Ignatius of Antioch, Epistle to the Trallians

புனித இக்னேசியஸ் டிராலியர்களுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள சகோதர சகோதரிகளே, நீங்கள் இயேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய சர்வேசுரனின் அன்பில் திளைத்து இருக்கிறீர்கள். அவர் தேர்ந்தெடுத்த மற்றும் விலைமதிப்பற்ற உடைமைக்கு நீங்கள் முழுமையான தகுதியானவர்கள். இயேசுக்கிறிஸ்துவின் பாடுகளின் வழியாக, உங்களுக்கு உள மற்றும் உடல் அமைதி இருக்கிறது. நமது மீள உயிர்த்தெழுதலின் மூலம் நாம் அவரிடம் மீண்டும் செல்வோம் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கிறது. அப்போஸ்தலர்கள் செய்ததைப் போல, இறைவனின் திருநாமத்தால் நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களுக்கு எல்லாவிதத்திலும் மகிழ்ச்சி கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.

1. தேவனாகிய இறைவன் மற்றும் இயேசுக்கிறிஸ்துவின் சித்தத்தின் பேரில், உங்கள் ஆயர் பாலிபியஸ் ஸ்மிர்னாவில் வசிக்கும் என்னிடம் வந்துள்ளார். இயற்கையான பழக்க தோஷத்தினால் அல்ல, இயற்கையாகவே பொறுமையினால் நிறைந்து, அந்தப் பொறுமையினூடேயே நீங்கள் அனைத்தையும் கையாளுகிறீர்கள் என்று அவர் என்னிடம் கூறுகிறார். இயேசுக்கிறிஸ்துவுக்காக எனது கொள்கையில் உறுதியாக இருந்த போதிலும் அவர் எனக்கு மிகுந்த ஆறுதலளித்தார். இதனால் அவர் முழு சமூகத்தினதும் கண்ணாடியாக இருந்ததைக் காண முடிந்தது. நான் கேள்விப் பட்டதைப் போல, நீங்கள் கடவுளைப் பின்பற்றுபவர்கள் என்பதை அறிந்து, உங்கள் ஆன்மீக கிருபையை அவர் மூலமாக ஏற்றுக் கொண்டதற்கு நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

2. ஏனென்றால், இயேசுக்கிறிஸ்துவைப் போல நீங்கள் உங்கள் ஆயருக்கு கீழ்ப்படியும் போது, நீங்கள் ஒரு மனித வாழ்க்கை வாழவில்லை என்பதை நான் காண்கிறேன், ஆனால் நமக்காக மரித்த இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கையின் உதாரணமாகவே உங்களை நான் காண்கிறேன். அவர் மீதுள்ள நம்பிக்கையால், நீங்கள் மரணத்தில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். அப்படியானால், நீங்கள் தொடர்ந்து ஆயரை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் இஷ்டத்துக்கு எதுவும் செய்யக்கூடாது. நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களைப் போல நீங்கள் குருமாருக்குக் கீழ்ப்படியுங்கள். நாம் அவரில் வாழ்ந்தால், நாம் நல்லவர்கள் என்பதைக் காண்போம். இயேசுக்கிறிஸ்துவின் தேவ இரகசியங்களின் ஊழியர்களாக, கோனகத் தொண்டர்கள் முடிந்தவரை அவர்களை மகிழ்விக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஆகாரத்திற்க்காக உழைக்கும் ஊழியர்கள் அல்ல, தேவனுடைய சபையின் ஊழியர்கள். நெருப்பிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது போல், அவர்கள் எல்லா அவதூறுகளையும் தவிர்க்க வேண்டும்.

3. கோனகத்தொண்டர்கள் ஆயர்களை பிதாவைப் போலவே மதிக்கிறார்கள். மதகுருமார் கடவுளின் திருச்சபையையும் மற்றும் அப்போஸ்தலர்களையும் மதிக்கிறார்கள். எனவே அனைவரும் கோனகத் தொண்டர்களை இயேசுக் கிறிஸ்துவைக் கணம் பண்ணுவதை போல் கணம் பண்ண வேண்டும். இவை தவிர, திருச்சபை என்று அழைக்கக் கூடியது என்பது எதுவும் இல்லை. இதையிட்டு நான் உணர்வது போலவே நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். என்னிடம் உங்கள் ஆயரின் மேல் காட்டும் உங்கள் அன்பின் மாதிரியை நான் உணர்ந்தேன். அவரது நடத்தை ஒரு சிறந்த பாடம். அவருடைய பணிவு தான் அவருடைய சக்தி. அவிசுவாசிகள் கூட அவரைப் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். நான் உங்களை நேசிப்பதால், உங்களை மென்மையாக நடத்துகிறேன். ஆனால் அவருக்காக நான் இன்னும் ஆழமாக எழுத முடியும். இருப்பினும், தற்போது நான் ஒரு கைதியாக இருப்பதால், அப்போஸ்தலனாக இருந்த போது செய்ததைப் போல உங்களுக்கு நான் கட்டளையிட முடியாது.

4. கடவுளின் கிருபையால் நான் ஞானத்தில் குறைந்தவன் அல்ல. ஆனால் எனது வார்த்தைகள் மூலம் நான் பெருமை கொள்கிறேன் என நீங்கள் நினைக்கக்கூடாது என்பதற்காக நான் என் வார்த்தைகளில் மிகவும் கவனமாய் இருக்கிறேன். உண்மையில், என்னை கேலி செய்பவர்கள் மீது எனது கவனத்தை செலுத்த நான் முன்பை விட சற்று தயங்க வேண்டும். அவர்களின் வார்த்தைகள் என்னைத் தாக்குகின்றன. நான் பாடுகளை நேசிப்பவன். ஆனால் நான் அதற்கு தகுதியானவனா என்று எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலான மக்கள் நான் படும் பிரயாசையை கண்டு கொள்வதில்லை. ஆனால் எனது கோணத்தில் இருந்து பார்க்கும் போது அது தவிர்க்க முடியாத காரணியாகி விடுகிறது. இந்த உலகத்தின் இளவரசனை நான் தாழ்மையுடன், நியாயமான முறையிலும் வெல்ல வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

5. பரலோக யதார்த்தங்களைப் பற்றி நான் உங்களுக்கு எழுதக்கூடாது என்று அர்த்தமல்ல. ஆனால் உங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு எதிராக நான் தீங்கு விளைவித்து விட்டேனோ என்று அஞ்சுகிறேன். ஆகவே எனது விசுவாசத்தின் தன்மையையும் அதன் ஆழத்தையும் பற்றி மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் உங்களால் சீரணிக்க முடியாத காரணிகளின் நிமித்தம் நீங்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகலாம். என்னைப் பொறுத்தவரை, நான் சங்கிலியால் கட்டுண்டு இருப்பதால், நான் ஒரு சீடனைப் போன்று நடிக்கவில்லை. இருப்பினும், தேவதூதர்கள் மற்றும் சேனைத் தலைவர்கள், கண்களுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத உலக மர்மங்களைப்பற்றி என்னால் சிந்திக்க முடியும். கடவுளை இழந்து விடக்கூடாது என்றால், நாம் பலவற்றை இழக்க நேரிடும்.

6. ஆகையால், வெளிநாட்டு புறமதத்தின்ஆகாரத்தை நிராகரித்து, முற்றிலும் கிறிஸ்தவ ஆகாரத்தை மட்டுமே உட்கொள்ளவும் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். பேசுவது நானல்ல, அது இயேசுக்கிறிஸ்துவின் அன்பினால் அருளப்பட்டதாகும். ஏனென்றால், மக்கள் தங்கள் துர்நடத்தைகளையிட்டு எந்தக் குறிப்பையும் விட்டுவைக்காதது போல, அவர்கள் இனிப்பு திராட்சை இரசம் கலந்து ஒரு கொடிய மருந்தைக் கொடுக்கிறார்கள். பிறமதத்தினர் இயேசுகிறிஸ்துவின் திரு இரத்தத்தோடு விஷத்தை கலந்து விடுகிறார்கள். பின்னர், அதனால் ஏற்படும் அபாயகரமான பின்விளைவுகளைப் பற்றிய எவ்வித சிந்தனையோ பயமோ இல்லாமல், ஒரு மனிதன் தன்மரணத்தையே பானமாக அருந்துகிறான்.

7. அத்தகையவர்களிடமிருந்து கவனமாக இருங்கள். நீங்கள் அகங்காரம் பிடித்தவர்கள் என்று உலகுக்குக் காட்ட விரும்பாவிடில், அப்போஸ்தலர்கள் மற்றும் இயேசுக்கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் ஊடாக, நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சாலவும் சிறந்தது. புனிதஸ்தலத்தில் இருந்து வெளியே வரும் எவரும் தூய்மையானவர்கள், அதேவேளை, புனிதஸ்தலத்திற்கு வெளியே இருக்கும் எவரும் அசுத்தமானவர்கள். ஆகவே, ஆயர்மார், குருமார், கோனகத் தொண்டர்கள் மற்றும் புனித ஸ்தலங்களுக்கு வெளியே, அதற்கு புறம்பாக காரியமாற்றுபவர்களுக்கு தெளிவான மனசாட்சி இல்லை என்றே கூறலாம்.

8. நான் இப்படிப் பேசுவதால், உங்களிடையே இது போன்ற சுபாவம் எதுவும் இல்லை என்று நான் கேள்விப்பட்டதால் அல்ல. எனினும் நான் இப்போது உங்களை நேசிக்கிறேன். பிசாசின் கொடிய சூழ்ச்சிகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறேன். எனவே, பொறுமையின் கவசத்தை அணிந்து, விசுவாசத்தால் புத்துணர்ச்சி பெறுங்கள். இயேசுக்கிறிஸ்துவின் அன்பிலும், அவரது புனித சரீரத்திலும், அவரது திரு இரத்தத்திலும் நித்திய மகிழ்ச்சியைப் பெறுங்கள். உங்கள் அயலவரை எப்போதும் இழிவாகப் பார்க்காதீர்கள். ஒரு சிலரின் முட்டாள்தனத்தின் காரணமாக, உங்கள் நீதிசார்ந்த சமூகத்தை அவமானப்படுத்தும் வாய்ப்பை பலமத வழிபாட்டாளர்களுக்கு வழங்க வேண்டாம். காரணமின்றி என் பெயரை மற்றவர்களுக்கு முன்னால் களங்கப்படுத்துவோருக்கு கேடு வருவது திண்ணம்!

9. ஆகையால், தாவீதின் வம்சத்தில் இருந்து வரும் மரியாளின் குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவைத் தவிர வேறு யாராவது உங்களிடம் பேசும் போது, உங்கள் காதுகளை மூடிக்கொள்ளுங்கள். அவர் உண்மையாகவே பிறந்தார், உண்டார், குடித்தார். அவர் உண்மையிலேயே போஞ்சியு பிலாத்துவின் கீழ் துன்புறுத்தப்பட்டார். உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்ட அவர், ‘வானத்திலும் பூமியிலும்’ இருந்தவர்களுக்கு முன்பாகவே இறந்தார். அதேபோல், அவர் தனது பிதாவின் வல்லமையால் உயிர்த்தெழுப்பப்பட்டார். அதேபோல், அவருடைய பிதாவாகிய சர்வேசுரன், இயேசுக்கிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்தது போல, தம்மை நம்புகிறவர்களையும் உயிர்த்தெழச்செய்வார். அவர் இன்றி நமக்கு உண்மையான வாழ்க்கை இல்லை.

10. சிலரின் கூற்றுப்படி, அவர்கள் விசுவாசமற்றவர்களாக இருந்தால் அல்லது தேவபக்தியற்றவர்கள் என்றால், அவர் பட்ட துன்பங்கள் அனைத்தும் வீணே என்பது போலத் தெரிந்தாலும் – அவர்களே அவர்களது வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள் – நான் ஏன் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருக்கிறேன்? நான் ஏன் என்னை மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்? அப்படியானால், நான் எந்த நோக்கமும் இன்றி இறக்கக்கூடும். அப்படியாயின், நான் கர்த்தரின் கிருபைகளுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்பவனாகவே கருதப்படுவேன்.

11. கேடு விளைவிக்கும் பழங்களை கொடுக்கும் தீய மரங்களைத் தவிர்க்கவும். இந்த பழத்தை ருசிப்பது என்பது நிச்சயம் மரணத்தைக் கொண்டு வரும். இவை இறை தந்தையினால் அளிக்கப்பட்டவை அல்ல. அவை பிதாவின் கனிகளாக இருந்தால், அவை சிலுவையின் கிளைகளாகத் தோன்றும். அது சர்வத்துக்கும் அழியாமல் நிலைத்திருக்கும். அவர் உங்களை அங்கத்தவர்களாக, தனது சிலுவையினூடாக அழைக்கிறார்; அது அவருடைய பாடுகளின் காரணமாகவே. தலைவன் இன்றி உறுப்பினர்கள் என்பவர்களால் எவ்வித பயனுமில்லை. ஏனென்றால், அவர்களை ஒன்றாக வைத்திருக்க வேண்டி, அவரே வாக்குறுதி அளித்தார். ஏனென்றால் அவரே தலையாய இறைவன்.

12. ஸ்மிர்னாவிலிருந்து நான் இந்த வாழ்த்துக்களை எழுதுகிறேன். என்னுடன் இருக்கும் இறை அரசின் மற்றைய திருச்சபையின் வாழ்த்துக்களும் இவற்றில் அடங்கும். அவர்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பலவழிகளில் எனக்கு ஆறுதல் அளித்துள்ளனர். எனது பந்தத்தினூடாக – இயேசுக்கிறிஸ்துவுக்காகவும், நான் இறை பாதத்தை அடைய வேண்டும் என்பதற்காகவும் இதை ஒரு விண்ணப்பமாய் ஏற்குமாறு உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். ஒருவருக்கொருவர் இணக்கப் பாடோடு இருங்கள். பொதுவாக செபங்களின் ஊடே ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிக்கவும். பிதாவாகிய சர்வேசுரனுக்கும், இயேசுக்கிறிஸ்துவுக்கும் அப்போஸ்தலர்கள் பயபக்தியுடன் பணிந்து நடந்தது போல, ஆயர்களின் ஆன்ம காரியங்களை முன்னெடுத்துச் செல்ல, குருமார் மற்றும் நீங்கள் அனைவரும் உங்களால் இயன்றவரை உதவ வேண்டும். எனது கடிதத்தின் ஊடாக, தாராள மனப்பான்மையைக் கருத்தில் கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த கட்டுரை உங்களுக்கு எதிராக சான்று பகராது. கடவுளின் கருணையால் உங்கள் நற்செயல்கள் எனக்கு தேவை என்பதற்காக, நீங்கள் எனக்காக மன்றாடுங்கள். முடிவுக்குத் தகுதியானவன் என்றால், நான் கண்டிக்கப்பட மாட்டேன். ஆகவே அதற்காக இறைஞ்சுகிறேன்.

13. ஸ்மிர்னாவாசிகளும் எபேசியர்களும் உங்களை வாழ்த்துகிறார்கள். உங்கள் பிரார்த்தனைகளில் சிரிய திருச்சபையை நினைவுகூறுங்கள். ஏனெனில், நானும் அந்தத் திருச்சபையின் ஒரு உறுப்பினர் என்பதையும், அவர்களுடன் ஒப்பிடுகையில், நான் மிகவும் தாழ்மையானவன் என்பதையும், அந்தத் திருச்சபையின் அளவுக்குத் தகுதியற்றவன் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினால் நான் விடை பெறுகிறேன். இறை கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது போல், உங்கள் ஆயர்களுக்கும் ஏனைய மதகுருமாருக்கும் பணிந்து நடவுங்கள். பிரிவினையற்ற மனதுடன் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். நான் கடவுளோடு இருக்கும் போதும், ஏன், இப்போதும் கூட, என் வாழ்க்கையை உங்களுக்காக மனமுவந்து அர்ப்பணிக்கிறேன். நான் இன்னும் ஆபத்தில் இருந்து விடுபடவில்லை. ஆனால், பிதாவாகிய சர்வேசுரன் உங்கள் மன்றாட்டுகளுக்கு, இயேசுக்கிறிஸ்து மூலம் பதிலளிப்பார் என்று நீங்கள் நம்பலாம். அவர் முன்பாக நாம் நிரபராதிகள் என்று கணக்கிடப்படுவோமாக.