The Martyrdom of Justin

வேதசாட்சியான ஜஸ்டின்

ரோமில் துன்பத்தை அனுபவித்த புனித வேதசாட்சிகளான ஜஸ்டின், சாரிட்டன், சாரிட்ஸ், பியோன் மற்றும் லைபீரியனஸ் ஆகியோரின் சாட்சியங்கள்.

1 ம் அத்தியாயம் – ஜஸ்டின் தலைமை அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படல்

விக்கிரக ஆராதனை சம்பந்தமான சட்டவிரோத பாகுபாடுகள் நிலவிய காலத்தில், சிலைகளை வணங்கக் கட்டாயப்படுத்த, நகரத்திலும் நாட்டிலும் உள்ள பக்திமிகுந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடுமையான கட்டளைகள் நிறைவேற்றப்பட்டன; அதன்படி பக்திமான்கள் கைது செய்யப்பட்டு, ரோமின் தலைவரான ருஸ்டிகஸ் என்ற பெயருடையவன் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அவனுடைய தீர்ப்பு இருக்கைக்கு முன்பாக அவர்கள் கொண்டு வரப்பட்டபோது:

ருஸ்டிகஸ் ஜஸ்டினிடம்: “தெய்வங்களுக்கு இப்பொழுதே கீழ்ப்படிவது மட்டுமல்ல, அரசர்களுக்கும் கீழ்ப்படிவாயாக” என்று கட்டளை இட்டான்.

ஜஸ்டின்: “நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது குற்றமோ அல்லது கண்டனத்திற்கு உரியதோ அல்ல” என்று கூறினார்.

ருஸ்டிகஸ்: “நீர் எந்த வகையான கோட்பாடுகளை பற்றிக் கூறுகிறீர்?” என்று கேட்டான்.

ஜஸ்டின்: “நான் எல்லா கோட்பாடுகளையும் கற்றுக்கொள்ள முயற்சித்தேன்; ஆனால் தவறான அபிப்பிராயங்களைக் கொண்டவர்களைப் திருப்திப்படுத்தா விட்டாலும், கிறிஸ்தவர்களின் உண்மையான கோட்பாடுகளை நான் இறுதியாக ஒப்புக்கொண்டேன்” என்று பதிலளித்தார்.

ருஸ்டிகஸ்: “அந்த கோட்பாடுகள் உம்மைப் பிரியப்படுத்துகின்றனவா முற்றிலும் மோசமான மனிதனே?” என்று கேட்டான்.

ஜஸ்டின்: “ஆமாம், நான் சரியான கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதால்” என்று கூறினார்.

ருஸ்டிகஸ்: “அது என்ன கோட்பாடு?” என்று வினவினான்.

ஜஸ்டின்: “அதன்படி கிறிஸ்தவர்களின் கடவுளை வணங்குகிறோம், அவரே ஆதி முதல் இருந்த ஒருவராக நாங்கள் கருதுகிறோம், முழு படைப்பையும் உருவாக்கியவரும் வடிவமைத்தவரும், கண்ணுக்கு தெரிபவை மற்றும் தெரியாதவை போன்ற அனைத்தையும் சிருஷ்டித்தவருமாகிய தேவனுடைய குமாரனான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மனிதனாக அவதரிப்பார் என்று முன்கூட்டியே தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டவரும், இரட்சணியத்தின் அவதாரமாகவும் சீடர்களுக்கு நல்லவற்றையே போதிக்கும் ஆசானாய் இருப்பவரையே வணங்குகிறோம். நான் ஒரு சாதாரண மனிதனாகையால், அவருடைய எல்லையற்ற தெய்வீகத்தன்மையுடன் ஒப்பிடுகையில் நான் சொல்லக்கூடியது மிக அற்பமானது என்று நினைக்கிறேன், ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசன சக்தியை ஒப்புக்கொள்கிறேன், ஏனென்றால் அவரைப் பற்றி தீர்க்கதரிசனம் கூறப்பட்டது. இப்போது அவர் கடவுளின் மகன் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால், தீர்க்கதரிசிகள் மனிதர்களை போலவே அவர் தோன்றுவார் என்று தீர்க்கதரிசனம் கூறியதை நான் அறிவேன்” என்று கூறினார்.

2 ம் அத்தியாயம் – ஜஸ்டினிடம் தொடரும் விசாரணை

ருஸ்டிகஸ்: “நீங்கள் எல்லோரும் எங்கே கூடுகிறீர்கள்?” என்று கேட்டான்

ஜஸ்டின்: “எல்லோரும் எந்த இடத்தைத் தெரிவு செய்கிறார்களோ, அந்த இடத்தில்.” நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திப்பதை நீர் விரும்புகிறீர் தானே? அப்படியல்ல; ஏனென்றால், கிறிஸ்தவர்களின் கடவுள் ஒரு இடத்துக்கென்று மட்டுப் படுத்தப்பட வில்லை; ஆனால் அவரை கண்ணால் காணமுடியாது. வானகத்திலும் வையகத்திலும் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார், எல்லா இடங்களிலும் அவர் விசுவாசிகளால் வணங்கப்பட்டும் மகிமைப்படுத்தப்பட்டும் இருக்கிறார்” என்று கூறினார்.

ருஸ்டிகஸ்: “நீங்கள் எல்லோரும் எங்கு கூடுகிறீர்கள் என்று சொல்லும், அல்லது உங்களது விசுவாசிகளை எந்த இடத்தில் வைத்து இணைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டான்.

ஜஸ்டின்: “நான் முழுநேரமும் டிமியோடினியன் கடவையில் உள்ள மார்டினஸ் என்ற இடத்துக்கு அப்பால் வசிக்கிறேன், அத்தோடு (நான் இப்போது இரண்டாவது முறையாக ரோமில் வசிக்கிறேன்) அதைத் தவிர வேறு எந்த சந்திப்பையும் பற்றி எனக்குத் தெரியாது. யாராவது என்னிடம் வர விரும்பினால், நான் அவரிடம் சத்தியத்தின் கோட்பாடுகளைப் பற்றி கலந்துரையாட ஆவலாயுள்ளேன்” என்று கூறினார்.

ருஸ்டிகஸ்: “அப்படியானால், நீர் ஒரு கிறிஸ்தவன் தானே?” என்று கேட்டான்.

ஜஸ்டின்: “ஆம், நான் ஒரு கிறிஸ்தவன்” அன்று ஆணித்தரமாகக் கூறினார்.

3 ம் அத்தியாயம் – சாரிட்டன் மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள்

பின்னர் ருஸ்டிகஸ் சாரிட்டனை நோக்கி:”சாரிட்டன் நீர் சொல்லும், நீரும் ஒரு கிறிஸ்தவவன் தானே?” என்று கேட்டான்.

சாரிட்டன்: “நான் கடவுளின் கட்டளைப்படி ஒரு கிறிஸ்தவன்” என்றார்.

ருஸ்டிகஸ் சாரிட்டோ என்ற பெண்ணிடம்: “சாரிட்டோ, நீர் என்ன சொல்கிறீர்? என்று வினவினான்.

சாரிட்டோ: “நான் கடவுளின் கிருபையால் ஒரு கிறிஸ்தவப் பெண்” என்று பதிலளித்தாள்.

ருஸ்டிகஸ் யூல்பிஸ்டஸிடம்: நீர் எப்படி…? என்று கேட்டான்.

சீசரின் ஊழியரான யூல்பிஸ்டஸ்: “நானும் ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்துவால் விடுதலை பெற்றவன்; கிறிஸ்துவின் கிருபையால் நான் அதே நம்பிக்கையில் பங்கு கொள்கிறேன்” என்றார்.

ருஸ்டிகஸ் ஹைராக்ஸிடம்: “நீரும் ஒரு கிறிஸ்தவனா?” என்று கேட்க,

ஹைராக்ஸ்: “ஆம், நான் ஒரு கிறிஸ்தவன் தான், ஏனென்றால் நான் ஒரே கடவுளை வணங்கி, வழிபட்டு வருகிறேன்,” என்று பதிலாகக் கூறினார்.

ருஸ்டிகஸ்: “ஜஸ்டின் உங்களை கிறிஸ்தவர்களாக மாற்றினாரா?” என்று ஹைராக்ஸ் இடம் கேட்டான்.

ஹைராக்ஸ்: “நான் ஒரு கிறிஸ்தவன், எப்பொழுதும் ஒரு கிறிஸ்தவனாகவே இருப்பேன்” என்று கூறினார்.

பியோன் எழுந்து: “நானும் ஒரு கிறிஸ்தவன்” என்று அறிக்கையிட்டார்.

ருஸ்டிக்ஸ் அவர்களிடம்: “உங்களுக்கு யார் கற்பித்தார்கள்?” என்று கேட்டான்.

பியோன்: “எங்கள் பெற்றோரிடமிருந்து பாவத்தை ஒப்புக்கொள்ளும் நல்ல பழக்க வழக்கங்களைப் பெற்றுக்கொண்டோம்” என்று கூறினார்.

யூல்பிஸ்டஸ்: “ஜஸ்டினின் வார்த்தைகளை நான் மிகுந்த ஆவலுடன் செவிமடுத்தேன். ஆனால் என் பெற்றோரிடமிருந்து தான் நான் ஒரு கிறிஸ்தவனாக வாழக் கற்றுக்கொண்டேன்” என்றார்.

ருஸ்டிக்ஸ்: உமது பெற்றோர் எங்கே? என்று கேட்டான்.

யூல்பிஸ்டஸ்: “கயபடோசியாவில்” என்று கூறினார்.

ருஸ்டிகஸ்: “உமது பெற்றோர் எங்கே?” என்று ஹைராக்ஸிடம் கேட்டான்.

ஹைராக்ஸ்: “கிறிஸ்துவே நம்முடைய உண்மையான தகப்பன், அவர்மீது விசுவாசம் கொண்டவர் எங்கள் தாய்; என்னைப் பெற்றெடுத்த எனது பெற்றோர் இறந்து போய்விட்டனர்; நான் ஃப்ரிஜியாவில் உள்ள ஐகோனியத்திலிருந்து விரட்டப்பட்டபோது, இங்கு வந்தேன்” என்று கூறினார்.

ருஸ்டிகஸ் லைபீரியனஸிடம்: “நீர் என்ன சொல்கிறீர்? நீரும் ஒரு கிறிஸ்தவரா? (தெய்வங்களை) வணங்க உமக்கு இஷ்டமில்லயா?” என்று வினவினான்.

லைபீரியனஸ்: “நானும் ஒரு கிறிஸ்தவன், ஏனென்றால் நான் ஒரே உண்மையான கடவுளை விசுவாசித்து, ஆராதித்து, அவரையே வணங்குகிறேன்” என்று பதிலளித்தார்.

4 ம் அத்தியாயம் – ருஸ்டிக்கஸால் கிறீஸ்தவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது

ருஸ்டிகஸ்: “ஜஸ்டின், நன்றாகக் கேளும்! கற்றவர் என்று உங்களை அழைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு உண்மையான கோட்பாடுகள் தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; நீங்கள் துவம்சம் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டால், உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

ஜஸ்டின்: “நான் இந்த விடயங்களை சகித்துக் கொண்டால், அவருடைய வெகுமதிகள் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் அறிவேன், இவ்வாறு வாழ்ந்த அனைவருக்கும், உலக வாழ்க்கை நிறைவில் அவர்களுக்கு தெய்வீக தயவு கிடைத்திருக்கிறது” என்று பதிலளித்தார்.

ருஸ்டிகஸ்: “அப்படியானால், நீங்கள் சில பிரதி உபகாரங்களைப் பெறுவதற்காக பரலோகத்திற்கு போவீர்கள் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டான்.

ஜஸ்டின்: “நான் அப்படி நினைக்கவில்லை, ஆனால் எனக்குத் தெரியும், அதை முழுமையாக நம்ப நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்” என்றார்.

ருஸ்டிகஸ்: “அப்படியானால், இப்போதைய விஷயத்திற்கு வருவோம், ஏனென்றால் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அனைவரும் ஒன்றாகக் கூடி தெய்வங்களுக்கு ஒரே உடன்படிக்கையுடன் ஒப்புக்கொடுங்கள்” என்றான்.

ஜஸ்டின்: “வலுவான சிந்தனையுள்ள எவரும் பக்தியுடைமையால் இழிவுபடுத்தப்படுவதில்லை” என்று கூறினார்.

ருஸ்டிகஸ்: “நீங்கள் கீழ்ப்படியாவிட்டால், ஈவிரக்கமின்றி தண்டிக்கப்படுவீர்கள்.” என்று எச்சரித்தான்.

ஜஸ்டின்: “நாம் தண்டிக்கப்பட்டிருந்தாலும் கூட, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக, ஜெபத்தின் மூலம் நாம் இரட்சிக்கப்படுவோம், ஏனென்றால் இது நம்முடைய கர்த்தராகிய இரட்சகரின் மிகவும் கண்டிப்பான மற்றும் உலகளாவிய நடுத்தீர்வை ஆசனத்தில் நமக்கு இரட்சணியமும் தன்னம்பிக்கையும் நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார்.

மற்றைய வேதசாட்சிகளும் இவ்வாறே சொன்னார்கள்: “நாங்கள் கிறிஸ்தவர்களாகத் தான் இருப்போம், நீர் விரும்புவதைச் செய்யும், எக்காரணம் கொண்டும் நாம் சிலைகளுக்குப் பலி ஒப்புக்கொடுக்க மாட்டோம்” என்று ஒரே குரலாகச் சொன்னார்கள்.

5 ம் அத்தியாயம் – தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது

ருஸ்டிகஸ்: “கடவுள்களுக்கு பலி ஒப்புக்கொடுக்கவும், ஆளுனரின் கட்டளைக்கு கீழ்ப்படியவும் மறுத்தவர்கள், சட்டத்தின் படி, சாட்டைகளால் துவம்சம் செய்யப்பட்டு, அவர்களின் தலைகள் துண்டிக்கப்படும்” என்று கூறி, தண்டனைகளை அறிவித்தான்.

புனித வேதசாட்சிகள் கடவுளை மகிமைப்படுத்திய பின், வழக்கமாக தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே அவர்களது தலைகள் துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரட்சகருக்கு அளித்த வாக்குறுதியின் ஊடாக தங்கள் சாட்சியத்தை பூர்த்தி செய்தனர். பக்திமான்கள் சிலர் கொல்லப்பட்ட வேதசாட்சிகளின் உடல்களை இரகசியமாக அங்கிருந்து அகற்றி, பொருத்தமான இடத்தில் வைத்தார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை அவர்களுடன் சேர்ந்து பணியாற்றியது. அவர்களுக்கு என்றென்றும் மகிமை உண்டாகக்கடவதாக. ஆமென்.