Ignatius of Antioch, Epistle to the Philadelphians

புனித இக்னேசியஸ் பிலடெல்பியர்களுக்கு எழுதிய கடிதம்

இக்னேஷியஸ் தியோபொரோஸ் ஆகிய நான், ஆசியாவின், பிலடெல்பியாவில் உள்ள பிதாவாகிய சர்வேசுரன் மற்றும் அவரின் ஏகசுதனாகிய எம் கர்த்தரான இயேசுக்கிறிஸ்துவின் திருச்சபைக்கு எழுதும் கடிதம்: நீங்கள் கடவுளின் கருணையை உணர்ந்திருக்கிறீர்கள், இறைவனோடு அவரது ஐக்கியத்தில் இணைந்திருக்கிறீர்கள். எங்கள் கர்த்தருடைய வல்லமையிலும் அதனால் கிடைக்கும் வாழ்வையும் நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொள்கிறீர்கள். நிறைவான கருணையின் மூலம் அவருடைய உயிர்த்தெழுதலுக்கு முழு உறுதியையும் தருகிறீர்கள். இயேசுக் கிறிஸ்துவின் திரு இரத்தத்தின் மகிமையால் நான் உங்களுக்கு ஆசி கூறுகிறேன். உங்கள் சபையானது எனக்கு ஒரு அழியாத மகிழ்ச்சியைத் தருகிறது. இயேசுக் கிறிஸ்துவின் சித்தத்திற்கு அமைய நியமிக்கப்பட்ட ஆயர் மற்றும் அவருடைய குருமார் மற்றும் கோனகத் தொண்டர் அனைவரும் ஒன்றுபட்டால் மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாக இருக்கும். இவர்கள் அனைவரும் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்ற ஊழியம் செய்கிறார்கள். கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் அவர்களை நிறைவாகும்படி செய்துள்ளார்.

1. உங்கள் ஆயர் தனது ஊழியத்தை பொது நன்மைக்காக அர்ப்பணித்திருப்பதை நான் அறிவேன். அவரது நியமனம் பிறரால் மேற்கொள்ளப்பட்ட வேறு எந்தவொரு முயற்சியின் விளைவாகவோ இடம்பெற்றது அல்ல. அது எமது பிதாவாகிய சர்வேசுரன் மற்றும் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சித்தத்தினால் அருளப் பட்டது. பேசுபவர்களைவிட மெளனமாக, அதேவேளை அதிகம் காரியமாற்றக் கூடிய ஒரு மனிதனின் உண்மையான தன்மையை நான் பாராட்டுகிறேன். அவ்வாறான சூழ்நிலைகளில், ஒரு வீணை இசைக்கப்படுவது போல அவர் கடவுளின் கட்டளைகளுக்கு இணங்குகிறார். ஆகையால், என் ஆன்மா கடவுளை நோக்கிய உறுதியான கிரியைகளால் ஆசீர்வதிக்கப்படுகிறது. அது நல்லொழுக்கம் வாய்ந்ததும் சரியானதுமாகும். அது எவ்வளவு அமைதியானது என்பதையும், அவருடைய வாழ்க்கை எவ்வாறு கடவுளின் மாசற்ற நீதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதை நான் அறிவேன்.

2. நீங்கள் சத்தியத்தின் பிள்ளைகள்; பேதங்கள் மற்றும் மூடநம்பிக்கையிலிருந்து விலகி இருங்கள். அவர் எங்கு சென்றாலும், ஒரு மேய்ப்பனைப் போல அவரைப் பின்பற்றுங்கள். கடவுளின் அடியார்களை தீய இன்பத்துடன் சிக்கவைக்க முயலும் பல ஓநாய்கள் உள்ளன. இருப்பினும், உங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை அவர்களை உங்களிடம் அணுக விடாது.

3.  இயேசுக்கிறிஸ்துவால் விதைக்கப்படாத மண்ணில் வளரும் நச்சுகளைகளில் இருந்து விலகி இருங்கள். அவை பிதாவால் நடப்பட்ட தாவரங்கள் அல்ல. அசுத்தமான காரணிகளை விட்டொழிப்பதைத் தவிர உங்களிடையே எந்த வேறுபாடுகளையும் நான் காணவில்லை. கடவுளுக்கும் இயேசுக்கிறிஸ்துவுக்கும் சொந்தமான அனைவரும் ஆயருடன் இருக்கிறார்கள். இயேசுக்கிறிஸ்துவுடன் இணக்கமாக வாழ்வதற்காக, மனந்திரும்பி மீண்டும் திருச்சபையின் ஒற்றுமையை பறைசாற்ற வந்தவர்களும் உண்டு. சகோதரரே, இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பிளவுபடுவதற்கு இட்டுச் செல்லும் ஏதேனும் ஒருவழியில் செயல்படும் எவருக்கும் கடவுளுடைய இராச்சியம் சொந்தமல்ல. புறமதத்தை கடைப்பிடிக்கும் எவரும் துன்பத்திற்கு ஆளாவதில்லை.

4. அப்படியானால், அதே நற்கருணையில் நிலைத்திருப்பதில் வைராக்கியமாக இருங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சரீரமும் அவருடைய திரு இரத்தத்தில் ஒன்றுபட்ட ஒரு கிண்ணமும் இருக்கிறது. ஒரே ஒரு பலிபீடம் மட்டுமே உள்ளது. அங்கே என் ஆயர், என் சக ஊழியர்கள், குருக்கள் மற்றும் கோனகத் தொண்டர்களும் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் எதைச் செய்தாலும் இறைவனின் பெயரால் செய்யுங்கள்.

5. அன்புள்ள சகோதர சகோதரிகளே, உங்கள் மீது நான் செலுத்தும் அன்பு முழுமையானது. அவ்வளவு மகிழ்ச்சியுடன், என்னால் முடிந்த எல்லா உறுதிப் பாட்டையும் தருகிறேன். ஆனால் என்னால் அல்ல; என்னுடன் பிணைக்கப்பட்ட இயேசுக்கிறிஸ்துவானவர் ஊடாகவே. பரிபூரணத்திற்கு தொலைவில் இருப்பதால் நான் மிகவும் அஞ்சுகிறேன். ஏனென்றால் அது முறையல்ல. இருப்பினும், கடவுளிடம் நீங்கள் செய்த மன்றாட்டின் காரணமாக அவர் என்னை முழுமையாக்குவார். கடவுளின் கருணையால் எனக்கு வழங்கப்பட்ட மரபுரிமை எனக்கு கிடைக்கும். அப்படியானால், திருச்சபையில் உள்ள நற்செய்தியையும் அப்போஸ்தலர்களையும் நான் இயேசுவின் சாயலாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது சாத்தியப்படும். எனவே, நாம் தீர்க்கதரிசிகளை அதே வழியில் நேசிக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் தான் சுவிசேஷத்தை முன்னறிவித்தவர்கள். அவருக்காகக் காத்திருந்தார்கள், அவருடைய வருகைக்காகக் காத்திருந்தார்கள். இயேசுக்கிறிஸ்துவுடனான விசுவாசத்தினாலும் ஒற்றுமையினாலும் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். அவர்கள் புனிதத்தன்மைக்காக போற்றப்படுவதற்கும் பாராட்டப்படுவதற்கும் தகுதியானவர்கள். அவை இயேசுக் கிறிஸ்துவால் அங்கீகரிக்கப்பட்டு, நம்முடைய பொதுவான நம்பிக்கையின் நற்செய்தியுடன் எங்களோடு இணைக்கப்படுகின்றன.

6. மேலும், எவராவது உங்களுக்கு யூத மார்க்கத்தைப் போதித்தால், அவருக்குச் செவிகொடுக்காதீர்கள். விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களால் பிரசங்கிக்கப்படும் யூதமதக் கோட்பாடுகளை செவிமடுப்பதை விட, விருத்தசேதனம் செய்யப் படாதவர்களால் பிரசங்கிக்கப்படும் கிறிஸ்தவத்தைக் கேட்பது மேல். இரண்டும் சமமான ஒன்று தான். ஏனென்றால், அவர்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பறைசாற்றத் தவறினால், என்னைப் பொறுத்த மட்டில், யாருமற்ற கல்லறைகளில் மற்றும் சமாதிகளில் பெயர்களைப் பொறிப்பதற்கு சமமானவர்கள். இந்த உலகத்தின் இளவரசனின் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் குறித்து கவனமாக இருங்கள். இல்லையெனில், நீங்கள் அவனது தந்திரோபாயங்களுக்கு பலியாகி அவனை ஏற்றுக் கொள்வீர்கள். மன ஒற்றுமை ஊடாக நீங்கள் அனைவரையும் ஒன்றிணைத்திடுங்கள். எனது மனசாட்சி தெளிவாக இருப்பதற்கு நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் சிறிய அல்லது பெரிய அளவில் நான் எவருக்கேனும் ஒரு சுமை என்று வெளிப்படையாகவோ அல்லது உள்ளார்த்தமாகவோ அறிவிக்கக் கூடியவர்கள் உங்களில் ஒருவரும் இல்லாதபடியால். நான் பேசுவது என்னவாக இருப்பினும், அதை யாருக்கும் எதிராக நான் கூறும் சாட்சியாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பிரார்த்திக்கிறேன்.

7. வெளிப்புறத்தில் என்னை ஏமாற்ற சிலர் முயன்று இருக்கலாம். ஆனால் கடவுளிடமிருந்து வரும் பரிசுத்த ஆவி என்றும் என்னை ஏமாற்றுவதில்லை. ஆவியானவர் எங்கிருந்து வருகிறார், அவர் எங்கு செல்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இறைவன் மறைந்திருப்பதை வெளிப்படுத்துகிறார். நான் உங்கள் மத்தியில் இருந்த போது அழுது புரண்டேன். நான் உரத்த குரலில், கடவுளின் குரலில் பேசினேன். ஆயர், மதகுருமார் மற்றும் கோனகத் தொண்டர்களைக் கேளுங்கள். நான் இதைச் சொன்ன போது, ​​வரவிருக்கும் சர்ச்சைபற்றி முன்பே எனக்குத் தெரியும் என்று சிலர் சந்தேகித்தனர். ஆனால் தேவனே என் சாட்சியாவார். நான் அவருடன் பிணைக்கப்பட்டு இருக்கிறேன். இதை நான் எந்த மனிதனிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை என்பதை அவர் அறிவார். தூய ஆவியானவர்தான் அந்த வார்த்தைகளைப் பேசினார். ஆயர் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடக்க அனுமதிக்காதீர்கள். கடவுளின் திருச்சபை போல உங்கள் சரீரத்தைப் பேணவும். ஒற்றுமையை நேசிக்கவும். பிளவுகளில் இருந்து தூர விலகியிருங்கள். இயேசுக் கிறிஸ்து தன் தந்தையைப் பின்பற்றியது போல, இயேசுக்கிறீஸ்துவை நீங்கள் பின்பற்றுங்கள்.

8. பேதங்கள் அல்லது கோபம் இருக்கும் இடத்தில் கடவுளின் பிரசன்னம் இருக்காது என்பதால், நல்லிணக்கத்தை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட ஒரு மத்தியஸ்தராக எனது பங்கைச் செய்துள்ளேன். அவர்களின் மனந்திரும்புதல் இறைவனுடைய நல்லிணக்கத்திற்கும் ஆயருடைய கிரியைகளுக்குள் இணைந்து மனந்திரும்புகிற அனைவரையும் கடவுள் மன்னிப்பார். இயேசுக்கிறிஸ்துவின் கிருபையின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் உங்கள் எல்லா உறவுகளையும் நிர்மூலமாக்குவார். எல்லாவற்றையும் கிறிஸ்துவின் போதனைகளின் பிரகாரம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன், பேதங்களை ஏற்படுத்தக் கூடிய எந்த சக்தியுடனும் இணைந்து எவ்வித காரியத்தையும் செய்ய வேண்டாம். சிலர் இப்படி சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; நான் அதை எழுத்துக்களில் காண வில்லை என்றால், பிரசங்கிக்கப்பட்டதை நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன். இது எழுதப்பட்ட வசனம் என்று நான் சொன்னபோது, அது மிகவும் பாரதூரமான விடயம் என்று அவர்கள் பதிலளித்தனர். என்னைப் பொறுத்தவரை, இயேசுக்கிறிஸ்து எழுதப் பட்ட வசனத்தைப் போன்றவர். அவருடைய சிலுவை, மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் அவர்மீதுள்ள நம்பிக்கை ஆகியவை அவர் பற்றிய வெவ்வேறு விதமாக வடிக்கப்பட்ட வசனங்கள். உங்கள் மன்றாட்டுக்களால் இவை போன்ற விடயங்களில் நான் நீதிமானாக இருக்க விரும்புகிறேன்.

9. மதகுருமார் நல்லவர்கள். ஆனால், புனித ஸ்தலத்தை பரிசுத்தப்படுத்தி, தேவ இரகசியங்களை நன்றாகக் பகிர்ந்து கொள்ளும் குருவானவர் மிகவும் சிறந்தவர். அவர் பிதாவாகிய சர்வேசுரனை அடையும் வாயிற் கதவு. அதில் ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு மற்றும் தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் திருச்சபை ஆகியனவும் அடங்கும். இவை அனைத்தும் கடவுளின் ஒற்றுமைக்குள் ஐக்கியப் படுகின்றன. ஆனால் நற்செய்தியில் உள்ள வேறுபாடு என்ன வென்றால், அதில் இரட்சகரான நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் வருகையும், அவருடைய பாடுகளும், அவருடைய உயிர்த்தெழுதலும் அடங்கும். அவரது வருகை புனித தீர்க்கதரிசிகளின் பிரசங்கங்களில் அறிவிக்கப்பட்டது. நற்செய்தி நித்திய வாழ்வின் பூரணத்துவம் ஆகும். இவை அனைத்தையும் ஒன்று படுத்தி, உங்கள் விசுவாசம் தூய்மையாய் இருக்கும் வரை அனைத்தும் நன்மைகளையே கொண்டு வருவதாக அமையும்.

10.  உங்கள் பிரார்த்தனை மற்றும் உங்கள் கருணை பற்றிய செய்தி எனக்குக் கிடைத்தது. அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். சிரியாவின் அந்தியோக்கில் உள்ள திருச்சபையானது இயேசுக்கிறிஸ்துவுடன் சமாதானத்தில் நிரம்பப் பெற்றுள்ளது. இறைவனின் சபையாக, கடவுளின் தூதராக, இயேசுவின் பெயரின் மகிமைக்காக, அவர்கள் ஒன்றாக இணைந்து வரும்போது அவர்களை வாழ்த்துவதற்காக, அவர்கள் அங்கு செல்வதற்கு ஒரு கோனகத்தொண்டரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இயேசுக்கிறிஸ்துவில் இந்த ஊழியத்திற்கு தகுதியானவர் என்று அங்கீகரிக்கப் படுபவர் பாக்கியவான்கள். அவர்களை அனுப்பியவரையும் துதிக்கிறேன். சில சபைகளின் கோனகத் தொண்டர்கள், ஆயர்கள் அல்லது மதகுருமார் செய்ததைப் போலவே நீங்கள் இதைத் தேவனின் பெயரால் செய்யக் கடவீர்களாக.

11. சிலிசியாவின் பிலோ என்ற நேர்மையான கோனகத்தொண்டர், இப்போது இறை வார்த்தைகளைப் பரப்புவதில் எனக்காக சேவைசெய்கிறார். சிரியாவில் உள்ள ஒரு முக்கிய மனிதரான ரெய்ஸ் அகடோபஸ், என்னைப் பின்தொடர, தனது தற்போதைய தொழிலைக்கூட விட்டுவிட்டு வந்தவர், உங்களைப்பற்றி மிகவும் பெருமையாகப் பேசுகிறார். கர்த்தர் உங்களுக்குக் காட்டிய கிருபைக்காகவும், நீங்கள் எனக்குக் காட்டிய அன்பின் மூலம் என்னை ஏற்றுக்கொண்டதற்காகவும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால் அவர்களை மரியாதை குறைவாக நடத்தியவர்கள் இயேசுக்கிறிஸ்துவின் கிருபையால் மன்னிக்கப்படலாம். ட்ரோவாஸில் வதியும் சகோதரர்கள் உங்களை அன்போடு வணங்குகிறார்கள். மரியாதைக்கு உரிய அடையாளமாக என்னுடன் இருக்கும் எபேசஸ் மற்றும் ஸ்மிர்னா சபைகள் அனுப்பிய பர்க்ஸின் கரத்தால் இங்கிருந்து இதை எழுதுகிறேன். கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் திருச்சரீரம், ஆன்மா மற்றும் தூய ஆவி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், விசுவாசத்திலும் அன்பிலும் ஒற்றுமையிலும் வாழ அவர் உங்களுக்கு அந்த வெகுமதியை அளிப்பார். எங்கள் எல்லோருக்கும் பொதுவான நம்பிக்கையான கிறிஸ்து இயேசுவின் திருநாமத்தில் உங்களை வணங்கி, வாழ்த்தி விடைபெறுகிறேன்.