Ignatius of Antioch, Epistle to the Romans

புனித இக்னேசியஸ் உரோமையர்களுக்கு எழுதிய கடிதம்

இக்னேஷியஸ் தியோபொரோஸ் ஆகிய நான், உத்தம பிதாவாகிய சர்வேசுரனின் மகிமையும், அவருடைய ஒரே குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து கருணையும் நிரம்பப்பெற்ற திருச்சபைக்கு எழுதுவது என்னவெனில், தம்முடைய சித்தத்தின்படியே, அனைத்தும் நடந்தேறிட வேண்டுமென பிதாவாகிய சர்வேசுரன் விரும்புகிறார். அதாவது, உரோமையர்களின்  தேசத்தில் முதன் முதலில் தனது திருச்சபையை நிறுவ அவர் விரும்பினார். பிதாவாகிய சர்வேசுரனின் ஏகசுதனான இயேசுக்கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களுக்கு தலை வணங்கி ஆசாரம் செய்கிறேன். இந்த சபையானது கடவுளின் அங்கீகாரம், பாராட்டு மற்றும் கௌரவத்துக்கு தகுதியான சபையாகும். கிறிஸ்துவானவரின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து பிதாவின் பெயரைக் கௌரவிக்கும் ஒரு சபையாகும். இந்த சபையானது, தேவனின் முழுகட்டளையிலும் கிருபையாலும் நிறைந்திருக்கிறது. மேலும் கடவுளுடன் ஐக்கியப்பட்டு பிறநாட்டு சக்திகளால் ஏற்படக்கூடிய வடுக்கள் அகற்றப்பட்டு காணப்படுகிறது. எங்கள் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவில் நீங்களும் மற்றைய எல்லோரும் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறும்படி மனதார பிரார்த்திக்கிறேன்.

1. என் பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் விதமாக, நான் இரந்து கேட்ட எல்லாவற்றிற்கும் மேலாக, நான் நீண்டகாலமாக பார்க்க ஆவலோடு காத்திருந்த முகங்களைக் கண்டேன். நான் இயேசுக்கிறிஸ்துவுடன் ஐக்கியமாக இருப்பதனால், என் இலக்கை அடைய கடவுள் தம்முடைய சித்தத்தின் கிருபையை எனக்கு அருளினால் மட்டுமே, உங்களை வாழ்த்தும் பேறு எனக்கு அமையும் என்று நான் விசுவசிக்கிறேன். எந்த தடங்கல்களும் இன்றி நான் எனது மரபுரிமையை பெற முடியுமாக இருந்தால், நான் எப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டசாலியாக இருக்கக்கூடும் என நான் தெரிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் காட்டும் அன்பால் எனக்கு ஏதேனும் தவறுகள் ஏற்பட்டு விடுமோ என நான் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டியுள்ளது. உங்கள் சொந்த மார்க்கமே உங்களுக்கு எளிதானது. ஆனால் நீங்கள் என்னோடு உடன்படாவிடில், கடவுளை அடைவது எனக்கு கடினமாக இருக்கும்.

2. உண்மையில், நீங்கள் மக்களுக்காக செய்வதைவிட அதிகமாக இறைவனுக்கு செய்வதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்று நீங்கள் எண்ணுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். பின்னொரு காலத்தில் கடவுளை அடைய இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காது. ஆகவே மெளனமாக இருப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் அதை செய்ய முடியும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், நீங்கள் அதை விட சிறந்த நன்மை எதையும் எனக்கு செய்ய முடியாது. நீங்கள் என் சார்பில் எதையும் சொல்லாவிட்டால், நான் கடவுளின் வார்த்தையாக மாறுவேன். ஆனால் எங்கள் கரிசனை என் சரீரத்துக்கு மட்டுமே என்றால், நான் மீண்டும் ஒரு சாதாரண வார்த்தையாக மட்டுமே மட்டுப் படுத்தப்பட்டு இருப்பேன். பலியிடும் பீடம் தயாராக இருக்கும் போது, கடவுளுக்கு பலியிட என்னை அர்ப்பணிக்க அனுமதிப்பதை விட பெரிய கருணையை நீங்கள் எனக்குக் காட்ட முடியாது. அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் இயேசுக் கிறிஸ்துவில் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு அன்பின் இசையாக மாறலாம், ஏனென்றால் சிரியாவின் ஆயருக்கு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை கடவுளின் கிருபை அருளப்பட்டுள்ளது.

3. நீங்கள் ஒருபோதும் யார் மீதும் பொறாமை கொள்ளவில்லை. நீங்கள் மற்றவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்தீர்கள். நீங்கள் கற்பித்தவை மற்றும் பிறருக்கு பரிந்துரைத்தவை இப்போது உங்களுக்குப் பயன்படலாம் என்று நான் நம்புகிறேன். ஒரு கிறிஸ்தவன் பெயருக்காக மட்டுமல்ல, உண்மையிலும், செயலிலும் வார்த்தையிலும் அவ்வாறு செய்ய உடல் மற்றும் உள வலிமை இருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நான் உலகத்தைவிட்டு வெளியேறி நீண்டகாலத்திற்குப் பிறகு இதுபோன்ற உண்மையுள்ள வாழ்க்கையை வாழ்ந்தவன் என நான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது எனது தலையாய வேண்டுகோள். வெளித்தோற்றத்தில் தெரிவது எதுவும் நன்மை பயக்கக் கூடியதில்லை. ஏனென்றால், நம்முடைய தேவனாகிய இயேசுக்கிறிஸ்து கடவுளில் சங்கமித்திருக்கிறார். ஆனால் இப்போது அவர் அதிகம் அதிகமாக வெளிப்படுகிறார். கிறிஸ்தவம் என்பது வற்புறுத்தலின் காரணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதல்ல. அது உலகத்தால் வெறுக்கப்படும் போதெல்லாம் உங்களுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கிறது.

4. நீங்கள்அதைத் தடுக்காவிட்டால், எல்லா திருச்சபைகளுக்கும், முழு மனதோடும், முழு இதயத்தோடும், கடவுளுக்காக மரிக்கும்படி சொல்ல நான் இதை எழுதுகிறேன். உங்கள் கிருபையை தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து அவர்கள் என்னை காட்டு மிருகங்களுக்கு இரையாக்க அனுமதியுங்கள். அதன்மூலம் நான் இறை பாதத்தை அடைய முடியும். நான் கடவுளின் கோதுமை வித்து; நான் கிறிஸ்துவின் தூய உணவாக உட்கொள்ளப் படும் பொருட்டு, காட்டு மிருகங்களின் பற்களால் அரைக்கப்படுவேன். எனது சரீரத்தில் எதுவும் மீதமாகா வண்ணம் அவை அதை உண்ண  இடமளிப்பதன் ஊடாக, அதுவே என் கல்லறையாக மாறும். அதனால் நான் இறந்தபிறகு யாரையும் வருந்தச்செய்ய மாட்டேன். நான் எனது சரீரத்தின் ஊடாக இனி உலகத்தை பார்க்காத போது, ​​நான் உண்மையிலேயே இயேசுக்கிறிஸ்துவின் சீடன் என்ற பேரைப் பெறுவேன். நான் கடவுளுக்கு இந்தவகையான ஒரு பலிப்பொருளாக மாறும்படி எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள். பேதுருவும் பவுலும் செய்ததைப்போல நான் உங்களுக்கு கட்டளையிட மாட்டேன். அவர்கள் அப்போஸ்தலர்கள்; நான் கண்டனம் செய்யப்பட்ட ஒரு சாதாரண மனிதன். அவர்கள் சுதந்திரமான மக்கள்; நான் இன்னும் ஒரு அடிமை. அதனால் தான் நான் கஷ்டப்படுகிறேன் என்றால், நான் இயேசுக் கிறிஸ்துவின் மூலம் இரட்சிக்கப்படுவேன். என் உயிர்த்தெழுதலில் மூலம் நான் சுதந்திரமாக இருப்பேன். ஆனால் இப்போது எனக்கு எந்தவிதமான ஆசைகளும் இல்லை என்று நான் அனுபவிக்கும் அடிமைத்தளையில் இருந்து கற்றுக்கொண்டேன்.

5. இப்போது கூட நான் சிரியாவிலிருந்து உரோம் செல்லும் பயணத்தில் மிருகங்களுடன் போராட வேண்டியுள்ளது. நிலத்திலும் கடலிலும், இரவிலும் பகலிலும் நான் பத்து சிறுத்தைகளின் மத்தியில் சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளேன். அல்லது குறைந்தபட்சம் காவலர்கள் குழுவுடன் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அவர்கள் நன்றாக நடத்தப்படும் போதும் கொடூரர்கள் ஆகி விடுகிறார்கள். இருப்பினும், அவர்கள் எனக்கு இழைக்கும் துன்புறுத்தல்கள் என்னை ஒரு சிறந்த சீடராக்கி விட்டிருக்கிறது. எனினும் எனது நீதிவழுவாமை அவ்விடத்தில் இல்லை. எனக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மிருகங்களில் என் மகிழ்ச்சி தங்கியுள்ளது. அவை என்னை விரைவாக துவம்சம் செய்யவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. எக்காரணத்தைக் கொண்டும் அங்கு தாமதங்கள் எதுவுமின்றி அவை என்னை புசிக்க வேண்டும். ஒருவேளை அவை என்னை நெருங்க தாமதிக்கும் பட்சத்தில், அவைகளை என்னை உடனேயே ஏற்றுக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திப்பேன். நான் தயாராக இருக்கும் போது அவை தயங்கிப் பின் வாங்கினால், என்னைத் தாக்க அவைகளைத் தூண்டி விடுவேன். அதற்காக என்னை மன்னியுங்கள். எது நல்லது என்று எனக்குத் தெரியும். நான் இப்போது என்னை சீடனாய் உருவகிக்க தொடங்கி விட்டேன்.  கண்ணுக்குப் புலப்படக்கூடிய அல்லது புலப்படாத எந்தவிதக் காரணிகளும் என்னை இயேசுக்கிறிஸ்துவிடம் செல்வதைத் தடுக்க முடியாது. நெருப்பின் மூலம் அல்லது சிலுவையில் அறையப்பட்டு அல்லது கொடிய காட்டு மிருகங்களை ஏவி (அவை எனது உடைலைத் துளைத்து, கிழித்து), எனது அவயவங்களை நார் நாராய்க் குதறி மற்றும் உடல் முழுவதையும் வதைத்து, துவம்சம் செய்வது போன்றவை பிசாசின் கொடூரமான சித்திரவதைகளாகும். நான் இயேசுக்கிறிஸ்துவிடம் செல்லும்வரை எனக்கு எந்தவகையான சித்திரவதைகளை அவர்களால் கொடுக்க முடியுமோ, அத்தனையையும் கொடுக்க அனுமதியுங்கள்.

6. இந்த உலக இராச்சியங்களாலோ அல்லது பிரபஞ்சத்தின் எல்லைகளாலோ எனக்கு எந்தப்பயனும் இல்லை. பூமியின் முனைகளை ஆளுவதைவிட நான் இயேசுக் கிறிஸ்துவுக்காக மரிக்க விரும்புகிறேன். நான் தேடி அடைய விழைவது நமக்காக மரித்தவரையே; நான் அன்பு செலுத்துவது எங்கள் இரட்சிப்பின் நிமித்தம் உயிர்த்தெழுந்தவர் மீது மட்டுமே. புதிதாகப் பிறந்ததன் வலியை நான் உணருகிறேன். சகோதரர்களே, தயவு செய்து என்னை மன்னியுங்கள். நான் தேர்ந்தெடுத்த இந்த புதிய வாழ்க்கையைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டாம். நான் அழிந்து போவதை விரும்பாதீர்கள். கடவுளின் மீது முழுமனதோடு ஒன்றித்திருக்காத ஒருவனிடம் இந்த உலகை ஒப்படைக்காதீர்கள். உலகமய விடயங்களில் என்னை கவர்ந்திழுக்க முயலாதீர்கள். தூய ஒளியைப் பெற்றுக்கொள்ள என்னை அனுமதிக்கவும். அதை அடையும் போது நான் ஒரு முழுமையான மனிதனாக மாறுவேன். எனது இறைவன் பட்ட துன்பங்களைப் பின்பற்றுபவராக இருக்க என்னை அனுமதிக்கவும். அவரை தம்முடைய இதயத்தில் கொண்டிருப்பவர்களை நான் உற்சாகப் படுத்துவதாக உணர்கிறார்கள். நான் தேர்ந்தெடுப்பதை புரிந்து கொள்ளக்கடவார்களாக; அவர்கள் என் உணர்வுகளை புரிந்துகொள்ளக் கடவார்களாக.

7. கடவுள் மீதான என் விருப்பத்தை பலவீனப்படுத்துவதற்காக இந்த உலகத்தின் இளவரசன் என்னை துவம்சம் செய்ய வேட்கையுடன் உள்ளான். அவனது செயல்களையிட்டு நீங்கள் எவரும் சண்டையிட வேண்டாம். என் அருகில் வாருங்கள். ஏனென்றால் நான் இருப்பது கடவுளின் பக்கம். உங்கள் உதடுகளை இயேசுக்கிறிஸ்துவுக்காகவும், உங்கள் இதயத்தை உலக வாழ்க்கைக்காகவும் விட்டுவிடாதீர்கள். உங்கள் மத்தியில் எந்த பொறாமைக்கும் இடமளிக்காதீர்கள். நான் வரும்போது கூட, பொறாமைக்கு இடமளிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் தற்போது எழுதியுள்ளதை நீங்கள் நம்பும்படி சொல்கிறேன்.

8.  இதை நான் உங்களுக்கு எழுதுகின்ற இந்தத்தருணத்தில் இன்னும் உயிருடன் இருந்தாலும், என் விருப்பம் இறக்கவேண்டும் என்பதே. எனது அவா சிலுவையில் அறையப்பட்டு மரிக்கவேண்டும் என்பதை தவிர வேறு எந்த ஒரு மற்றுக்கருத்துக்கும் எள்ளளவேனும் இடமில்லை. என்னுள் பேசுவது வாழ்வுதரும் சீவியத்தின் ஊற்று மாத்திரமே. அதுபின் வருமாறு கூறுகிறது: பிதாவிடம் விரைந்து செல்லுங்கள். அழிந்து போகும் உணவின்மீது எனக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை. இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களில் எந்த நாட்டமும் என்னிடமில்லை. தாவீதின் வம்சத்தில் உதித்த கிறிஸ்துவின் திருவுடலான தேவனுடைய திவ்விய அப்பத்தை நான் புசிக்க விரும்புகிறேன். அவருடைய திரு இரத்தத்தையே நான் பருக விழைகிறேன். இதன் மூலம் என்றும் அழியாத அன்பைத் தேடி அடைய முடியும்.

9. நான் இனி இந்த உலக வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. நீங்கள் அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால், உங்களால் எனது விருப்பத்தை நிறைவேற்ற முடியும். நீங்கள் ஏதாவது தெரிவு செய்வதாக இருந்தால், இதை உங்கள் தெரிவாக எடுத்துக்கொள்ளுங்கள். எனது வேண்டுகோளை சில வார்த்தைகளில் உங்கள் முன் வைக்கிறேன். தயவுசெய்து என்னை நம்புங்கள்; நான் உண்மையை பேசுகிறேன் என்பதை இயேசுக்கிறிஸ்து உங்களுக்கு தெளிவுபடுத்துவார். பிதா உண்மையிலேயே கடவுளின் குரலாய் இருக்கிறார். அவரின் வார்த்தைகள் வஞ்சனைகளுக்கு அப்பாற் பட்டது. பரிசுத்த ஆவியிடம் நான் தோல்வியுறாதபடிக்கு செபியுங்கள். என் சார்பாக உங்கள் வேண்டுதலை ஒப்புவியுங்கள். நான் உங்களுக்கு எழுதியது மனிதர்களின் செயல்களினால் தூண்டப்பட்டு அல்ல. அது கடவுளின் கிருபையால் நிகழ்ந்தது. நான் இறந்த பிறகும், நீங்கள் என்னை நேசிப்பீர்கள் என்பதை இது காட்டுகிறது. நான் நிராகரிக்கப் படுவேன் என்றால், அது நீங்கள் என்னை வெறுப்பதால் மட்டுமே நடக்கக்கூடியது.

10. தற்போது எனக்குப் பதிலாக, இறைவனின் பேரால் சிரியாவில் இயங்கும் திருச்சபை நிர்வாகிக்காகவும், திருச்சபைக்காகவும் மன்றாட மறவாதீர்கள். உங்கள் அன்பால், இயேசுக்கிறிஸ்து மட்டுமே அங்கு ஆயராக இருப்பார். என்னை ஆயர்களில் ஒருவராக அடையாளம் காட்ட நான் வெட்கப்படுகிறேன். ஏனென்றால், அவர்களில் நான் கடைசியாக இருந்த காரணத்தாலும், முறையற்ற நேரத்தில் பிறந்த, தகுதியற்ற ஒருவன் என்பதால். நான் கடவுளை அணுகும் போது, அவருடைய கருணையால் மட்டுமே நான் ஓரளவுக்கு ஒரு மனிதனாக பரிணமிப்பேன். என் ஆன்மா, இயேசுக் கிறிஸ்துவின் பெயரால் முழுமைபெற்ற திருச்சபைகள் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக நான் உங்களுக்குத் தலை வணங்குகிறேன். அவர்களைக் கடந்து சென்ற ஒரு யாத்ரீகரைவிட, என்னை மிக நன்றாக நடத்தினார்கள். ஏனென்றால், நான் பயணித்த வழியில் என்னை சந்தித்த பல்வேறு சமூகங்களை சார்ந்தவர்களால், ஒரு நகரத்திலிருந்து மற்றோரு நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

11.  ஸ்மிர்னாவில் உள்ள எபேசியாட்டில் இருந்து இந்தகடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எல்லா புகழுக்கும் அவர் தகுதியானவர். என்னுடன் இருக்கும் பலர் மத்தியில் என் அன்பு நண்பர் க்ரோகஸ் என்பவர் உள்ளார். எனக்கு முன் கடவுளின் மகிமையைப்பெற சிரியாவிலிருந்து உரோம் வரை சென்றவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் அவர்களோடு எப்போதும் நெருக்கமாக இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்லுங்கள். அவை யாவும் கடவுளுக்கும் உங்களுக்கும் என்றும் விலைமதிப்பற்றவை என்று கூறிக்கொள்கிறேன். எல்லாவழிகளிலும் அவர்களுக்கு உதவ உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள் என நம்புகிறேன். இந்த கட்டுரையை எழுதும் தேதி செப்டம்பர் நாட்காட்டியின் ஒன்பதாம் நாள். இயேசுக்கிறிஸ்துவின் ஆசிர்வாதத்தின் மகிமையால் நிரம்பப்பெற்ற நீங்கள் இறுதிவரை முயற்சி செய்துகொண்டேஇருங்கள். இத்துடன் எனது தாழ்மையான வந்தனங்களுடன் நிறைவு செய்கிறேன்.