Ignatius of Antioch, Epistle to the Magnesians

புனித இக்னேசியஸ் மெக்னீசியர்களுக்கு எழுதிய கடிதம்

எங்கள் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனுடைய கிருபையால் ஆசீர்வதிக்கப்பட்ட, மாண்டருக்கு அருகிலுள்ள மெக்னீசியாவின் சபைக்கு, இக்னேஷியஸ் தியோபொரோஸ் ஆகிய நான் எழுதுகிறேன். பிதாவாகிய சர்வேசுரனிலும், இயேசுக்கிறிஸ்துவிலும் நீங்கள் என்றும் நிலைத்திருக்க நான் உங்களை வாழ்த்துகிறேன்.

1. கடவுள் மீதான உங்கள் அன்பின் சரியான ஒழுங்கை நீங்கள் பின் பற்றுவதை நான் கேள்விப்பட்டேன். ஆகையால், இயேசுக்கிறிஸ்து மீது மிகுந்த மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உங்களுடன் உரையாட முடிவு செய்துள்ளேன். கடவுளுக்கு இவ்வளவு அழகான பெயர் இருப்பதையிட்டு நான் பெருமை கொண்டுள்ளேன். என்னிடம் உள்ள பிணைப்புகளின் மூலமாக நான் சபைகளை பாராட்டுகிறேன். நம்முடைய நித்திய ஜீவனாகிய இயேசுக்கிறிஸ்துவின் சரீரத்திலும் ஆன்மாவிலும் தேவாலயங்கள் ஒன்றுபட வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன். அதாவது, எல்லாவற்றிற்கும் மேலாக, விசுவாசம் மற்றும் தர்மம் போன்றவற்றில் நிலைத் திருக்கவும், இயேசுவுடனும் பிதாவுடனும் ஒன்றிணைந்து, குறிப்பாக, உலக இளவரசனின் தேவையற்ற தாக்குதல்களில் இருந்து நாம் எம்மைப் பாதுகாத்துக் கொண்டால் மாத்திரமே நாம் கடவுளை அணுக முடியும் என்று உருகிப் பிரார்த்திக்கிறேன்.

2. உங்களது விசுவாசமுள்ள ஆயரான தேமஸ் மற்றும் பெருமதிப்பிற்குரிய குருமார், பாஸஸ் மற்றும் அப்பல்லோனியஸ் ஆகியோர் மற்றும் எனது சகாவான கோனகத் தொண்டர் சொசியன் ஆகியோரில் நான் உங்களைப் பார்க்க முடிந்தது. கடவுளால் அருளப்பட்ட கிருபையைப் போல அவர் ஆயருக்குக் கீழ்ப்படிகிறார். குருக்கள் இயேசுக்கிறிஸ்துவின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள் என்பதால் அவரின் செய்கைகளையிட்டு தொடர்ந்து நான் மிகவும் சந்தோஷப் படுகிறேன்.

3. உங்கள் ஆயர் வயதில் இளையவராக இருக்கும் காரணத்தால், அவரை மிக சாதாரணமாக நடத்துவது விரும்பத்தக்கதல்ல. பிதாவாகிய தேவனுடைய அதிகாரத்துக்கு உட்பட்டு, நீங்கள் அவரை சகல மரியாதையுடனும் நடத்த வேண்டும். இது நான் புரிந்து கொண்ட ஒன்று. பரிசுத்த குருமார் அதைப்பற்றி அறிந்துள்ளனர். அவருடைய இளமைத் தோற்றம் அவருக்குப் பயன்படாது என்றாலும், அவர் கடவுளால் அருளப்பட்ட ஞானத்தை உடையவர் என்பதனால் அவருக்குக் கீழ்ப் படிகிறார்கள். உண்மையில், அது அவருக்கு மட்டுமல்ல. உன்னதமான, ஆயருக்கெல்லாம் ஆயரும் மேய்ப்பருமான இயேசுக்கிறிஸ்துவின் நாமத்துக்கும், பிதாவின் நாமத்துக்கும் கீழ்ப்படிவது போன்றது. அவரை நீங்கள் மதிப்பதானால், எவ்வித சந்தேகங்களுக்கும் இடமின்றி நீங்கள் அவருக்குப் பணிந்து நடக்க வேண்டும். ஏனென்றால், ஒரு ஆயர் என்பவர் கண்களுக்குத் தெரியாத உருவங்களை கடந்து செல்ல முற்படுபவர் போல எண்ணி ஏமாற்றப் படுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில், அந்த நபர் ஒரு மனிதனாக அல்ல, எம் மனதில் குடிகொண்டுள்ள எண்ணங்களை அறிந்த கடவுள் போல் கருதப்பட வேண்டும்.

4. பெயருக்காக மட்டும் நாம் கிறிஸ்தவராக இருப்பதில் அர்த்தமில்லை. உண்மையிலும் நாம் கிறீஸ்தவர்களாக இருக்கத் தகுதிபெற்றவர்களாக இருத்தல் வேண்டும். ஆயரின் பெயரைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். எனினும் அவருடைய செயல்களில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அப்படிப்பட்ட மனிதர்களுக்கு உண்மையான மனசாட்சி இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் அவர்கள் பிரமாணம் செய்து கொண்டபடி ஒற்றுமையுடன் இருப்பதில்லை.

5. எல்லாவற்றிற்கும் முடிவு என்ற ஒன்று இருப்பதைப் போல, நாம் தெரிவு செய்வதற்கு சீவியம் மற்றும் மரணம் என்ற இரண்டு விடயங்கள் உள்ளன என்பது பற்றி நாங்கள் முன்மொழிந்தோம். நாம் அனைவரும் எமக்கு நியமிக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். இரண்டு வகையான பெறுமானங்கள் உள்ளன; ஒன்று கடவுளிடம் இருந்தும் மற்றொன்று உலக சீவியத்தில் இருந்தும். ஒவ்வொன்றும் அதன் சரியான வடிவத்தில் முத்திரை இடப்பட்டுள்ளன. அதுபோல், அவிசுவாசிகளுக்கும் உலகில் முத்திரை ஒன்று உள்ளது. தர்ம காரியங்களில் ஈடுபடுவோர், இயேசுக்கிறிஸ்து மூலமாக பிதாவாகிய சர்வேசுரனின் முத்திரை இருப்பதாக நம்புகிறார்கள். அவருடைய சித்தத்தின் மூலம் அவர் பொருட்டு இறப்பதைத் தேர்ந்தெடுக்காமல் எமது வாழ்க்கையை வாழ்வோமானால், அவருக்காக வாழும் வாழ்க்கை என்ற ஒன்று நம்மில் இல்லை.

6. நான் குறிப்பிட்ட நபர்கள்பால் நம்பிக்கையைக் கண்டேன். ஆகவே நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் உங்கள் முழு சமூகத்தையும் நேசிப்பதை நான் கண்டிருக்கிறேன். எனவே, கடவுளுடைய சித்தத்திற்கு ஏற்ப அனைத்தையும் செய்யும்படி நான் உங்களுக்கு அறிவுறுத் துகிறேன். கடவுளுக்கு நாம் கொடுக்கும் முன்னுரிமையைப் போலவே ஆயர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்போஸ்தலர்களின் போதனைகளில் குருக்களுக்கும் உதாரணம் காட்டப் பட்டுள்ளது. அதேபோல், (எனக்கு மிகவும் பிரியமானவர்களான) கோனகத் தொண்டர்களிடம் இயேசுக்கிறிஸ்துவின் சேவையை ஒப்படைத்துள்ளனர், அவர் நித்தியமாக பிதாவுடன் இருக்கிறார். இறுதியில் எமக்கு காட்சியளிப்பவர். ஆகவே தான், அந்த சேவை அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடவுளின் விருப்பப்படி நாம் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்போமாக. எம் அயலவரை சரீர இச்சையுடன் நோக்காது, இயேசுக்கிறிஸ்துவின் அன்பில் அவர்களைப் பார்த்து, எப்போதும் ஒருவரை ஒருவர் நேசித்து நடப்போமாக. பிரிவினையை ஏற்படுத்தும் எதுவும் உங்களிடையே காணப்படக் கூடாது. ஆனால் ஆயருடனும் உங்களுடன் உயர் பதவிகளில் இருப்பவர்களுடனும் ஒற்றுமையுடன் இருங்கள். அதன்மூலம் அழியாத வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியையும் படிப்பினையையும் நாம் காட்ட முயல்வோம்.

7. கர்த்தர் பிதாவாகிய சர்வேசுரனுடன் என்றும் ஒன்றித்து இருப்பதால், நீங்கள் பிதாவின் பிரசன்னம் இல்லாது, தனது சொந்த விருப்பத்தின் ஊடாகவோ அல்லது அப்போஸ்தலர்கள் மூலமாகவோ எதையும் செய்யக்கூடாது. அதேபோல் ஆயர் மற்றும் மதகுருமார்கள் அனுசரணை இல்லாமல் நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு எதையும் செய்யக்கூடாது. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நியாயமானதாகத் தோன்றுகிறது என்று நீங்கள் எதையும் செய்ய முயற்சிக்கக் கூடாது. ஆனால் ஒரே செபம், ஒரே வேண்டுதல், ஒரே மனம், ஒரே நம்பிக்கை, இயேசுக்கிறிஸ்துவில் கொண்ட ஒரே அன்பு, அதன் மூலம் கிடைக்கும் நிரந்தர மகிழ்ச்சி அனைவருக்கும் உண்டாவதாக. நீங்கள் அனைவரும் விரைவாக கடவுளின் ஆலயத்திற்கு, ஒரே பலிபீடத்திற்கு, இயேசுக்கிறிஸ்துவுக்குள் மட்டுமே ஒன்றித்திருக்க வாருங்கள். இயேசுக்கிறிஸ்துவானவர் ஒரே சர்வேசுரனான பிதாவிடமிருந்து வந்தவர். அவர் பிதாவோடு ஒன்றித்திருக்கிறார். அவர் தனது தந்தையிடம் மீண்டும் சென்று விட்டார்.

8. இப்போது நிலவும் பலனற்ற புதிய கோட்பாடுகள் அல்லது பழைய புனைகதைகளால் தவறாக வழி நடத்தப்பட வேண்டாம். ஏனென்றால், யூத பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும் எங்களுக்கு இரக்கம்காட்ட மறுப்பதால். பரிசுத்த தீர்க்கதரிசிகள் இயேசுக்கிறிஸ்துவின் படிப்பினையின்படி வாழ்ந்தார்கள். அதன் காரணமாகவே அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவருடைய கிருபையால், ஒரே கடவுள் மட்டுமே இருக்கிறார் என்ற முழுமையான நம்பிக்கையை அவர்கள் இழக்காதபடியால், அவர்களுக்கெதிரான சக்திகள் தூண்டி விடப்பட்டன. பிதாவான சர்வேசுரன் தம்முடைய குமாரனாகிய இயேசுக் கிறிஸ்துவின் மூலம் தன்னை வெளிப்படுத்தினார். மௌனமான விதத்தில் வெளிவரும் அவருடைய புனித வார்த்தைகளால் மட்டுமல்ல, அவரது இதர நற்கிரியைகளால் அவரை அனுப்பியவர் அவரிடம் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார்.

9. அப்படியானால், தீர்க்கதரிசிகள் ஆன்மாவினால் அவருடைய சீஷர்களாக இருந்ததையும், அவர்கள் தங்கள் இறைவனாக அவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததையும், பல பழங்கால வழக்கத்தில் ஊறிய பண்டைய காலத்தோர் புதிய நம்பிக்கையின் நிலைக்கு வந்துவிட்டதையும் பார்த்து, அவரின்றி நாம் எவ்வாறு வாழ முடியும் என்று அறிகிறோம். அத்தோடு அவர்கள் இனி யூத நடைமுறைகளை கடைப்பிடிக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால் கர்த்தருடைய நாள் எப்போதும் பரிசுத்தமானதாகவே இருக்கும். கர்த்தருடடைய மரணத்தின் மூலம் எமக்கு இரட்சணியத்தின் உயிர் அளிக்கப்பட நாள், அந்த நாள். இந்த தேவ இரகசியத்தை சிலர் நிராகரித்தாலும், நாம் அதன்மேல் அளவில்லாத நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். ஆகவே, நம்முடைய ஒரே ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் சீடர்களாக எம்மை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு விடா முயற்சியுடன் இருப்போம். மேலும், இந்த தேவ இரகசியத்தின் காரணமாக தீர்க்கதரிசிகள் அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு இருந்தார்கள். ஆகவே தான் கர்த்தர் மீண்டும் வந்து அவர்களை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

10. எனவே, அவருடைய கருணை, இரக்கம் பற்றி நாம் நன்றி அற்றவர்களாக இருக்கப் போவதில்லை. நாம் அவரை நடத்துவது போல அவர் எம்மை நடத்தினால், நமக்கு அழிவு என்பது திண்ணம். எனவே, நாங்கள் அவருடைய சீடர்களாகப் பரிணமிப்போம். கிறீஸ்தவ அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ நாம் கற்றுக் கொள்வோம். இது தவிர வேறு எந்த பெயரைத் தாங்கியோர் எவரும் கடவுளுக்கு நிகரானவர் இல்லை. ஆகவே பழைய மற்றும் மாசுபட்ட தோற்றத்தை நீக்கி, இயேசுக்கிறிஸ்துவின் புதிய தோற்றத்துக்கு இசைவாக மாறுவோம். உங்களில் எவரும் உங்கள் சுவையை இழக்காதபடி இருக்க, அவரிடம் சுவை பெற்ற உப்பாக இருங்கள். உங்கள் சுவைக்கு ஏற்பவே நீங்கள் தீர்ப்பிடப்படுவீர்கள். இயேசுக்கிறிஸ்து தனது பிரசங்கத்தில் யூதமதத்தின் நடைமுறைக்கு இரண்டு விஷயங்கள் ஒவ்வாது என்று கூறியிருந்தார். ஏனென்றால், கிறிஸ்தவம் யூத மதத்தை நம்பியிருக்கவில்லை, ஆனால் யூத மதம் கிறிஸ்தவத்தை நம்பியிருந்தது. இதனால் தான் அனைத்து மொழிகளிலும் பேசியவர்கள் ஒன்றாக இணைந்து கடவுளை நம்பி வழிபட்டார்கள்.

11. என் அன்பான சகோதர சகோதரிகளே, நீங்கள் எவரும் யூத மதத்தைப் பின்பற்றுவதை நான் அறிவேன் என்று நினைக்க வேண்டாம். இருப்பினும், நான் இந்த விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுடன் ஒப்பிடும் போது, வெற்றுக் கோட்பாட்டின் வலையில் சிக்காதீர்கள் என்று உங்களை எச்சரிக்க நான் தகுதி யற்றவன் என்று நினைக்கிறேன். போஞ்சியு பிலாத்து ஆளுனராக இருந்த காலத்தில் இடம் பெற்ற பிறப்பு, சேவை மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் முழுமையாக தெரிந்து வைத்துள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயங்கள் உண்மையாகவும் நிதர்சனமாகவும் உள்ளன. இவை எங்கள் ஒரே நம்பிக்கையாளரான இயேசுக்கிறிஸ்துவால் செய்யப்பட்டது. உங்களில் எவரும் இந்த நம்பிக்கையில் இருந்து விலகிப்போவதை கடவுள் தடுக்கக்கடவாராக.

12. மகிழ்ச்சியடைவீர்கள் என்று நம்புகிறேன். நான் உறுதியாக இருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் எனக்கில்லை என்பதே உண்மை. நீங்கள் ஒன்றும் இல்லாதவர்கள் இல்லை என்பதை நான் அறிவேன், ஏனென்றால் உங்களுக்குள் இயேசுக்கிறிஸ்து இருக்கிறார்; நான் உங்களை புகழ்ந்து பேசும் போது, முன்பைவிட நீங்களே உங்களை நொந்து கொள்வதை நான் அறிவேன் – ஏனென்றால், ‘நீதிமான் தான் செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்வான்.’

13. ஆகையால், நம்முடைய கர்த்தருடைய மற்றும் அவருடைய அப்போஸ்தலர் ஆகியோரின் கட்டளைகளை நன்றாக மனதிற் கொள்ளுங்கள். ‘விசுவாசத்திலும் அன்பிலும், சரீரத்தோடும் ஆன்மாவோடும், தேவகுமாரனின் பெயராலும், பிதாவின் பெயராலும் பரிசுத்த ஆவியின் பெயராலும் நீங்கள் எதைச் செய்தாலும், அது செழிக்கக் கடவதாக. ஆரம்பம் முதல் இறுதிவரை உங்கள் மரியாதைக்குரிய ஆயர்கள் மற்றும் மதகுருக்களுடன் நீங்கள் கொண்டுள்ள கௌரவம் செழிக்கட்டும் – அதற்கு தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் அதற்கு முழுமையிலும் தகுதியானவர்கள். இயேசுக்கிறிஸ்து மனித அவதாரத்தில் வாழ்ந்தபோது பிதாவுக்கு கட்டுப்பட்டதை போல, அப்போஸ்தலர்கள் இயேசுக்கிறீஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து போல, நீங்களும் உங்கள் ஆயர் மற்றும் குருவானவர்களிடம் ஒருவருக்கொருவர் கீழ்ப்படியுங்கள். இதில் உடல் மற்றும் ஆன்மா ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

14. நீங்கள் கடவுள் அருள் நிறைந்தவர் என்பதை நான் அறிந்திருப்பதால், நான் உங்களுக்கு சுருக்கமாக அறிவுறுத்தினேன். உங்கள் செபங்களில் என்னை நினைவு கூறுங்கள். அதனால் நான் கடவுளையும், சிரியாவில் உள்ள திருச்சபையையும் சென்றடையலாம். இதற்கு நான் தகுதியற்றவனாக இருந்தாலும், நான் சிரிய திருச்சபையின் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். சிரியாவில் உள்ள திருச்சபை உங்கள் உற்சாகமான செபத்தினால் என்மீது பொழியும் அருளைப் பெறவேண்டும் என்றால், உங்கள் அனைவரின் ஒருங்கிணைந்த மன்றாட்டும் கடவுளிடத்தில் இருந்து கிடைக்கும் அன்பும் எனக்குத் தேவை.

15. ஸ்மிர்னாவிலிருந்து நான் உங்களுக்கு எழுதுகின்றேன். எபேசியர்கள் உங்களுக்கு மரியாதை வணக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் உங்களைப் போலவே, தேவனுடைய மகிமையைப் பெற அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள். எனவே, ஸ்மிர்னா மக்களின் ஆயர் பரிசுத்த பொலிகார்ப் அவர்கள் மற்றும் பிற திருச்சபைகளும் இயேசுக்கிறிஸ்துவின் பெயரால் உங்களுக்குத் தலை வணங்குகின்றன. இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினால் கிடைக்கப் பெற்ற ஒற்றுமையை நீங்கள் பெற்று இறை அன்பில் என்றும் நிலைத்திருக்க உங்களை மனதார வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்.