Ignatius of Antioch, Epistle to the Smyrnaeans

புனித இக்னேசியஸ் ஸ்மிர்னாசபைக்கு எழுதிய கடிதம்

இக்னேஷியஸ் தியோபொரோஸ் ஆகிய நான் பிதாவாகிய சர்வேசுரனின் மற்றும் அவரின் பேரன்பின் சுதனாகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையால் ஆசியாவில் இயங்கும் ஸ்மிர்னாவின் திருச்சபைக்கு எழுதும் கடிதமாகும். கறைபடாத மனதோடு தேவனின் வார்த்தையால் கிடைக்கும் அனைத்து மகிழ்ச்சியையும் நீங்கள் பெற நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். உங்கள் சபையானது எவ்வித குறைகளும் இன்றி, உயர்ந்த வெகுமதிகளோடும், அதீத கருணையோடும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. உங்கள் சபையானது விசுவாசமும் தாராள மனப்பான்மையாலும் நிறைந்து காணப் படுகிறது. இது கடவுளுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். அதேவேளை, பரிசுத்த வாழ்வுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.

1. அத்தகைய ஞானத்தால் உங்களை ஊக்கப்படுத்திய இயேசுக்கிறிஸ்துவின் கிருபையையிட்டு நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை தங்கள் உடலாலும் ஆத்துமத்தாலும் சிலுவையில் அறைந்த மக்களைப் போலவே, அசைக்க முடியாத விசுவாசத்தினால் நீங்கள் பரிபூரணமாகி விட்டீர்கள் என்பதையும், உங்கள் அன்பு, கிறிஸ்துவின் இரத்தத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நான் நன்கு அறிவேன். எமது இறைவனைப் பொறுத்தவரை, அவர் சரீரத்தால் அவதரித்ததன் மூலமாக அவருடைய சித்தத்தினாலும் வல்லமையினாலும் தாவீதின் குமாரன் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். அவர் உண்மையிலேயே கன்னிமரியாள் என்ற கன்னித் தாயின் உதிரத்தில் அவதரித்து, யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் பழக்கவழக்கங்களை முறையாக நடைமுறைப்படுத்த இதைச் செய்தார். அவர் போஞ்சியு பிலாத்து மற்றும் ஆளுனரான ஏரோதின் கட்டளைகளின் பிரகாரம் சிலுவையில் அறையப்பட்டார். அவருடைய மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பாடுகளின் பலனே நாம் அனைவரும். அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம், யூதராக இருந்தாலும், பிறவினத்தாராக இருந்தாலும், புனிதர்களுக்கும் விசுவாசிகளுக்கும் ஒரே தரமுடையதாக இருக்கும் விதத்திலும், தனது ஒரே சரீரமாக இருக்கும் வண்ணம் அவருடைய திருச்சபையை உதிக்கச்செய்தார்.

2. ஏனென்றால், எமது இரட்சணியத்துக்காக அவர் அனைத்தையும் செய்திருக்கிறார். அவர் உண்மையிலேயே பாடுகளை அனுபவித்து, மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். சில விசுவாசம் இல்லாதவர்கள் சொல்வது போல்; கடவுள் அவர்களைப் போலவே துன்பத்தை அனுபவிக்கவில்லை. ஏனென்றால், உடல் இல்லாமல் இருப்பது அரூபிகளுக்கு சமனானதாகும். அது அவர்களின் விதியாகக் கருதப்படுகிறது.

3. என்னைப்பொறுத்தவரை, அவர் உயிர்த்தெழுந்த பிறகும் அவர் தமது சரீரத்துடனேயே இருந்தார் என்பதை நான் அறிவேன். அது உண்மை என்று நான் நம்புகிறேன். அவர் பேதுருவுடன் இருந்தவர்கள் அருகில் வந்தபோது, அவர்களை நோக்கி: “என்னைத் தொடவும், நான் உடல் இல்லாத ஆன்மா அல்ல என்பதை உணருங்கள்,” என்று கூறியிருந்தார். அவர்கள் அவரை தமது கைகளால் தொட்டு, அவருடைய சரீரத்தையும் இதயத்துடிப்பையும் உணர்ந்த பின்னரே நம்பினார்கள். இதனால் தான் அவர்கள் மரணத்தை வெறுத்து, மரணத்தைவிட தாம் உயர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தினார்கள். அவர் தம்முடைய பிதாவுடன் ஒரே பொருளானவர். ஆனால் அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, சரீரத்தால் ஆன மற்றவர்களைப் போலவே அவர்களுடன் உண்டு குடித்தார்.

4. அன்புள்ள சகோதர சகோதரிகளே, நீங்கள் இவற்றை நம்புகிறீர்கள் என்று எனக்குத் தெரிந்தாலும் நான் உங்களை எச்சரிக்கிறேன். மனிதர்களின் வடிவத்தில் உலாவும் மிருகங்களைப்பற்றி நான் உங்களுக்கு முன்னறிவித்திருந்தேன். நீங்கள் அவ்வாறு செய்ய முடியுமாக இருந்தால், அவர்களை சந்திக்காமல் இருப்பது மேல். அப்படியாயின், அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எனினும், நீங்கள் அவர்களுக்காக மன்றாட வேண்டும். கடினமாக இருந்தாலும், அவர்கள் எப்படியாவது அவர்களது செயல்கள் குறித்து மனவருத்தப்படுவார்கள். நம்முடைய உண்மையான சீவியத்துக்கு ஒரே வழியான இயேசுக்கிறிஸ்துவால் இதைச்செய்ய முடியும். நம்முடைய கர்த்தர் செய்ததைச் செய்யமட்டுமே நான் அவரில் ஒன்றித்து இருக்கிறேன். அப்படியானால், நான் ஏன் என் உயிரை நெருப்பிற்கும், வாளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் அர்ப்பணித்து உயிர் துறக்கவேண்டும்? இதில் முக்கியத்துவம் பெறுவது என்ன வென்றால், வாள் அருகில் இருக்கும் போது, ​​அது கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறது. மிருகங்களிடையே இருப்பதுகூட, கடவுளுடன் இருப்பது போலத்தான் இருக்கும். இது மட்டுமே எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் நான் துன்பங்களை அனுபவிக்க சித்தமாக இருக்கிறேன். நான் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறேன். பரிபூரண மனிதராக இருக்கின்ற அவரே எனது பலம்.

5. சிலர் கடவுளை அறியாததால் அவரை நிராகரிக்கிறார்கள். அல்லது அவர்கள் சத்தியத்தை விட மரணத்தை நேசிப்பதால் அவர்கள் கடவுளால் நிராகரிக்கப் படுகிறார்கள். இந்த மனிதர்கள் தீர்க்கதரிசனங்களினாலோ, மோசேயின் சட்ட சாசனத்தாலோ, குறைந்தது, நற்செய்தியினாலோ, அல்லது நம்மில் எவராலும் குறிப்பாக அனுபவித்த துன்பங்களைப் பற்றியோ அறிந்தும் கூட அவர்கள் நம்பவில்லை. அவர்கள் அவரைப்பற்றி நினைப்பது போல் நம்மைப்பற்றியும் நினைப்பார்கள். எப்படியிருந்தாலும், ஒரு மனிதன் என்னைப்பற்றி நல்ல விதமாக நினைக்கும் போது, அவன் என் இறைவன் உண்மையான சரீரத்தோடு தான் இருக்கிறார் என்பதனை மறுப்பானானால் என்ன பயன் ஏற்படப்போகிறது? இதை மறுக்கும் எவரும் அவரை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள். அவ்வாறு நிராகரிப்பவர்களும் அக்கணமே இறந்து விட்டதாகவே கருதப்படுவர். அத்தகைய மனிதர்களின் பெயர்களை, அவர்கள் நம்பாதவர்களாக இருக்கும் வரை, என்னால் குறிப்பிடப்படுவது சரியானது என்று நான் நினைக்கவில்லை. உண்மையில், எமது மறு உயிர்த்தெழுதலில் அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நான் அவர்களை ஞாபகத்தில் கொள்வதில்லை என்று உறுதியாய் இருக்கிறேன்.

6. எந்த ஒரு மனிதனாலும் ஏமாற்றப்படாமல் கவனமாக இருங்கள். நீங்கள் கிறிஸ்துவின் திரு இரத்தத்தை நம்பவேண்டும் என்றால், பரலோக வாழ்வில் நிலைத்திருப்பவர்களுக்கும், மகிமையுடைய தேவதூதர்களுக்கும், கண்ணுக்கு புலப்படும் அல்லது புலப்படாத, மற்றும் அரச அதிகாரிகளுக்கும் கூட தீர்ப்பு வழங்கப்படுவதை அங்கீகரிக்க வேண்டும். தகுதியுள்ளவர் எதையேனும் பெறும் போது, நீங்கள் அதற்குத் தடையாக இராதீர்கள். ஒருவரது பதவியின் காரணமாக அவர் எவ்விதத்திலும் பெருமைப்படலாகாது. விசுவாசமும் தாராள மனப்பான்மையுமே அனைத்தையும் விட மேலானது. அவற்றை விரும்புவோருக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. கடவுளின் அருள் நமக்கு சாதகமாக இருக்கும் போது, எமது முரண்பாடான கோட்பாடுகள் அவரின் மனதை எவ்வாறு நோகச் செய்கின்றன என்பதைக் கவனியுங்கள். தாராள மனப்பான்மை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. விதவைகள், அனாதைகள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறைக் கைதிகள், பசித்திருப்போர் அல்லது தாகமுற்றிருப்போர் மீது அவர்களுக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை. திவ்விய நற்கருணை என்பது, நம்முடைய இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருவுடல் என்பதை அவர்கள் அங்கீகரிக்காத படியால், அவர்கள் திவ்விய நற்கருணை பெறுவதையும் செபிப்பதையும் தவிர்க்கிறார்கள். திவ்விய நற்கருணை மற்றும் செபங்களில் இருந்து அவர்கள் விலகுகிறார்கள். ஏனென்றால் திவ்விய நற்கருணை என்பது நம்முடைய இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருவுடல். அது நம்முடைய பாவங்களுக்காக துன்பப்பட்ட திருச்சரீரம். அவர் பிதாவாகிய சர்வேசுரனின் கிருபையினால் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவருமாக இருக்கிறார்.

7. அதேபோல், கடவுளின் வெகுமதியை நிராகரித்ததால், இந்த மக்கள் தமது வீண் பெருமிதத்தால்அழிந்து போகிறார்கள். அன்பும் உயிர்த்தெழுதலும் அவர்களுக்கு எல்லாவிதத்திலும் சிறப்பாக அமையும். அத்தகைய மனிதர்களிடமிருந்து விலகி இருப்பது, மற்றும் அவர்களைப்பற்றி தனிப்பட்ட முறையில் அல்லது பொது இடங்களில் பேசாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. துன்பங்களை துச்சமாக மதித்து, உயிர்த்தெழுதலை முழுமை அடையச் செய்த தீர்க்க தரிசிகளின் போதனைகளுக்கும், குறிப்பாக நற்செய்திக்கும் இசைவாக எமது வாழ்வை கொண்டு செல்வது மிகவும் நன்மை பயக்கக்கூடிய செயலாகும்.

8. பிரச்சனையின் ஆதாரமாக இருப்பது வேற்றுமை. ஆகவே அதிலிருந்து தூர விலகி இருங்கள். இயேசுக்கிறிஸ்து தம் பிதாவைப் பின்பற்றியது போலவும், மதகுருமார் அப்போஸ்தலர்களைப் பின்தொடர்ந்தது போலவும், நாம் அனைவரும் ஆயரைப் பின்பற்றுகிறோம். நீங்கள் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருப்பது போல, கோனகத்தொண்டர்களுக்கும் மதிப்பளிக்கவும். எந்தவொரு நபரும் ஆயரின் அனுமதி இன்றி சபையின் எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது. திவ்விய நற்கருணை ஆயர் அல்லது குருமார் கொடுத்தால் மட்டுமே செல்லுபடியாகும். இயேசுக்கிறிஸ்து எங்கு எழுந்தருளியிருந்தாலும், அங்கு ஆயரின் பிரசன்னம் இருப்பது அவசியம். கத்தோலிக்கத் திருச்சபை இருப்பதைப் போலவே அதன் மக்களும் இருக்க வேண்டும். ஆயரின் அனுமதியின்றி திவ்விய நற்கருணை மற்றும் ஞானஸ்நானம் கொடுப்பது அல்லது நிறைவேற்றுவது சட்டபூர்வமானது அல்ல. மறுபுறம், அவரைப் பிரியப் படுத்துவது கடவுளுக்குப் பிரியமானது. எனவே, நீங்கள் செய்யும் எதுவும் பாதுகாப்பானதாகவும் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும் இருக்க வேண்டும். 

9. இப்போது முதல், அமைதியாக இருப்பது நன்மைக்குரியது. இன்னும் காலம் இருப்பதனால் நம் மனதை கடவுள் மீது செலுத்துவது நல்லது. கடவுளையும் ஆயரையும் ஏற்றுக் கொள்வது ஒரு நல்ல விடயம். ஆயரை மதிக்கும் ஒரு மனிதன் நிச்சயமாக கடவுளால் போற்றப் படுகிறான். ஆயருக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஒரு மனிதன் சாத்தானுக்கு சேவை செய்கிறான். நீங்கள் கிருபையைப் பெறத் தகுதியுள்ள அனைவருடனும் ஒன்றித்து இருங்கள். நீங்கள் என்னை எல்லாவகையிலும் ஆறுதல் படுத்தியுள்ளீர்கள். ஆகவே இயேசுக் கிறிஸ்துவும் உங்களை ஆறுதல்படுத்தட்டும்.  நான் உங்களோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் என்மீது அன்பு செலுத்தினீர்கள். இறைவனும் அவ்வாறே உங்களிடம் அன்பு கூருவாராக. நீங்கள் அவருக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டால், ஒரு நாள் நீங்கள் நிச்சயம் அவருடன் இருப்பீர்கள்.

10. நீங்கள் பிலோவையும் ரேயஸ் அகடோபஸையும் கடவுளின் ஊழியர்களாக ஏற்றுக்கொண்டது நல்ல விடயம். கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற அவர்கள் என்னைப் பின் தொடர்ந்தார்கள். நீங்கள் அவர்களுக்கு அளித்த ஆறுதலுக்காக அவர்கள் உங்கள் சார்பாக இறைவனுக்கு நன்றி கூறுகிறார்கள். நீங்கள் கொடுத்த எதையும் நீங்கள் இழந்துவிட மாட்டீர்கள். உங்களுக்காகவும் என் கடமைகளுக் காகவும் நான் என் உயிரை தியாகம் செய்யமாட்டேன். நீங்கள் அதை வெறுக்க வேண்டாம். நீங்கள் அதைப்பற்றி வெட்கப்படத் தேவையில்லை. அப்போது  உண்மையுள்ள இயேசுக்கிறிஸ்து உங்களைப்பற்றி வெட்கப்படமாட்டார்.

11. உங்கள் பிரார்த்தனை சிரியாவின் அந்தியோகியாவில் உள்ள திருச்சபையை நெருங்கியுள்ளது. நான் அந்த சபையைச் சேர்ந்தவன். என்னுடன் இருப்பவர்களின் மத்தியில் மிகக் குறைவானவன் நான். இறைவனுக்கு நன்றி செலுத்த மிகவும் கடப்பாடு கொண்ட நான் அங்கிருந்துதான் வந்துள்ளேன். உங்கள் எல்லோருக்கும் எனது தாழ்மையான வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மன்றாட்டுகளின் ஊடாக இறைவனை அணுக முடியும் என்று இறை கிருபையால் எனக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது எனது தகுதிகளால் கிடைக்கப்பெற்றது அல்ல. அது கடவுளின் கிருபையால் அருளப்பட்டது. இறுதி அருள் எனக்கு அருளப்பட வேண்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன். பரலோகத்திலும் பூலோகத்திலும் நீங்கள் உங்கள் கடமையைச் சரிவர செய்திருந்தால், உங்கள் திருச்சபை இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற சிரியாவுக்குச் செல்லுமுகமாக, கடவுளின் தூதராக நியமிக்கபட்டிருக்க வேண்டும். அங்கு சென்று அவர்களை உண்மையான முதிர்ச்சிக்குத் திரும்பச்செய்து, அவர்களின் ஒன்றுபட்ட நன்னடத்தையை மீட்டெடுத்து, அவர்களின் சமாதானமிக்க வாழ்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும். உங்களுள் ஒருவரை தெரிவு செய்து, ஒரு கடிதத்துடன் அனுப்புவது தகுதியான ஒரு செயலாக எனக்குத் தோன்றியது. அவ்வாறு செய்யும் போது, அவர்களிடம் ஏற்பட்டுள்ள சமாதானத்தின் ஊடாகவும், அவர்களின் செபங்கள் மூலமான அணுகுமுறையோடு அவர்கள் கடவுளை மகிமைப்படுத்த முடியும். உங்கள் முழுமை மற்றும் சரியான தீர்வுகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் நன்மை செய்ய மட்டுமே தயாராக இருக்கும் பட்சத்தில், அதற்கு ஒத்தாசையாக இறைவன் உங்களுக்கு உதவ எப்போதும் சித்தமாக இருப்பார்.

12. ட்ரோவாஸில் உள்ள சகோதரர்கள் அன்போடு உங்களுக்குத் தலை வணங்குகிறார்கள். என்னுடன் இருக்க அனுப்பப்பட்ட பெர்ஹெஸ் அவர்களின் கரங்களினால் எபேசுவில் உள்ள உங்கள் அன்பின் சகோதரர்களுக்காகவும் நான் இங்கிருந்து எழுதுகிறேன். பெர்ஹெஸ் எனக்கு பலவழிகளில் ஆறுதல் அளித்துள்ளார். அவர் கடவுளின் சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். எல்லோரும் அவரைப்பின்பற்ற வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். கடவுளின் கிருபையானது அவருடைய எல்லா கிரியைகளுக்கும் பிரதிபலனை கொடுக்கும். உங்கள் ஆயர் மற்றும் உங்கள் கௌரவ மதகுருமாருக்கும், என் சக ஊழியர்களான அனைத்து கோனகத்தொண்டர்களுக்கும் எனது அன்பான வந்தனங்களை செலுத்துகிறேன். இயேசுக்கிறிஸ்துவின் நாமத்திலும், அவருடைய திருவுடல் மற்றும் திரு இரத்தத்திலும், அவருடைய சரீரத்தாலும், ஆன்மாவாலும், பாடுகளாலும், உயிர்த்தெழுதலிலும், இறைவனால் அருளப்பட்ட ஐக்கியத்தின் வாயிலாகவும் நான் உங்களுக்கு எனது தாழ்மையான வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். கருணை, சமாதானம் மற்றும் பொறுமை என்றும், எப்போதும் உங்களுடன் இருக்கக்கடவதாக. என் சகோதரர்களின் குடும்பத்தாருக்கும் அவர்களின் மனைவிமாருக்கும், பிள்ளைகளுக்கும், விதவைகள் என்று அழைக்கப்படும் பெண்மணிகளுக்கும் நான் எனது வந்தனங்களை செலுத்துகிறேன். தந்தையின் வல்லமையால் நிரம்பப்பெற்று நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். என்னுடன் இருக்கும் பிலோ, அவரது வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறார். கவியாவின் குடும்பத்திற்கு நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன். அவள் விசுவாசத்திலும், உடலாலும் ஆன்மாவாலும் தாராள மனப்பான்மையுடன் வேரூன்ற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நான் அலெக் மற்றும் டாப்னஸ் மற்றும் யுடெக்னஸ் மற்றும் அனைவரையும் அவர்களின் பேர்களைக் கூறியே வாழ்த்துகிறேன். இறைவனின் மேலான மகிமையின் பேரால் நன்றி கூறி, வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெறுகிறேன்.