கற்பித்தல்

தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மூலம் கர்த்தர் தேசங்களுக்கு அருளிய படிப்பினைகள்

1 ம் கட்டளை – முதல் கட்டளையும், இரண்டு வழிகளும்:

அந்த இரண்டு வழிகளாவன; ஒன்று சீவியம் மற்றையது மரணம், ஆனால் இந்த இரண்டு வழிகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. அப்படியானால், இதுதான் வாழ்க்கையின் நியதி. முதலாவதாக, உங்களைப் படைத்த கடவுளை நீங்கள் நேசிக்க வேண்டும்; இரண்டாவது, உங்களைப் போலவே உங்கள் அயலாரையும் நேசிக்க வேண்டும். உங்களுக்கு யாரும் செய்ய விரும்பாததை நீங்கள் மற்றவருக்கு செய்யக்கூடாது. இவை எமக்கு எடுத்துக் கூறுவது இது தான்: உங்களை சபிப்பவர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள், விரோதிகளுக்காகவும், எதிரிகளுக்காகவும் செபியுங்கள், உங்களைத் தூற்றுபவர்களுக்காக நீங்கள் விரதம் இருந்து செபியுங்கள். உங்களை நேசிப்பவர்களை நீங்கள் நேசிப்பதனால் உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி என்ன? பிற இனத்தவர் அவ்வாறு செய்யவில்லையா? ஆகவே உங்களை வெறுப்பவர்களை நீங்கள் நேசிப்பதன் மூலம், உங்களுக்கு எதிரிகள் என்று ஒருவரும் இருக்க மாட்டார்கள். சரீர மற்றும் உலக வாழ்வில் சந்திக்க நேரிடும் காம இச்சைகளில் இருந்து விலகி இருங்கள். யாராவது உங்களை உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், உங்கள் மற்றைய கன்னத்தையும் காட்டுங்கள். அப்போது நீங்கள் மிக உயர்ந்தவராக ஆவீர்கள். யாராவது உங்களை ஒரு மைல் தூரத்திற்கு கவர்ந்தால், அவருடன் இரண்டு மைல் தூரம் செல்லுங்கள். எவராவது உங்கள் ஆடைகளை எடுத்துக் கொண்டால், அவருக்கு உங்கள் உயர்ந்த மேலாடையையும் கொடுங்கள். உங்களுக்கு உரியதை யாராவது உங்களிடமிருந்து எடுத்துக் கொண்டால், அதைத் திரும்பக் கேட்காதீர்கள், ஏனென்றால் அது உண்மையில் உங்களால் ஆகாது. உங்களிடம் கேட்கும் யாராவது எதையேனும் கேட்டால் அதைக் கொடுங்கள், அதைத் திரும்பக் கேட்காதீர்கள்; எம் அனைவருக்கும் அருளப்பட்ட ஆசீர்வாதங்களை (இலவச வெகுமதிகளாக) நாமும் மற்றையோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதே நமது பிதாவின் சித்தமாக இருக்கிறது. கட்டளைப்படி கொடுப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் அவர்கள் குற்றம் செய்யாதவர்கள். தேவைகள் இன்றி பெற்றுக்கொள்ள விழைபவர்கள் யோக்கியர்கள் அல்லர்; தேவையுள்ளவர் பெற்றுக்கொண்டால், அவர் குற்றமற்றவராவார். அதே நேரம், தேவையற்றவர் எவரேனும் எதையேனும் பெற்றுக்கொள்வாரானால், அவர் ஏன், எதற்காகப் பெற்றார், என்பதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும். அவர் சிறைப்படுத்தப்பட்டு, அவர் செய்த காரியங்களைப் பற்றி ஆராயப்படுவார். அவர் கடைசி ஒரு சதம் வரையான அபராதத்தை திருப்பிச் செலுத்தும் வரை, அவரால் அங்கிருந்து தப்பிச்ச செல்ல முடியாது. இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டியதென்ன வென்றால், உங்கள் உள்ளங்கைகளில் வியர்வை வரும் வரை, யாருக்கு நீங்கள் தர்மம் கொடுக்க நினைக்கிறீர்களோ, அதை உங்கள் கைகளிலேயே வைத்திருங்கள்.

2ம் கட்டளை – இரண்டாவது கட்டளை: சாவான பாவம் தடைசெய்யப்பட்டுள்ளது:

இரண்டாவது கட்டளை எமக்குத் தரும் படிப்பினை யாதெனில், கொலை செய்தல், விபச்சாரம் செய்தல், சமபாலினப்புணர்ச்சி போன்ற இயற்கைக்கு விரோதமான செயல்கள், பாலியல் தொழில், திருடுதல், மந்திரம் மற்றும் மாந்திரீகம், கொடிவினை மற்றும் சூனியம் செய்தல் போன்ற தீய செயல்களை நீங்கள் கைவிடவேண்டும். அத்தோடு, கருச்சிதைவின் மூலமோ அல்லது பிறந்த குழந்தையையோ கொலை செய்வது போன்ற பாதகச் செயல்களை செய்யவே கூடாது. உங்கள் அயலவருக்கு உரியவற்றின் மேல் நீங்கள் ஆசைப்படக் கூடாது. பொய் சத்தியம் செய்வதையும், பொய் சாட்சி சொல்வதையும், அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசுவதையும், பழியுணர்ச்சியை மனதில் வைத்திருப்பதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும். நீங்கள் இரட்டை எண்ணம் கொண்ட கொள்கையற்றவராகவோ அல்லது இரட்டை நாக்குள்ளவர்கள் போல் பேச்சை மாற்றுபவர்களாகவோ இருக்கக்கூடாது. ஏனென்றால் இரட்டை நாக்குள்ளவர்கள் போல் பேச்சை மாற்றுபவர்கள் கொலை செய்யும் சதிகாரர்களாக இருப்பர். உங்கள் வார்த்தைகளில் பொய் அல்லது வெறுமை இருக்காமல் பார்த் துக்கொள்ள வேண்டும். ஆதலால் சொல்வதை செயலால் காட்ட வேண்டும். பேராசை கொள்ளுதல், கொள்ளையடித்தல் பாசாங்கு செய்தல், தீமையை அரவணைத்தல், பெருமிதம் கொள்ளுதல் போன்றவை முற்றாகக் கைவிடப்படல் வேண்டும். உங்கள் அயலவருக்கு எதிராக நீங்கள் தீய ஆலோசனை மேற்கொள்ளக் கூடாது. ஒருவரையும் வெறுத்து ஒதுக்கக் கூடாது. அதே நேரம், சில செய்கைகளை நீங்கள் கண்டிப்பவர்களாக இருக்க வேண்டும், அவர்களுக்காகவும், அவர்கள் செய்யும் செயல்களுக்காகவும் நாம் செபிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதேவேளை, நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையை விட, மற்றையோர்களை அதிகமாக நேசிக்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

3ம் கட்டளை – தடை செய்யப்பட்டுள்ள ஏனைய பாவங்கள்

என் பிள்ளைகளாகிய நீங்கள், அதனைத்துத் தீய காரியங்களிலிருந்தும், அவற்றின் அடிப்படைக் காரணிகளில் இருந்தும் எப்போதும் விலகி இருங்கள். கோபத்திற்கு ஆளாகாதீர்கள், ஏனென்றால் கோபம் கொலை செய்யக் கூட உங்களைத் தூண்டுகிறது. பொறாமைப்படவோ, சண்டையிடவோ, கோபப்படவோ வேண்டாம் ஏனென்றால் கொலைக்கான காரணிகள் இவ்வாறான செயல்களில் இருந்தே உருவாகின்றன. என் பிள்ளைகளாக இருப்பவர்கள், காம இச்சை கொண்டவர்களாக இருக்கக் கூடாது. காமம் என்பது விபச்சாரத்திற்கு வழி கோலுகிறது. இழிவான பேச்சுகளை தவிர்த்திடுங்கள் அதிக இறுமாப்பு கொண்டவர்களாகவும் இருக்காதீர்கள், ஏனென்றால் விபச்சாரங்கள் போன்ற துர்ச்செயல்கள் இவை போன்ற குணங்களில் இருந்து உருவாகின்றன. என் பிள்ளைகளான நீங்கள் , சகுனங்களை போன்றவற்றை நம்பாதிருங்கள். அவற்றிற்கு அவதானிகளாகவும் இருக்காதீர்கள். ஏனெனில் அவை விக்கிரகங்களை வணங்க உங்களை இட்டுச்செல்லும். மாந்திரீகம் செய்வது, ஜோதிடம் பார்ப்பது, பில்லி சூனியங்கள் மூலம் உங்களை சுத்திகரிக்க முயலாதீர்கள். இவை போன்றவற்றைப் பார்ப்பதைக் கூட தவிர்த்திடுங்கள். ஏனென்றால் இவை யாவும் விக்கிரகங்களை வணங்க உங்களை இட்டுச்செல்லும். என் பிள்ளைகளான நீங்கள் பொய் சொல்வதை அடியோடு விட்டு விடுங்கள், ஏனென்றால் பொய் திருட்டுக்கு வழிவகுக்கிறது. பணப்பேராசைகளில் இருந்தும் வீண் செருக்குகளில் (திமிர்) இருந்தும் விடுபடுங்கள். ஏனெனில் அவை திருட்டுக்கு உங்களை இட்டுச்செல்லும். என் பிள்ளைகளான நீங்கள் அதிக முணுமுணுப்பைத் தவிருங்கள். ஏனென்றால் அது தேவ தூஷணத்திற்கு வழிவகுக்கிறது. சுயநலம் அல்லது தீய எண்ணம் கொண்டவராக இருக்காதீர்கள், ஏனென்றால் தேவ தூஷணம் போன்ற அவதூறுகள் இவற்றில் இருந்து தான் உருவாகின்றன. மாறாக, சாந்த குணமுள்ளவர்களாகவும் தாழ்ச்சியுடனும் செயல்படுங்கள் ஏனென்றால் பொறுமைசாலிகளே பூமியை ஆளக்கூடியவர்கள். நீண்ட பொறுமையுடனும் இரக்கக் குணத்துடனும் செயலாற்றுங்கள். கபடமற்றவராகவும், மென்மையாகவும், நல்லவராகவும் இருங்கள், நீங்கள் கேட்கும் வார்த்தைகளையிட்டு எப்போதும் பயபக்தியுடன் இருங்கள். நீங்கள் உங்களை உயர்த்திக் கொள்ளவோ, உங்கள் மனதில் அதிக நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவோ கூடாது. உங்கள் ஆத்மா உயர்ந்தவர்களுடன் இணைக்கப்பட மாட்டாது, மாறாக, நியாயமான மற்றும் தாழ்ந்தவர்களுடன் உறவாடவே அது இணைக்கப் பட்டிருக்கும். உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் அது நன்மைக்காக என்று நினைத்துக் கொள்ளுங்கள், கடவுளைத் தவிர வேறு யார் மூலமாகவும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை.

4ம் கட்டளை – ஏனைய கட்டளைகள் பற்றிய படிப்பினை

என் பிள்ளைகளே, கடவுளுடைய வார்த்தையை உங்களிடம் பேசுபவரை அல்லும் பகலும் ஞாபகத்தில் வைத்திருங்கள், நீங்கள் கர்த்தரை மதிப்பது போலவே அவரையும் மதித்திருங்கள். கடவுளுடைய ஆட்சி பற்றி எங்கு கூறப்பட்டாலும், அங்கே கர்த்தர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பரிசுத்தவான்களையும் அவர்களின் வார்த்தைகளையும் நாள்தோறும் தேடுங்கள். அவற்றில் நிலைத்திருப்பதற்காக அனுதினமும் அவற்றை நினையுங்கள். பிரிவினைக்காக காத்திருப்பதை விட்டு, சமாதானத்திற்காக உழைப்பவர்களை அழைத்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நீதி தவறாமல் தீர்ப்பிடுங்கள், நீதி, நியாயத்தை மீறுபவர்களை மதிக்க வேண்டாம். எதையும் அதன் உண்மை நிலையை (இருக்கும் அல்லது இல்லை என்பதை) அறியும் முன் தீர்மானிக்காதீர்கள். பெறுவதற்கு கைகளை நீட்டுவதைத் தவிர்த்து, கொடுக்கும் போது கைகளை பின்னுக்கு இழுக்காமல் முன்னாள் நீட்டுவது சாலச் சிறந்தது. உங்களிடம் இருப்பதை, உங்கள் கைகளால் நீங்கள் கட்டிக்கொண்ட பாவங்களுக்கு பரிகாரமாக நீங்கள் வழங்க வேண்டும். கொடுக்க தயங்காதீர்கள், கொடுக்கும்போது அது பற்றிய புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். அதற்கான வெகுமதியை கிராமமாகத் திருப்பிச் செலுத்துபவர் யார் என்பதை நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள். விருப்பமுள்ளவரிடமிருந்து விலகிச் செல்ல எத்தனிக்காதீர்கள். மாறாக, எல்லாவற்றையும் உங்கள் சகோதரருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அனைத்தும் உங்களது என்று சொந்தம் கொண்டாடாதீர்கள். நீங்கள் அழிவில்லாதவற்றில் பங்காளிகளாக இருப்பீர்களானால், அழிவில் அவற்றின் பங்கு எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை நினையுங்கள். உங்கள் மகன் அல்லது மகளை உங்கள் அரவணைப்பில் வைத்திருங்கள், அவர்களுடைய இளமை பருவத்திலிருந்தே அவர்களுக்குக் கடவுளிடம் பயந்து நடக்கும் நற்பண்புகளைக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் வழிபடும் கடவுளை நம்பும் உங்கள் சேவகர்கள் அல்லது பணிப்பெண்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடனான எந்தக் கட்டளையையும் இடாதிருங்கள். அப்படி நடக்கும் பட்சத்தில், அவர்கள் எல்லோருக்கும் மேலான கடவுளுக்கு அஞ்சமாட்டார்கள். அவர் வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்ப எம்மை அழைக்கவில்லை, மாறாக, ஆவியானவரால் தயார் செய்யப்பட்டவர்களையே அழைக்கிறார். அடிமைப்பட்டவர்களே, நீங்கள் ஒரு வகையில் அடக்கத்தோடும் பயத்தோடும் கடவுளைப் போல் எண்ணி உங்கள் எஜமானர்களுக்கு அடங்கியிருப்பீர்கள். எல்லாவித போலித்தனம் மற்றும், கர்த்தருக்கு விருப்பமற்ற எதிலும் ஈடுபடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். கர்த்தருடைய கட்டளைகளை நீங்கள் எந்த வகையிலும் கைவிடாதீர்கள். நீங்கள் பெற்றுக் கொண்டதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், அதில் எதையும் சேர்க்கவோ அல்லது அதிலிருந்து எதையும் நீக்கி விடவோ வேண்டாம். தேவாலயத்தில் கடவுள் முன் நீங்கள் செய்த பாவங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் அழுக்குப்படிந்த மனசாட்சியுடன் செபம் செய்வதை நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காதீர்கள். இதுதான் நாம் வாழும் வாழ்க்கையின் நியதி.

5ம் கட்டளை – மரணத்திற்கான பாதை பற்றிய எச்சரிக்கை

மரணத்திற்கான பாதை பற்றி சொல்வோமானால்; முதற்கண் அது தீயதும் சபிக்கப்பட்டதும் ஆகும். கொலை, விபச்சாரம், காமம், பாலியல் மோகம், திருட்டு, விக்கிரக வழிபாடு, மந்திரம், பில்லி சூனியம், கற்பழிப்பு, பொய் சாட்சி சொல்தல், போலித்தனம், இரட்டை குணம், வஞ்சகம், வீண் செருக்கு, தற்பெருமை, ஓழுக்கக்கேடு, சுயநலம், பேராசை, இழிந்த பேச்சு, பொறாமை, அதீத நம்பிக்கை, இறுமாப்பு; நன்மைகளை ஏற்றுக்கொள்ளாமை, சத்தியத்தை வெறுத்தல், பொய்யை நேசித்தல், நீதியின் வெகுமதியை அறியாமை, பிளவை உண்டு பண்ணுதல் மற்றும் நீதியான தீர்ப்பை விமர்சித்தல், நல்லவற்றைப் பார்க்காமல், தீயவற்றைப் பார்ப்பது போன்றவை இவற்றில் அடங்குகின்றன. இப்படிப்பட்டவர்களிடம் இருந்து சாந்தமும் சகிப்புத்தன்மையும் வெகு தொலைவுக்குப் போய் விடுகின்றன. ஆடம்பரத்தை விரும்புதல், பழிவாங்குதல், ஏழைகள் மேல் இரக்கம் காட்டாமை, துன்பப்பட்டவர்களுக்காக பாடுபடாமை, தம்மைப் படைத்தவர் யார் என்பது பற்றி அறியாமை, குழந்தைகளைக் கொல்பவர்கள், கடவுளின் படைப்புக்களை நிர்மூலம் செய்தல், தம்மை நேசிப்பவர்களிடம் இருந்து விலகி இருத்தல், துன்பத்தில் இருப்போரை மேலும் உபத்திரவப்படுத்தல், செல்வந்தர்களுக்காக வாதிடல், ஏழைகளுக்கும் பாவத்திற்குட்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்காமல் செய்தல் போன்ற பாதகச் செயல்களை, குழந்தைகளே, நீங்கள் என்றும் செய்யாது அவற்றில் இருந்து தூர விலகியிருங்கள்.

6 ம் கட்டளை – தவறான ஆசிரியர்களும் சிலைகளுக்கு உணவளித்தலும்

கடவுள் உங்களுக்கு அருளியுள்ள படிப்பினையைத் தவிர, உங்களை வேறு எவரும் தவறாக வழிநடத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கர்த்தருடைய சிலுவையின் முழு பாரத்தையும் உங்களால் தாங்கிக்கொள்ள முடிந்தால், நீங்கள் பேறுபெற்றவர்களாக இருப்பீர்கள். எனினும், இதை உங்களால் செய்ய முடியாவிட்டால், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். உணவைப் பொறுத்தவரை, நீங்கள் முடிவு செய்யுங்கள் . ஆனால் அவற்றை சிலைகளுக்கு படைப்பதை எதிர்ப்பது மட்டுமன்றி, மிகவும் கவனமாகவும் இருங்கள். அது மாண்டு போன கடவுள்களுக்கு சேவை செய்வது போன்றதாகும்.

7ம் கட்டளை – ஞானஸ்நானம் பற்றிய அறிவுரை

ஞானஸ்நானம் கொடுக்கும் போது, இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்ற நியதி உண்டு. அனைத்து மன்றாட்டுக்களையும் முதலில் சொன்னபின்பு, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் குளிர்ந்த, தீர்த்த நீரில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் உங்களிடம் தீர்த்த நீர் இல்லை என்றால், மற்றைய சாதாரண தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்கலாம்; குளிர்ந்த நீரில் கொடுக்க முடியாவிட்டால், இளம் சூடான நீரிலும் ஞானஸ்நானம் கொடுக்கலாம். உங்களிடம் மேற்கூறிய எதுவும் இல்லாதவிடத்து, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் மூன்று முறை தலையில் தண்ணீரை ஊற்றி ஞானஸ்நானம் கொடுத்தலை நிறைவேற்றலாம். ஆனால், ஞானஸ்நானம் கொடுக்கப்பட முன், ஞானஸ்நானம் கொடுப்பவர் விரதம் இருத்தல் வேண்டும். அவரால் முடியாத பட்சத்தில், ஞானஸ்நானம் பெறுபவர் அல்லது வேறு ஒருவரால் கூட அதை செய்ய முடியும். ஆனால் ஞானஸ்நானம் பெற்றவர், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே விரதம் இருக்கும்படி உத்தரவிடப்பட வேண்டும்.

8ம் கட்டளை – விரதம் இருந்து செபம் (கர்த்தருடைய செபத்தை) செய்தல்

எப்போதும் நீங்கள் போலி வேடதாரிகளுடன் விரதம் இருத்தல் ஆகாது. ஏனென்றால் அவர்கள் வாரத்தின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது நாளில் மட்டுமே விரதம் இருக்கிறார்கள். மாறாக, நான்காம் நாள் மற்றும் ஆயத்த நாளில் (வெள்ளிக்கிழமை) விரதம் இருங்கள். போலி வேடதாரிகள் போல செபிக்க வேண்டாம், மாறாக, கர்த்தர் தம்முடைய நற்செய்தியில் கட்டளையிட்டது போல் இவ்வாறு செபியுங்கள்:
“பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் , எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாம் பொறுப்பது போல, எங்கள் பாவங்களையும் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாமல், தீமைகளின் இருந்து (அல்லது, தீயவர்களிடமிருந்து) எங்களை இரட்சித்தருளும்; அரசும், வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே. ஆமென்” என்று இதை ஒவ்வொரு நாளும் மூன்று முறை செபியுங்கள்.

9ம் கட்டளை – திவ்விய நற்கருணை ஒப்புக்கொடுத்தல்

நற்கருணை பற்றி நாம் கூறும் போது, முதலில் கிண்ணத்தைப்பற்றிய எமது நன்றியறிதலை இவ்விதமாக ஒப்புக்கொடுப்போம்: “பிதாவே, உமது அடியோனாகிய தாவீதின் பரிசுத்த திராட்சை இரசத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம் உமது அடியோனாகிய இயேசுவின் மூலமாக நீர் உம்மை எமக்கு அறிமுகப்படுத்தினீர். அவர் மூலம் எங்களுக்கு வாழ்வையும் மீட்பையும் அருளினீர். ஆகவே உமக்கு என்றென்றும் மகிமையும், மாட்சிமையும் உண்டாகக்கடவதாக”.

அப்பத்தைப் பிட்டு அதனை ஒப்புக்கொடுக்கும் போது…

“பிதாவே, உமது அடியோனாகிய இயேசுவின் மூலமாக நீர் உம்மை எமக்கு அறிமுகப்படுத்தினீர். அவர் மூலம் எங்களுக்கு வாழ்வையும் மீட்பையும் அருளினீர். ஆகவே உமக்கு நாம் நன்றி கூறுகிறோம்; உமக்கு என்றென்றும் மகிமையும் மாட்சிமையும் உண்டாகக்கடவதாக”.

“இந்த உடைந்த அப்பம் துண்டுகளாய் மலைகள் மீது சிதறுண்டு, மீண்டும் ஒன்று கூடியது போல், உம்முடைய திருச்சபையானது இந்தப் பூமியின் அனைத்து முனைகளிலிருந்தும் வந்து உம்முடைய இராச்சியத்தில் ஒன்றுகூடட்டும்”.

“எம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக, உமக்கு என்றென்றும் மகிமையும் மாட்சிமையும் உண்டாவதாக”.

கர்த்தருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிராவிட்டால், உங்களில் எவரும் நற்கருணையை உட்கொள்ளவோ, அல்லது பரிசுத்த இரசத்தை அருந்தவோ கூடாது. இதைப் பற்றி கர்த்தர் சொன்ன போது, “பரிசுத்தமான எதையும் நாய்களுக்கு கொடுக்காதீர்கள்” என்று அருளினார்.

10ம் கட்டளை – நற்கருணை பெற்றபின் சொல்லும் செபம்

நீங்கள் ஆன்மாவுக்கான உணவில் நிறைவு பெற்ற பின், இவ்வாறு நன்றி செலுத்துங்கள்.

“பரிசுத்த பிதாவே, எங்கள் இதயங்களில் உமது வாசஸ்தலத்தை அமைத்த உமது திருநாமத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது அடியோனாகிய இயேசுவின் மூலம் நீர் எங்களுக்கு அருளிய உமது அழியாப்புகழ் ஆகியவற்றிற்காகவும் உமக்கு என்றென்றும் மகிமை உண்டாகக் கடவதாக. சர்வவல்லமையும், நித்தியருமான சர்வேசுரா, உம்முடைய திருநாமத்தினால் அனைத்தையும் படைத்தீர். மனிதர்களின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்கு உணவும் பானத்தையும் வழங்கினீர். அதற்காக அவர்கள் உமக்கு நன்றி செலுத்தக் கடவார்களாக. ஆனால் எமக்கு உமது அடியோன் மூலம் ஆன்மாவுக்கான உணவையும், பானத்தையும், நித்திய ஜீவனையும் இலவசமாகக் கொடுத்தீர். அனைத்திற்கும் மேலாக, நீர் சர்வத்துக்கும் வல்லவர் என்று நாம் உமக்கு நன்றி கூறுகிறோம். உமக்கு என்றென்றும் மகிமை உண்டாகக்கடவதாக. ஆண்டவரே, உம்முடைய பரிசுத்த திருச்சபையை, நினைவுகூர்ந்தருளும். அதை அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுவித்து, உமது அன்பினால் பரிபூரணமடையச் செய்தருளும். உம்முடைய இராச்சியத்தை நான்கு திசைக் காற்றிலிருந்து ஒன்று சேர்த்து, அதைப் புனிதமாக்கியருளும். ஏனெனில் அரசும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உம்முடையதே. கிருபை வரக்கடவதாக, அது இந்த உலகத்தைக் கடந்து செல்லக்கடவதாக. தாவீதின் (குமாரனுக்கு) கடவுளுக்கு ஹோசன்னா! பரிசுத்தராக எவரும் இருந்தால், அவர் வரட்டும். அவ்வாறு இல்லாதவர்கள் மனந்திரும்பி வரட்டும்! (Maranatha) மரணநாதா! ஆமென்.”

தீர்க்கதரிசிகள் அவர்கள் விரும்பும் வரை நன்றி செலுத்த அனுமதிக்கவும்.

11ம் கட்டளை – ஆசிரியர்கள், அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் பற்றிய தெளிவுரை

எவர் வந்து, முன்பு சொல்லப்பட்ட யாவற்றையும் உங்களுக்கு கற்பிக்கிறாரோ அவரை ஆசிரியராய் ஏற்றுக்கொள்ளுங்கள். அதேவேளை, அந்த ஆசிரியரே வேறொரு கோட்பாட்டைக் கற்பித்தால், அவரை நீங்கள் புறக்கணியுங்கள். ஆனால் நீதியையும் கர்த்தருடைய அறிவையும் அவர் போதித்தால், அவரை இறைவனுக்கு சமமாகப் போற்றுங்கள். ஆனால் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் குறித்து, நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுங்கள். உங்களிடம் வரும் ஒவ்வொரு அப்போஸ்தலரையும் கர்த்தராகிய எண்ணி ஏற்றுக்கொள்ளவும் ஆனால் தேவை ஏற்பட்டால் அன்றி, அவர் ஒரு நாளைக்கோ அல்லது இரண்டு நாள்களுக்கு மேல் தங்க மாட்டார்; அவர் மூன்று நாட்கள் தங்கினால், அவர் போலி தீர்க்கதரிசி ஆவார். அப்போஸ்தலர் அங்கிருந்து செல்லும்போது, அவர் மற்றுமொரு தங்குமிடத்தை அடையும் வரை, அப்பத்தைத் தவிர வேறொன்றையும் எடுத்துக் கொண்டு போகக் கூடாது. அவர் பணம் கேட்பாரானால், அவர் போலி தீர்க்கதரிசி ஆவார். ஆவியின் வல்லமையால் பேசும் எந்தவொரு தீர்க்கதரிசியையும் நீங்கள் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பளிக்கவோ கூடாது; எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு, ஆனால், இந்தப் பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது. ஆவியின் பெயரால் பேசும் எல்லா மனிதரும் தீர்க்கதரிசிகள் அல்லர்; அவர்கள் கர்த்தருடைய வழியை பின்பற்றினால் மட்டுமே தீர்க்கதரிசிகள் ஆவர். ஆகையால், அவர்களுடைய நடவடிக்கைகளைக் கொண்டே அவர்கள் உண்மையான தீர்க்கதரிசியா அல்லது பொய்யான தீர்க்கதரிசியா என்று அறிந்து கொள்ளலாம். ஆவியின் பெயரால் உணவை கொண்டு வரக் கட்டளையிடும் எந்தவொரு தீர்க்கதரிசியும் அதை உண்பதில்லை, அப்படியாயின், அவர் ஒரு போலி தீர்க்கதரிசியாவார். சத்தியத்தைக் கற்பித்தும், அதை பின்பற்றாத எந்தவொரு தீர்க்கதரிசியும் போலியான தீர்க்கதரிசியாவார். உண்மையாக நிரூபிக்கப்பட்ட எந்தவொரு தீர்க்கதரிசியும், உலகின் திருச்சபையின் பாதுகாக்கப்பட்ட புனிதத்தன்மையை காத்திட சேவை செய்தும், அவர் செய்வதை மற்றவர்களுக்கு கற்பிக்கவில்லை என்றால், அவர் உங்களது தீர்ப்புக்கு உட்படமாட்டார், ஏனென்றால் அவருடைய தீர்ப்பு தேவனிடத்தில் இருக்கிறது. பண்டைய காலத்து தீர்க்கதரிசிகளும் அவ்வாறே செய்தனர். ஆனால், ஆவியின் பேரால் யார் என்ன சொன்னாலும், பணமோ அல்லது வேறு எதையோ கொடுங்கள் என்று கேட்டாலோ, நீங்கள் அவருக்குச் செவிசாய்க்க வேண்டாம். ஆனால், தேவையுள்ள மற்றவர்களுக்காகக் கொடுக்கும்படி அவர் உங்களிடம் கேட்டால், யாரும் அவரை நீங்கள் விசாரிக்கவோ, தீர்ப்புக்குட்படுத்தவோ வேண்டாம்.

12ம் கட்டளை – கிறிஸ்தவர்களை வரவேற்றல்

கர்த்தருடைய நாமத்தினால் வரும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுங்கள், பின்னர் அவர்களைப்பற்றி உறுதி செய்து அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு வலம் மற்றும் இடம் பற்றிய புரிந்துகொள்ளுதல் இலகுவாக இருக்கும். வருபவர் ஒரு வழிகாட்டியாக இருப்பாரானால், உங்களால் இயன்றவரை அவருக்கு உதவுங்கள்; ஆனால் முக்கிய தேவைகள் இல்லாவிட்டால், அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் உங்களுடன் இருக்க மாட்டார். அப்படியும் அவர் உங்களுடன் தங்க வேண்டிய தேவை ஏற்பட்டால்; அவர் ஒரு கைவினைஞராக இருக்கும் பட்சத்தில், அவர் உழைத்து அந்த உழைப்பின் மூலம் உண்ண வேண்டும். அதே நேரம், அவருக்கு தொழில் இல்லையென்றால், நீங்கள் விளங்கிக் கொண்டதன்படி, அவர் ஒரு கிறிஸ்தவராக இருக்கும் பட்சத்தில், அவர் உங்களுடன் வெட்டியாய் வாழமாட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் அவர் அவ்வாறு செய்ய விரும்பாத பட்சத்தில், அவர் கிறிஸ்துவை தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்துபவர். இப்படியாகப்பட்ட நபர்களையிட்டு நீங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

13ம் கட்டளை – தீர்க்கதரிசிகளின் உதவிகள்

ஆனால் உங்களிடையே வாழ விரும்பும் ஒவ்வொரு உண்மையான தீர்க்கதரிசியும் நீங்கள் காட்டும் ஆதரவுக்கு தகுதி உடையவராவார். ஆகவே, ஒரு உண்மையான ஆசிரியராக, பணியாளராக, அவர் உங்களது ஆதரவுக்கு தகுதியானவர் ஆகிறார். ஆகவே, ஒவ்வொரு பழமும், பழரசம் தயாரிக்கப்படும் முன், அவை நிலத்தில் போடப்பட்டு எருதுகள் மற்றும் செம்மறிகளால் மிதியுண்ட பிறகே தயாரிக்கப்படுகின்றன அவற்றை நீங்கள் எடுத்து தீர்க்கதரிசிகளுக்கு கொடுக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் உங்கள் பிரதான ஆசாரியர்கள் ஆவார்கள். அப்படி தீர்க்கதரிசிகள் எவரையும் காணாதவிடத்து, நீங்கள் அவற்றை ஏழைகளுக்கு கொடுங்கள். நீங்கள் உங்கள் அறுவடையின் முதல் பங்கினை , அல்லது முதல் பழத்தை எடுத்து கட்டளையில் கூறியுள்ளபடி கொடுங்கள். ஆகவே, நீங்கள் ஒரு ஜாடியில் இருந்து மதுரசத்தையோ அல்லது கிண்ணத்தில் இருந்து எண்ணெயையோ திறக்கும்போது, முதல் பங்கினை எடுத்து தீர்க்கதரிசிகளுக்குக் கொடுங்கள். உங்கள் பணம் (வெள்ளி) மற்றும் உடைகள் போன்ற எந்தவொரு உடைமையையோ அல்லது முதல் கனியையோ, அது உங்களுக்கு நல்லது என்று தோன்றினால், கட்டளையில் கூறியுள்ளபடி கொடுங்கள்.

14ம் கட்டளை – கடவுளின் நாளில் கிறீஸ்தவர்களின் திருப்பலி ஒன்றுகூடல்

ஒவ்வொரு கடவுளின் நாளிலும் நீங்கள் ஒன்றுகூடி, நீங்கள் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி மன்றாடிய பின், அப்பத்தைப் பிட்டு, நன்றி செலுத்துங்கள். நீங்கள் ஒப்புக்கொடுக்கும் திருப்பலி தூய்மையானதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒப்புக்கொடுக்கும் திருப்பலி மாசற்றதாக இருக்கும் பொருட்டு, சக ஊழியருடன் முரண் பட்டிருக்கும் உங்கள் சகா, சமரசம் செய்துகொள்ளும் வரை, அவர் உங்களுடன் சேர்ந்து வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது பற்றி கர்த்தர் கூறுகையில்; “எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நீங்கள் எனக்கு ஒப்புக்கொடுக்கும் பலி தூய்மையாய் இருக்க வேண்டும்; ஏனெனில் நானே அரசருக்கெல்லாம் பெரிய அரசன்” என்று கர்த்தர் சொல்லுகிறார், “எனது திருநாமம் உலகெங்கும் மிக மேலாகப் போற்றப்படுகிறது”.

15ம் கட்டளை – ஆயர்கள், கோனகத் திருத்தொண்டர்கள் மற்றும் கிறீஸ்தவ விரோதத்துவம் பற்றிய தெளிவுரை

ஆகையால், கடவுளுக்கு சேவை செய்யத் தகுதியான ஆயர்கள் மற்றும் கோனாகத் திருத்தொண்டர்களை நியமிக்கவும், செல்வந்தர்களை அல்ல, சாந்த குணமுள்ளவர்கள், உண்மையுள்ளவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை நியமிக்கவும்; ஏனென்றால் அவர்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் போதகர்கள் ஆற்றிய சேவையை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டவர்களாவர். ஆகையால், நீங்கள் அவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டாம், ஏனென்றால் அவர்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் போதகர்கள் போன்றே மதிக்கப்பட வேண்டியவர்களாவர். நற்செய்தியில் நீங்கள் அறிந்து கொண்டதைப்போல் நீங்கள் யாரையாவது கண்டிக்க நேர்ந்தால், அதைக் கோபத்தோடு செய்யாமல், சமாதானமான முறையில் செய்யுங்கள். ஒருவர் மற்றயோரிடம் தவறாக நடந்து கொள்ளும் பட்சத்தில், அவர் மனந்திரும்பும் வரை நீங்கள் அதைப்பற்றி எதையும் அவரிடம் பேசவோ அல்லது அவரிடம் அதைப்பற்றி எதையும் கேட்பதையோ தவிர்த்திடுங்கள். ஆகையால், உங்கள் செபங்களும், தான தர்மங்களும் மற்றும் உங்கள் நடவடிக்கைகள் யாவும் நமது கடவுளின் நற்செய்தியில் உள்ளதைப் போலவே இருக்க வேண்டும்.

16ம் கட்டளை – கர்த்தரின் வருகைக்காக விழிப்புடன் இருத்தல்

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் விளக்குகளின் ஒளியைத் தணிக்கவோ, உங்கள் இடைக்கச்சைகளை தளர்த்தவோ முயல வேண்டாம்; ஆனால் தயாராக இருங்கள், ஏனென்றால் கர்த்தர் வரும் நேரம் உங்கள் ஒருவருக்கும் தெரியாது. அடிக்கடி ஒன்று கூடி உங்கள் ஆன்மாவுக்குப் பொருத்தமானவற்றைத் தேடுங்கள், இறுதி நேரத்தில் நீங்கள் முற்றிலும் பண்பட்டவராக இல்லாவிட்டால், உங்கள் விசுவாசத்தின் முழுப் பங்கும் உங்களை வந்தடையாது. கடைசி நாட்களில் போலித் தீர்க்கதரிசிகளும் ஊழல் செய்வோரும் பல்கிப் பெருகிடுவர், ஆடுகள் ஓநாய்களாக உருவெடுக்கும், அன்பு பகையாக மாறும்; அநீதியும், அக்கிரமமும் அதிகரிக்கும் போது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுத்து, நிந்தித்து, துரோகிகளாய் மாறுவர். பின்னர் உலகில் ஒருவன் தேவசுதன் போலத் தோன்றி, அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பான் உலகம் அவருடைய ஆட்சியின் கீழ் வந்துவிடும் ஆரம்பத்தில் இருந்து இதுவரை நடைபெறாத அநீதியான காரியங்களைச் செய்வான். அப்பொழுது மனிதர்களின் படைப்பு தீச்சுவாலைக்கு மத்தியில் சோதனைக்குட்படுத்தப்படும். பலர் தட்டுத் தடுமாறி, இறுதியில் அழிந்து போய் விடுவார்கள். ஆனால் விசுவாசத்தின் காரணமாக இவ்வாறான நிந்தனைகளை சகித்துக்கொள்பவர்கள், சாபத்தின் பிடியில் இருந்து மீட்கப்படுவார்கள். இவை அனைத்திற்கும் பின்னர், சத்தியத்தின் அறிகுறிகள் தென்படும் முதலில், பரலோகத்தில் கதவுகள் விரிந்து திறக்கப்படும் அடையாளம். பின்னர் எக்காளத்தின் ஒலியும் கேட்கும். மூன்றாவதாக, மரித்தோரின் உயிர்த்தெழல்; எல்லோரினதும் இல்லாவிட்டாலும், கூறப்பட்டபடி: “கர்த்தர் வருவார், அவருடைய அனைத்து பரிசுத்தவான்களும் அவருடன் வருவார்கள்.” அப்போது கர்த்தர் பரலோகத்தில் இருந்து மேகங்களின் ஊடாக வருவதை இந்த உலகம் காணும்.