதாவது ஏப்ரல் மாதத்தில் வரும் ஒரு நாள். உரோம நாட்காட்டியின் படி, மாதம் ஆரம்பித்த இரண்டாம் நாள். மே மாதம் ஆரம்பிக்க ஏழு நாட்களுக்கு முன்பாக வரும் நாளில், வந்த ஒரு பெரிய ஓய்வு நாளின்போது, எட்டு மணியளவில் ஏரோதுவினால் அவர் கைது செய்யப்பட்டார். ட்ராலியானான (Trallion) பிலிப் அப்போது தலைமைக் குருவாக இருந்தான். ஸ்டேஷஸ் குவாட்ரடஸ் (Statius Quadretus) ஆளுனராக இருந்தான். ஆனால், எம் ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்துவே என்றென்றைக்கும் அரசராக இருந்தார். அவருக்கே சகல மகிமையும், புகழும், மாட்சியும், நித்திய சிம்மாசனமும், அன்றும், இன்றும் இனி என்றென்றைக்கும் உண்டாவதாக, ஆமென்.

22 ம் அதிகாரம் – புகழும், வாழ்த்தும் உண்டாகக் கடவதாக

நம் ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்து எமக்குத் தந்தருளிய சுவிசேஷக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழும் சகோதரர்களே, உங்களை நாம் வாழ்த்துகிறோம். உங்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். பிதாவாகிய தேவனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் மகிமை உண்டாவதாக. எம் ஆண்டவர் தெரிந்து கொண்டோரின் இரட்சணியத்தை உலகுக்கு காட்டும் ஒரு நிகழ்வை உதாரணமாகக் காட்டவே, ஆசிர்வதிக்கப்பட்ட பொலிகார்ப் மரண அவஸ்தையை அனுபவித்தார். அவரது வாழ்க்கையைப் பின்பற்றி நாமும் கிறீஸ்துவின் இராச்சியத்தில் இணைந்து கொள்வோமாக.

இவ் வரலாறு அனைத்தும், கெய்ஸ் (Caius) என்பவரால் ஐரினியஸின் (Irenius) (இவர் பொலிகார்ப்பின் சீடராக இருந்தவர்) நகலில் இருந்து, பிரதி செய்யப்பட்டது. அவர் ஐரினியஸுடன் நெருங்கிய நட்புடன் இருந்தார். சாக்ரடீஸ் ஆன நான், இவற்றை கொரிந்துவில் வசித்த கெயஸின் நகலிலிருந்து பிரதி செய்தேன். இதில் பங்கெடுத்த அனைவருக்கும் கிருபை உண்டாவதாக.

மீண்டும் நான், பயோனியசால் (Pionius), முன்னர் எழுதப்பட்ட பிரதியிலிருந்து அவற்றை நான் மீண்டும் எழுதினேன், அவற்றை மீண்டும் கவனமாக ஆய்வு செய்தும், ஆசீர்வதிக்கப்பட்ட பொலிகார்ப் தனது ஒரு வெளிப்பாட்டின் மூலம் எனக்குத் தெரியப்படுத்தியதில் இருந்தும் தொகுத்துள்ளேன். மேலும் எதாவது வரலாற்று சான்றுகள் கிடைத்தால், அதையும் நான் ஏக காலத்தில் தெரிவிப்பேன். இவை கால நீரோட்டத்தில் மங்கிப்போய் இருந்த நிலையிலும் கூட, அவற்றை நான் சேகரித்தேன். எம் கர்த்தராகிய இயேசுக் கிறீஸ்து அவரால் தெரிந்து கொள்ளப்பட்டோருடன் என்னையும் அவரது பரலோக இராச்சியத்தில் சேர்த்துக்கொள்வாராக. அவருக்கே, பிதாவுடனும், பரிசுத்த ஆவியுடனும் ஒன்றான ஆராதனையும், மகிமையும் என்றென்றும் உரித்தாவதாக. ஆமென்.