Ignatius of Antioch, Epistle to Polycarp

புனித இக்னேசியஸ் பொலிகார்ப் அவர்களுக்கு எழுதிய கடிதம்

ஸ்மிர்னாவின் ஆயரான பொலிகார்ப் அவர்களுக்கு, அல்லது அவரை பிதாவாகிய சர்வேசுரன் மற்றும் அவரது ஏகசுதனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் ஊரணியாய் இருக்கும் ஒருவர் என்று நான் விளிக்கலாமா? உங்கள் அனைவருக்கும் சகல நன்மைகளும் கிட்ட வாழ்த்துகிறேன்.

1. அசைக்க முடியாத ஒரு பாறை போல, உங்கள் மனம் கடவுளிடத்தில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் உங்கள் முகத்தைக்காண முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதன் நம்பகத்தன்மையில் கடவுள் மகிழ்ச்சி அடையட்டும். விடாமுயற்சியினால் முன்னேற தயாராகும் உங்களை கருணையின் மிகுதியால் ஊக்குவிக்கிறேன். மற்றைய அனைவருக்கும் இரட்சணியம் கிடைக்க வேண்டுமென உற்சாகப்படுத்துங்கள். உங்கள் நடைமுறை மற்றும் ஆன்மீக கடமைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் உங்களுடைய தகுதிக்கேற்ப வாழ்வைத் தொடருங்கள். ஒற்றுமையை விட சிறந்தது எதுவுமில்லை, எனவே ஒற்றுமையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவுவதைப் போல மற்றவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் ஏற்கனவே நடந்து கொண்டதைப் போல், எல்லோரிடமும் பொறுமையாக இருங்கள். நிலையான செபத்துக்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் ஞானத்தை விட அதிகமாக கேளுங்கள். உங்கள் ஆன்மாவை எப்போதும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் வைத்திருங்கள். ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக பேசும்போது இறைவன் கற்பித்த வழிகளைப் பின்பற்றுங்கள். நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு விளையாட்டு வீரனைப்போல, நோயுற்ற எல்லோருக்கும் ஆதரவுக்கரம் நீட்ட மறவாதீர்கள். அதிக கடமை உள்ள இடங்களில் அதிக வெகுமதிகள் கிடைக்கும்

2.  நல்ல மாணவர்களை நல்லவர்கள் என்று சொல்வதற்காக நன்றி கூறவேண்டிய அவசியம் இல்லை. உங்களைத் துன்புறுத்துபவர்களை நல்வழிக்குக் கொண்டு வருவதே உண்மையான பணி. எல்லா காயங்களையும் ஒரே மருந்தினால் குணமடையச் செய்ய முடியாது. வலி அதிகமாக இருக்கும் போது மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் வலியைக் குறைவடையச் செய்ய முடியும். எல்லா விடயங்களிலும் ஒரு பாம்பைப் போல தந்திரமாகவும், புறாவைப் போலவும் அப்பாவியாகவும் இருங்கள். நீங்கள் சரீரத்தாலும், ஆன்மாவாலும் படைக்கப் பட்டுள்ளீர்கள். ஆகவே உங்களுக்கு வர நேரிடக்கூடியதை உங்களால் ஊகிக்க முடியும். கண்களுக்குப் புலப்படாத யதார்த்தங்கள் உங்களுக்கு வெளிப்படுத்தப் படும்படியாக செபியுங்கள். இந்த வழியில் செயல்படுவது உங்களுக்கு எவ்விதத்திலும் குறைகளை ஏற்படுத்தாது. பதிலாக உங்களுக்கு ஏராளமான வெகுமதிகள் கிடைக்கும். விமானிகளுக்கு விமானத்தை இயக்க காற்றின் உதவியும், மாலுமிகளுக்கு தம் கப்பல்களைக் காக்க துறைமுகமும் தேவைப்படுவது போல, கடவுளை அடைவதற்கு, உங்களுக்கு நிறைந்த அனுபவ முதிர்ச்சி தேவை. விளையாட்டு வீரரைப் போல மென்மையாக இருங்கள். அழிவில்லாத விசுவாசமும் நித்திய ஜீவனுமே எம்வாழ்க்கைக்கு கிடைக்கக்கூடிய வெகுமதிகள். இது குறித்து உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். என் மேல் நீங்கள் காட்டிய அன்பையும் பிணைப்பையும் நான் உங்களுக்காக தியாகம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன்.

3. உண்மையை கற்பிப்பது போன்றே தோன்றினாலும், பிறமதத்தை கற்பிக்கும் சிலர் நம்மிடையே இருக்கலாம். அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய விடாதீர்கள். நீங்கள் எப்போதும் வலுவாகவும் உறுதியாகவும் இருங்கள். ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரர் தனது முதல் சுற்றுகளில் சற்று தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தாலும், இறுதியில் வெற்றி பெறுகிறார். நாம் எந்தக்காரியத்தில் ஈடுபட்டாலும், எம் இறைவனுடைய நாமத்தினால் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் அவர் நம்மிடம் பொறுமையாக இருப்பார். நீங்கள் இப்போது இருப்பதை விட அதிக ஆர்வத்துடன் இருங்கள். நாம் வாழும் யுகத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் சர்வவல்லமைக்கும் அப்பாற்பட்டவர், நித்தியமானவர், கண்ணுக்குப் புலப்படாதவர், எல்லாவற்றையும் தூரத்திலிருந்தே அறிந்தவர், துன்பப்படக் கூடாத, ஆனால் நமக்காக எல்லா பாடுகளையும் அனுபவித்த அந்த அதி உத்தம கர்த்தரைத் தேடுங்கள்.

4. விதவைகளை புறக்கணிக்க அனுமதிக்காதீர்கள். கடவுளுக்குப் பிறகு, நீங்கள் அவர்களின் பாதுகாவலராக இருக்க வேண்டும். உங்கள் அனுமதியின்றி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது நடந்து கொள்வதைப் போலவே, கடவுளைப்பற்றிய தெளிவு இல்லாமல், நீங்களாக, உங்கள் இஷ்டம் போல நடவாதிருங்கள்.  பலவீனத்துக்கு இடம் கொடாதீர்கள். சந்திப்புக்களை அடிக்கடி நடத்துங்கள். அனைவரையும் அவர்களின் பெயர் மூலமாகத் தேடுங்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அடிமைகளை புறக்கணியாதீர்கள். அதேசமயம், பிடிவாதக்காரர்களாக இல்லாமல் இறைவனுக்கு சேவையாற்றும் சிறந்த ஊழியர்களாக அவர்களை மாற்றமடையச் செய்யுங்கள். அவ்வாறு செய்யும் போது, ​​கடவுள் அவர்களுக்கு இன்னும் பெரிய சுதந்திரத்தை அருளுவார். அனைவரும் தங்கள் சொந்த ஆசைகளின் அடிமைகளாக மாறக்கூடாது. அவர்கள் ஒருபோதும் பொதுமக்களின் இழப்பில் சுதந்திரத்தை அடைய இடம் கொடலாகாது.

5. மந்திரம், மற்றும் மாயாஜாலம் போன்றவற்றைத் தவிர்க்கவும். அதேவேளை இது போன்ற விடயங்களைப்பற்றி மக்களிடம் பேச தயங்க வேண்டாம். இறைவனை நேசிக்கவும், உடலாலும், மனதாலும் தங்கள் கணவர்மாரை திருப்தியடையச் செய்யும்படியும் நம் சகோதரிகளிடம் கூறுங்கள். அதேபோல், இயேசுக்கிறிஸ்துவின் பெயரால் என் சகோதரர்களிடம் கர்த்தர் தாம் திருச்சபையை நேசிப்பதைப் போல தங்கள் மனைவிமாரையும் நேசிக்கும்படி உரையுங்கள். கர்த்தருடைய திருவுடலை மகிமைப்படுத்துவதற்கு ஒப்பாக, எவரேனும் ஒருவர் தூய்மையான பிரம்மச் சாரியத்தை கடைபிடிக்க முடிந்தால், அவர் தம் முழுமனதுடன் அதை செய்ய வேண்டும். அவர் அதைப்பற்றி தற்பெருமை கொள்வாரானால், அவர் ஒரு இழிவான குணமுள்ளவராகவே காணப்படுவார். அவர் ஆயரை விட மரியாதைக்குரியவராக இருக்க வேண்டும். இல்லாது போனால் அவரது தூய்மையை இழந்தவராகவே கருதப்படுவார். ஆண்களும் பெண்களும் திருமணம் செய்துகொள்ளும் போது, ​​ஆயரின் சம்மதத்துடன் அவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்போது தான் திருமணம் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கும். அது வெறும் காம இச்சையின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக இல்லாமல், கடவுளின் மகிமையைப் புகழ்ந்துரைப்பதாக அமைய வேண்டும்.

6. கடவுள் உங்களுக்கு செவிகொடுக்க வேண்டுமென்றால், நீங்கள் ஆயருக்கு செவிகொடுக்க வேண்டும். ஆயர்மார், மதகுருமார் மற்றும் கோனகத் தொண்டர்களுக்குக் கீழ்ப்படிவோருக்கு நான் என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன். கடவுளோடும் அவர்களோடும் இருப்பது என் கடமையாகும். இறைவனின் களஞ்சிய சாலை பொறுப்பாளர்களாகவும், உதவியாளர்களாகவும் மற்றும் கடவுளின் ஊழியர்களாகவும் இணைந்து அயரா முயற்சி செய்து உங்கள் பயிற்சியைப் பெறுங்கள். ஒன்றாகப் பயணிப்பதுபோல், ஒன்றாகவே துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றாக ஓய்வெடுப்பது போல ஒன்றாக எழுந்திருங்கள். உங்களைத் தொழிலுக்கு அமர்த்திய தொழில் தருனர் உங்களுடைய தொழிலுக்கு ஏற்ற வேதனத்தை தருவதால், அவரிடம் தாழ்மையாக நடந்து கொள்ளுங்கள். உங்களில் எவரும் யுத்தத்தில் ஈடுபட்டிருப்பீர்களானால், இடையில் போர்க்களத்தை விட்டு வெளியேறாதீர்கள். நீங்கள் பெற்ற ஞானஸ்நானம் எப்போதும் உங்கள் கேடயமாக செயல்படட்டும். உங்கள் நம்பிக்கையே உங்கள் தலைக்கவசம். உங்கள் தியாக மனப்பான்மையே உங்கள் அம்பு. மற்றும் உங்கள் பொறுமையே உங்கள் கவசமாகவும் இருக்கக் கடவதாக. நீங்கள் பெறும் வேதனம் உங்களுக்கு செலுத்தப்படுமுகமாக, உங்கள் உழைப்பையே அதற்கு மூலதனமாக இடுங்கள். கடவுள் உங்கள்பால் தாழ்மையுடன் இருப்பதைப் போல, ஒருவருக்கொருவர் பணிவுடனும் பொறுமையோடும் வாழப்பழகிக் கொள்ளுங்கள். நான் எப்போதும் உங்கள்பால் மகிழ்ச்சிகொள்ளும்படி நடந்து கொள்ளுங்கள்.

7.  சிரியாவின் அந்தியோகியா திருச்சபை சமாதானத்தை அடைந்தது என்பதை உங்கள் மன்றாட்டின் மூலம் அறிந்துகொண்டேன். அதனால்தான் நான் இறைவனில் ஆறுதல் காண்கிறேன். அல்லது நான் துன்பத்தின் மூலமாக மட்டுமே இறைவனை அடைய நேரிட்டால், உங்கள் மன்றாட்டின் உதவியால் என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். பொலிகாப் அவர்களே, நீங்கள் கடவுளால் நிறைவாக ஆசீர்வதிக்கப் பட்டவர். குறிப்பாக இறைவனால் அதிகம் நேசிக்கப்படுபவர். கடின உழைப்பாளி. கடவுளின் தூதர் போன்றோரைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஒரு விசுவாசம் மிக்க திருச்சபையை நிறுவுவதற்கும் மிகவும் பொருத்தமானவர் என்பதை நாம் பறை சாற்றுகிறோம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், கடவுளின் மகிமையை மேம்படுத்த, உங்களது தொடர்ச்சியான அன்பினால் மிகவும் போற்றப்பட்டு சிரியாவுக்குச் செல்ல நியமிக்கப்பட்டது மிகவும் போற்றப்படுதலுக்குரிய செயலாகும். இறைவனின் படைப்பினால் உருப்பெற்ற எல்லா காலங்களும் அவருக்கே சொந்தமானவை என்பதால், ஒரு கிறிஸ்தவர் தன்னைத்தானே தனது சொந்த எஜமானாகக் கருதமுடியாது. நீங்கள் எதானுமோர் காரியத்தை செய்தவுடன், அது இறைவனுடையதும் உங்களுடையதும் காரியமாகவே அமையும். தேவனின் கிருபையால், அவர்பால் நீங்கள் ஆற்றும் அனைத்து சேவைகளிலும் நீங்கள் நன்மை செய்யத் தயாராக உள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த மிக எளிமையான மற்றும் சிறிய கட்டுரையின் ஊடாக நான் உங்களை ஊக்குவிக்கிறேன். ஏனென்றால் சத்தியத்தின் மீதான உங்கள் ஆர்வத்தை நான் நன்கு அறிவேன்.

8. இறைவன் கட்டளையிட்டபடி, ட்ரோவாசிலிருந்து நியோபோலிஸுக்கு விரைவாகப் பயணம் செய்ய வேண்டும் என்றபடியால், என்னால் எல்லா சபைகளுக்கும் எழுத முடியாதுள்ளது. இறைவனின் சித்தத்தை அறிந்த ஒருவன் என்ற முறையில், எமது அயல் சபைகளுக்கும் கடிதங்களை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். தூதர்களை அனுப்பக்கூடிய சபைகளுக்கு தூதர்களை அனுப்புங்கள். தூதர்களை அனுப்பமுடியாத சபைகளுக்கு தூதர்கள் ஊடாக செய்திகளை அனுப்புங்கள். அப்படி செய்யும் பட்சத்தில், உங்களது கடமையை நீங்கள் நிறைவேற்றிய அந்த மகத்தான பெருமையை என்றும் மறவாதிருக்கும் ஒரு உன்னத கௌரவம் உங்களில் என்றும் நிலைத்திருக்கும்.

எபிட்ரோபஸின் பாரியார் மற்றும் அவரது குழந்தைகளுக்கும், சேவை செய்யும் ஊழியர் அனைவரும், உங்கள் அனைவரின் சார்பிலும் என்றும் மறவாது, நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அன்பு செலுத்தும் அட்டாலஸையும், சிரியாவுக்குச் செல்ல பொருத்தமானவர்கள் என்று நினைக்கும் யாவரையும் வாழ்த்த விரும்புகிறேன். அங்கு செல்வோர், அவரை அங்கு அனுப்பும் பொலிகாப் போன்றோர் பாக்கியவான்கள். எமது ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் திருநாமத்தினால் நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். அவர் மூலமாக என்றும் எம் பிதாவாகிய சர்வேசுரனில் ஒன்றித்திருங்கள். அவருடைய வழிகாட்டுதலின் கீழ் எல்லாவகையிலும் விடாமுயற்சியுடன் இருங்கள். என்னை மிகவும் நேசித்த அல்ஸ் அவர்களுக்கு எனது தாழ்மையான வந்தனங்களை கூறிக் கொண்டு, இறைவனின் மாட்சிமைமிகு திருநாமத்தினால் நான் உங்களிடமிருந்து தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி விடைபெறுகிறேன்.